பால் வாளி...

எங்கள் வீட்டின் வருமானத்தின் ஒரு சிறு பகுதி பாலும் பாலை சார்ந்தும் இருந்தது. பாலின் தரத்தை கவனத்தில் கொண்டு எங்கள் வீட்டு பால் சில கடைகளில் பிரதான இடம் பிடித்து இருந்தது... தரம் மட்டும் அல்ல நேரம் தவறாமையும் கூட... காலை 5 மணிக்கு என்றால் 5 மணிக்கு பால் கடையில் இருக்கும், காரணம் என் தத்தா அரசூரார், இந்த வலை தலத்தின் கதாநாயகன். 4 மணிக்கு எழுந்து பால் கறந்து... எனது மூத்த சகோ மூலம் பட்டுவாட செய்யப்படும்.

இது... பால் வாளியும் அம்மாவசையும்...

இப்படி பால் கொண்டு போகும் வாளி திரும்பி வரும்போது அதில் பண் அல்லது "ஆட்டுகால் கேக்" (மைதாவும் + ஜீனி-யில் செய்யப்பட்ட ஒரு திண்பண்டம்) உடன் திரும்பிவரும், அது வீட்டில் கடைக்குட்டியான எனக்கு, அது கடைசியில் என் சகோ-க்களால் முற்றுகையிடப்பட்டு ஒரு பகுதி எனக்கு வந்து சேரும். இதுல அம்மாவாசை எங்க வந்துதுன்னு பார்க்குறீங்களா? அம்மாவாசை அன்று நாங்கள் கொடுக்கும் பாலுக்கு கடைகாரர் பணம் கொடுக்க மாட்டர், பதிலுக்கு ஸ்வீட்ஸ் (ஓ இதுதான் பண்டமாற்று முறை போலும்) கிடைக்கும்.

ஆக அம்மாவாசை-ன்னா எங்களுக்கு கருப்பு தினம் இல்லை இனிப்பு தினம்.

இது... பால் வாளியும் ரயிலடியும்...

நான் வளர்கிறேனே மம்மி... பால் குடிச்சிகிட்டு இருந்த நான் வளர்ந்து பால் வாளி தூக்கும் நாட்கள்... பல நாட்கள் கோபப்பட்டு இருக்கிறேன்... ஏன் இந்த வீட்டில் வந்து பிறந்தோம் என்று, குளிரில்... மழையில்... நாள் தவறாமல் இந்த வேலை... மழை நாட்களில் குடை பிடிது கொண்டு போக முடியாது... தாத்தா யூரியா சாக்கு பையை இரண்டாக மடித்து குடை போல் போட்டு அனுப்புவார்... ரெண்டு கைல பால் வாளிய வச்சுகிட்டு கொடைய எப்படி பிடிக்க முடியும்? அதனால இந்த சாக்கு குடை ஏற்பாடு.

பால்வாளிக்கு ரயிலடில என்ன வேலை? ரயிலடி எங்கே? ரயிலடி... அதாங்க எங்க ஊர் ரயில்வே ஸ்டேசன்... எங்க வீட்டுக்கும் கடைத்தெருவிற்க்கும் இடையில், அங்க நிறைய வாதாம் மரம் ( நாட்டு பாதாம்) இருக்கும், அதில் வந்து தங்கும் பறவைகள் மற்றும் அணில்கள் இரவு முழுதும் எனக்காக பறித்து போட்ட பழங்கள், கொஞ்சம் தாமதமா போனா கிடைக்காது, அந்த வாதாம் கொட்டைக்கு அவ்வளவு டிமாண்ட்... நான் என் ரெண்டு வாளியும் முழுவதும் நிரப்பி கொண்டு வருவேன்... ஹும் சரியான "பொருக்கி பையன்" என்னமா பொருக்கி இருக்கேன்... பிறகு அதை காயவைத்து, உடைத்து... அப்பப்பா... அது ஒரு வாரம் நடைபெறும்... கடைசியில் வாதம் பருப்பு என் பையில்... கையில்... வாயில்...

இதில் வேடிக்கை என்னன்னா இந்த வாதாம் பருப்பிற்க்காக என்னை நண்பனாக வைத்துக்கொள்ள பள்ளியில் போட்டா போட்டி... இருக்காத பின்ன? எல்லோருக்கும் கொடுக்க நான் என்ன இளிச்சவாயான?

No comments: