மண்டகுள்ள மணியடிக்குது...

தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை...

திராவிட கட்சிகள் இதுவரை அடித்த கொள்ளை... கூட்டுக் கொள்ளை, குடும்பக் கொள்ளை...

உண்மைதான்... ஆனா இப்ப டிரெண்ட் ரொம்ப மாறிடுச்சி... கொள்ளை அடிச்ச கும்பல் இப்ப கொஞ்சம் செய்யலாமுன்னு பாக்குது...

இப்ப கட்சிய ஆரம்பிச்ச தலிவருங்கோ எல்லாம் இன்ஸ்டண்ட்டா சி.எம் ஆயிடலாமுனு கன்வு கண்டுகிராங்கப்பா... அத்துதான் ஒரே டவுட்டா இருக்குதுப்பா...

அவனுங்க 5 பீரியட்ல போட்ட ஆட்டைய இவனுவோ 5 வருசத்துல போட்டுடுவானுவோ போலருக்கே... டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட்பா... அத்தான் பயமாகீது... கட்சி மொதா கூட்டதுலேயே... பொண்டாட்டி, பொண்ணு, மச்சான், மாமன்-னு என்றி குடுக்க சொல்லோ...

எனக்கு மண்டகுள்ள மணியடிக்குது நைனா...

தவளையின் காதல்...

இரவு நிலவை...
தன் காதலியாக நினைத்து...
கானம் பாடி அழைத்தது...ரிதப்...ரிதப்...

வெட்கிய நிலவு...
மேக மூட்டத்தில் மறைந்தது...
சாரலை தூது விட்டது...சலசல...சலசல...

தவளையே...
உன் கரகரத்த குரலுக்கு இந்த சாரல்... வெண்ணை
மனமொத்த காதலுக்கு மொத்தமாக தருகிறேன்...என்னை.


அமெரிக்காவில்... அடக்க விலை

சேல் ப்ரைஸ் (Sale Price)...ஸ்லிப்ப பார்க்கனும்... சிந்திக்க கூடாது.

நான் முன்பே சொல்லி இருக்கேன்... எனக்கு ஒரு பொருளை வாங்கும்போது அட இது இவ்வளவு மிக அதிகமாக இருக்கேன்னு நினைக்க மாட்டேன்... அதுக்கு பதிலா இந்த பொருள் அந்த விலைக்கு தகுதியான பொருளான்னு பார்ப்பேன்னு. ஆனா அமெரிக்காவுல எப்ப பார்த்தாலும் சேல்... சேல்... சேல். மாதத்தில் குறைந்தது ஒரு சேல் அது எப்படி சாத்தியம் ஆகிறது என நம்ம "அடக்க விலை" ஆராய்ச்சியை இங்கயும் செஞ்சி பார்த்தேன்.

இப்ப நான் "அரசூரில் அடக்க விலை" -க்கு கேட்ட மாதிரி எந்த அம்மாவ இல்ல தத்தாவ போய் கேட்க முடியும்? தேவையே இல்லை... இப்ப என்கிட்ட இருக்கு படிப்பறிவு... பட்டறிவு...இனையம் எல்லாம் இருக்கு. கோபால் பல் பொடி வியாபாரம் போல... இந்தியா, சிங்கபூர், மலேசியா மற்றும் அமெரிக்க ஷாப்பிங்க் அனுபவம் தான்.

சிங்கப்பூர், உலக பொருளாதார சந்தைக்கு பெயர் எடுத்த ஊர். அங்கு ஓரளவுக்கு விலை, தரம் எல்லாம் நிரந்தரம். சரி ஒரு நல்ல பிராண்டட் பொருள எடுத்துக்கொள்வோம்... நைக்/ரீபோக் டி.ஷர்ட், அல்லது சார்லி/ஃபேரன்ஹீட் (C&D) பர்ஃபியூம் இப்படி சில. ஒரு பொருள் சிங்கபூர்ல 60 டாலர்னா அது அமெரிக்கவுல 40 டாலர் இருக்க வேண்டும்... கிட்ட தட்ட 1.5 அயல்னாட்டு பண மாற்றுவிகிதப்படி.

ஆனால் அது அமெரிக்காவில் 80 டாலருக்கு குறையாமல் விற்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு மடங்கு... ஏன்?

கொள்ளையடிக்கிறார்களா? இல்லை இல்லவே இல்லை. அமெரிக்காவில் "நோ கொஸ்டீன்ஸ் ஆஸ்க்ட்" ரிட்டர்ன் பாலிசி... கஸ்டமர் ஸேட்டிஸ்ஃபேக்ஸன். இப்ப புரியுதா? கடையில் எப்படி நீங்க திருப்பி கொடுக்கும்போது கேள்வி கேட்பது இல்லியோ... அதே மாதிரி கஸ்டமராகிய நம்மலும் அவங்க அதிகம் வெச்சு விக்கிற விலைய பத்தி கேள்வி கேட்க கூடாது. லாஜிக் கரெக்ட்டா?

லாஜிக் இருக்கட்டும்... அடக்க விலை?

இன்னுமா புரியல? சேல் ப்ரைஸ்தான் காஸ்ட் ப்ரைஸ். அதனாலதான் மாதத்தில் குறைந்தது ஒரு நாள் ஏதாவது ஒரு சேல் நடக்குது. கடைகாறார்களின் அடக்க விலை ஃபார்முலா இதுதான். அவங்க ஸ்டாக் பண்ணும் பொருளில் பாதி விற்றாலே போதும். முழு ஸ்டாக்கோட ஆர்.ஓ.ஐ கிடைச்சுடும். நீங்க பொருள் வேண்டாம் என்று திருப்பி கொடுத்தால்... சந்தோஷம் கொடுங்க கொடுங்க நாங்க 50% சேல்ல இதையும் வித்துடுவோம்னு சொல்லி வாங்கி கொள்வார்கள்.

குறள்: (கற்க கசடற...)
பாருங்க சேல்பாருங்க சேல் போட்டபின்
வாங்குங்க தேவைக் கேற்ப.

பி.கு: ஏம்ப்பா நான் ரொம்ப ஏமாந்த சோனகிரிப்பா... சேல் பார்க்க தெரியாது... (ஹி...ஹி உபயோகபடுத்துன) பொருள திறுப்பி கொடுக்க மனசு வறாது... சாதாரண நாள்ல எனக்கு பாதி விலைல கொடுங்கப்பா.

அரசூரில்... அடக்க விலை

காஸ்ட் ப்ரைஸ் (Cost Price)...கணக்கு பண்ணனும்... கடுப்பாவ கூடாது.

எனக்கு ஒரு பொருளை வாங்கும்போது அட இது இவ்வளவு மிக அதிகமாக இருக்கேன்னு நினைக்க மாட்டேன்... அதுக்கு பதிலா இந்த பொருள் அந்த விலைக்கு தகுதியான பொருளான்னு பார்ப்பேன். இது ஏதோ இப்பதான் தோனிச்சான்னு கேட்க கூடாது... சின்ன பிள்ளையா இருக்கும்போதே பண்ண ஆரம்பிச்ச கணக்கு... எங்க வீட்டுல பால், மோர், தயிர், வெண்ணை மற்றும் கீரை, வெண்டிக்கா, முருங்கக்கா இதெல்லம் விற்பாங்க... இது அம்மா/பாட்டி டிவிஸன். நெல், மாங்கா, தேங்கா, மரம் மட்டை... இது தத்தா டிவிஸன்.

எங்கம்மா வித்த கமாடிட்டியில மினிமம் விலை 10 காசு... ஒரு வட்டா மோரு அதுல மூன்று கரண்டி தயிரு (நோட் டவுன் த ஃபார்முலா 1+3). இங்க அந்த வட்டாவோ இல்ல கரண்டியோ எந்த மெட்ற்றிக் ஸ்டேண்டர்டு-க்கும் உட்பட்டது கிடையாது. ஆனா பாலுக்கு அப்படி கிடையாது, கால் லிட்டர் அலவு குவலை இருக்கும். அம்மாவிடம் கேட்பேன்... நீ இல்லாட்டி நான் எப்படி விற்கனும்/குடுக்கனும்-னு? எனக்கு கவலை என்னன்னா எங்க நிறைய கொடுத்து குடும்ப சொத்து குறைஞ்சிட போவுதோன்னு. அம்மா சொல்லுன்வாங்க என்ன பெரிய விஷயம் 10 காசுக்கு 1+3, 50 காசுக்கு 5+15 (அப்லை த ஃபார்முலா)... அப்புரம் கொஞ்ச மோரோ இல்ல 2 கரண்டி தயிரோ கூட போட்டு கொடுக்க வேண்டியது தான். சரி சேல்ஸ தெரிஞ்சி கிட்டாச்சி... அடக்க விலை?

நான்... அம்மா ஏதோ மாடு விலை இவ்வளவு, மட்டுக்கு வைக்கோல், புண்ணாக்கு, தீவனம் இத்யாதி... இத்யாதி... எல்லாத்தையும் "கூட்டி(+)" மாடு கறக்கிற பாலுக்கு ஒரு விலைய போட்டு அதால "வகுத்தா(/)" வரும்பான்னு சொல்லுவாங்க என்று நினைசேன்... ஆனா அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? ஊருல என்ன விலை விக்குதோ நாமும் அந்த விலைக்கு விக்கிறோம்னு சொல்லிட்டாங்க. (மனசுக்குள் சொல்லிகிட்டேன் குடும்ப சொத்து குறைய நீதான் காரணமா?)

என மனசு அடங்க வில்லை, எப்படியாவது "அடக்க விலை"-யை கண்டு பிடித்து தீருவது என்று முடிவு செய்தேன். தாத்தாவிடம் சென்று கேட்டேன், தத்தா நம்ம சுருட்ட மாடு (ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு பேர் உண்டு) என்ன விலை (தாத்தாவுக்கு டவுட் வந்துடுச்சி... என்ன டவுட்டுனு பிறகு சொல்லுகிரேன்) அது வருசத்துக்கு எத்தனை கட்டு வைக்கோல் திங்கும்? எவ்வளவு புண்ணாக்கு வாங்குவோம்? எவ்வளவு பால் கறக்கும்... அப்ப உள்ள அறிவுக்கு ஆல் டேட்டா கலெக்ட் பண்ணியாச்சு... விவரம் இதோ.

செலவு:
மாட்டின் விலை...2000.00, வைக்கோல்...100.00, புண்ணாக்கு... 1000.00 ஆக மொத்தம் 3100.00

வரவு:
சுருட்ட காலைல 2லி, மாலைல 2லி மொத்தம் 4 லி கறக்கும். சரிக்கு சரி தண்ணி ஊத்தலாம்னு (அதாவது 1லி பாலுக்கு 1லி தண்ணி) அம்மா சொல்லுவாங்க (பாட்டி சொல்லுவாங்க 1-க்கு 2 ஊத்துன்னு, ஹும் எங்க அம்மாவுக்கு ஊருல நல்ல பேரு... மாமியார்கிட்ட கெட்ட பேரு), ஆக 8லி. சுருட்டையோட குழந்தைப்பேரு காலம் 4 மாசம்... நோ மில்கிங்க்...
8(மாதம்) x 30 (னாள்) x 8(லி) x 2.00... 3840.00

யுரேகா... அம்மா பாலுக்கு அடக்க விலைய கண்டு புடிச்சிட்டேன்... இருந்தாலும் தவிடு, புல்லு, மாடு மேய்க்க ஆளு இதுகெல்லாம் எனக்கு விலை போட தெரியலம்மா... பெருசா ஒண்ணும் லாபம் இல்லையேன்னு கவலை பட்டேன். அம்மா சொன்னாங்க... அதுக்குதாண்டா செல்லம் உன்னை எப்ப பார்த்தாலும் படி... படின்னு சொல்லுரேன்.

பி.கு: நான் இருந்த நிலைமைய பார்த்து அம்மா சொன்னாங்க... நமக்கு லாபம்தான்... நீ மாட்டோட விலைய மொத்தமா போட்டுருக்க, அப்புறம் சுருட்ட வருஷா வருஷம் கண்ணு குட்டி போடும் அது நம்ம முதலுக்கு கிடைக்கிற மறு முதலீடு. (ஆகா இதுதான் ரெக்கரிங்க் டெப்பாசிட்டா?)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே - 3

"எலிமண்டி"-ல் இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு, கடைசி வருசம். அடுத்த வருஷம் எப்படியும் ஹை-ஸ்கூலுல சேர்த்துடுவாங்க... ஸோ எஞ்சாய் ராஜா எஞ்சாய்.

5-பி, 'அரக்கன்' பூபதி கிளாஸ் டீச்சர். நெற்றியில் திருனீரை பூசியிருந்தால் அடி நிச்சயம். அடுத்து முத்து சார்... என் கணக்கு வாத்தியார், திருனீரு பூசவில்லை என்றால் அடிப்பார்... கரும்பலகையிலிருந்து "ஜாக்பீஸ்" தூலை நெற்றியில் இட்டுக்கொள்வோம்.

சரி இங்க ஒன்னும் விஷேசம் இல்லையா? இருக்கே. அட்வென்ச்சர் பண்ணியிருக்கேன்ல. மதியம் வீட்டுல சாப்பிட்டரமோ இல்லியோ... லன்ச் பிரேக்ல விளையாடுரது ரொம்ப ஸ்பெசல்... கட்டிங்க் போட்டு ஓடுரதுல நான் பலே கில்லாடி... ஆனா என் போராத நேரம் அன்று சறுக்கு மரத்துல ஏறிட்டேன், எதிரி ரெண்டு பேரு வலைச்சிட்டானுங்க... சும்மாவா அப்பிடியே மீன் மாதிரி வளைஞ்சி பின்னாடி வந்தவங்கிட்டே இருந்து தப்பிச்சி முன்னாடி வந்தவன் மண்டைல ஒரே இடி... நடராஜ் மண்ட பனால்... ஒரே ரத்தம். பயத்துல என்ன பண்ணருதுன்னு தெரியல... அவன என் பிரண்ட்ஸ் ஆஸ்பத்ரிக்கு அழைத்து சென்று விட்டார்கள். திடீரென்று என் முன்னே பக்கத்து ஹை-ஸ்கூலில் படிக்கும் என் அண்ணன் என் முன்னால்... சரி எவனோ போட்டு கொடுத்த் விட்டான், இன்னிக்கி அடி பின்ன போரான்னு நினைச்சா... டேய் உன் மண்ட உடஞ்சி இருக்குடா வா ஆஸ்பத்ரிக்கு போவோம்னு சைக்கிளில் அள்ளிகிட்டு போனான். இன்றும் மறக்க வில்லை அந்த நாள், ராஜாமணி கம்பௌண்டர்... மயக்க மருந்து இல்லாமலே புருவத்தில் தையல் போட்டார். இப்போ எனக்கு ரெண்டு புருவத்துக்கு ஒரு புருவம் இலவசம்.

ஸ்போர்ட்ஸ்: தவ்வி கடித்தல் - நூலுல மேரி பிஸ்கட்-ட கட்டி ஆட்டுவாங்க... குறிபார்து கடிக்கனும்... அட அமெரிக்காவுல இததான் "பினாட்டா"-னு சொல்லுறாங்க...இது தவ்வி அடித்தல்.

சாக் ரேஸ் - என்னுடைய ஆல் டைம் பேவரிட்...எங்க வீட்டு களத்துல கடுமையா டிரைனிங்க் எடுப்பேன்.... மூனு வருசம் (ஹாற்றிக்) முதல் பரிசு வாங்குனேன்.

"எலிமண்டி" எலிமண்டி-ன்னு சொன்னனே அது என்னன்னு சொல்லாட்டி நல்லா இருக்காது...அது எலிமெண்டரி ஸ்கூல்... இப்ப எய்டெட் மிடில் ஸ்கூல் (உதவிபெரும் நடுனிலைப் பள்ளி) ஆயிடுச்சி.

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே - 2

அந்த "எலிமண்டி" ஸ்கூலுல ஐந்து வருஷம் படிச்சேன். நண்பர்களில் பெரிய மாற்றம் இல்லை, அதே கூட்டம், அதே கொட்டம் வேற வேற வகுப்பறை.

3-பி, ராமன் ஸார். மீண்டும் ஒரு நல்ல சார். இங்க நான் ஒரு சுவராஸ்யமான ஒரு சேதி சொல்லியாகனும். மதிய உணவு - முழு நேர பள்ளி, 1 மணி நேர உணவு இடைவேளை, கட்டாயம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போகனும். அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி ஓறீரண்டு நாட்கள் டிஃபன் பாக்ஸ் சாப்பாடு வேணும்னு கேட்பேன். இதுல மேட்டர் என்னன்னா எடுத்துட்டு போன சாப்பாட்ட எவன் கிட்டயாவது கொடுத்துட்டு ஸ்கூல்ல போடுவாங்களே அந்த மதிய உணவ வாங்கி சாப்பிடுவேன். நான் படிச்சப்ப ரொம்ப ஸ்ட்ற்றிக்ட், சாப்பிட அட்டெண்டன்ஸ் எடுப்பாங்க, அதுல வீரா சார் ரொம்ப கடுமையானவரு. பரமசிவம் சாரும் ராமன் சாரும் என்ன ஒன்னும் சொல்ல மாட்டாங்க... டேய் "வேணு மகனே" இரு உங்க அப்பாகிட்ட சொல்லுரேன்னு மிரட்டிடுட்டு போயிடுவாங்க.

என்னதான் அரிசி மக்க வாசனை அடிச்சாலும்... நான் சாப்பிட்ட அந்த "வரட்டு கோதுமை உப்புமா", சுட சுட "சாம்பார் சாதம்" - இன்னும் என் நினைவில் நீங்காதவை.

4-பி, ஆக்கூர் சார், பெயர் செல்வராஜ்-னு நினைக்கிறேன். எனக்கு தெரிந்து ஆங்கிலம் அதிகம் சொல்லி கொடுத்தவர், அதற்க்காக நிறைய அடியும் கொடுத்தவர், கணக்கு சொல்லி கொடுக்க பாலு சார். படிப்பில் போட்டி இங்குதான் ஆரம்பம்... தாமரை டீச்சர் மகன் ஜவஹர், நான் மற்றும் டெயிலர் மகன் வாசன்... முதல் மூன்று ரேங்கை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்தோம்.

ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே - 1

என் பொண்ணு பிரி-ஸ்கூல் என்றதும் என் ஞாபகத்துக்கு வந்தது எங்க "எலிமண்டி" ஸ்கூலுதான். முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்...

என் 1-ம் வகுப்பு டீச்சரின் பெயர் "குண்டு டீச்சர்" (ஜெயலஷ்மி), பெயரை பார்த்த உடனே உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும்... பெரிய உருவம், காலைல வந்து நாற்காலியில் உட்கார்ந்தா மதியம் சாப்பட்டுக்குதான் எழுந்திருப்பாங்க. அருமையா பாடம் சொல்லி தருவாங்க. வாளு பையன்கள அவங்க அடிக்கிற விதம் இருக்கே... நெய்வேலி காட்டாமணி செடி... நெடு நெடுன்னு வளர்ந்து இருக்குமே, தினம் ஐஞ்சு ஓடச்சி கொண்டாந்து வைக்கனும்... அத வச்சு சும்மா பின்னு பின்னு பின்னுவாங்க. அட நான் நல்ல பிள்ளைங்க... ஃபர்ஸ்ட் பெஞ்ச்.

எனது நண்பர்கள்... ரவி, செந்தில், ஜவஹர், இங்கர்சால், காசினாதான் மற்றும் பலர். நாங்க எல்லாம் 1-வது பி செக்ஸன், ஹி...ஹி...எங்க ஸ்கூலுல 'எ' செக்ஸன் பெண்களுக்கு. ஸ்கூலுக்கு பின்னாடி வாய்க்கால், சமயத்துல ஒன்னு, ரெண்டு, மூனு போக ரொம்ப வசதியா இருக்கும். மத்தபடி என்ன மார்க் வாங்கனேன்னு எல்லாம் ஞாபகம் இல்ல.

சொல்ல மறந்துட்டனே... என் பேரு இளங்கோவனாம்... ஸ்கூலுல சேரும் போது "உன் பேரு என்னன்னு" கேட்டதுக்கு ராஜா-ன்னு நான் சொன்னதால அதுவே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்களாம் என் அக்கா.

2-பி, 1-அம் வகுப்பு மாதிரி இல்ல இப்ப ரெண்டு சார், ஒன்னு கிளாஸ் டீச்சர் பரமசிவம் சார், இன்னொன்னு டிரில் சார் அவர் பெயர் ராஜேந்திரன். பரமசிவம் சார் தான் 2-ம் வகுப்பு சார்ல ரொம்ப நல்ல சார், யாரையும் அடிக்க மாட்டர். நான் அவர்கிட்ட நிறைய படிப்பு கத்துகிட்டேன். அந்த இங்கர்சால் இருக்கானே... அவந்தான் என்கிட்ட தகறாரு பண்ணுவான், அடிப்பான், கிள்ளுவான்... அவன நான் ஆளு வெச்சு (என் அண்ணன்) அடிப்பேன்.

யாருக்காக?

சிங்கப்பூரில் இருந்த போது நிறைய பிளாக் எழுத வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியல் தயார் செய்தேன். தமிழில் தட்டச்சு செய்ய முரசு அஞ்சல் கூட வாங்கியாகி விட்டது... ஏனோ வேலை நேரம் போக கணணியை பார்த்தாலே கடும் கோபம். சரி போ பிறகு பார்த்து கொள்ளலாம் என பல ஆண்டுகள்... ஒன்று இரண்டு அல்ல பத்து ஆண்டுகள் ஒடிவிட்டது.

அட இப்ப என்ன வந்துச்சு... எழுத வந்துட்டன்னு கேட்கறீங்களா? என் பொண்ணுதான் காரணம்... தினசரி பெட் டைம் ஸ்டோரி சொல்லனும். தினம் ரெண்டு கதை சொல்லனும், ஒன்னு நூலகங்களில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களில் இருந்து... அடுத்து "அப்பாவின் லைப்ரரில என்ன இருக்கு"? என் பெண்ணின் "அப்பாவின் லைப்ரரில என்ன இருக்கு"? கேள்விக்கு நான் சொன்ன பதில்... "அப்பாகிட்ட பழைய நினைவுகள்தான் இருக்கு"... அதுல உனக்கு என்ன வேணும்?

கொஞ்சம் கூட தாமதிக்கமல் அடுத்த கேள்வி, நீங்க என்ன பண்ணுனீங்க பிரி-ஸ்கூலுல? உங்க அம்மா என்ன பண்ணுவாங்க? உங்க அப்பா என்ன பண்ணுவாங்க? உங்கள மாதிரி கதை சொல்லுவாங்களா?

போதும்... சும்மா கேள்வி கேட்காம பதில சொல்லுங்கன்னு திட்டாதீங்க...பதில் எல்லாம் ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே.

அமெரிக்கா பராசக்தி

இனையதளத்தில் 'கம்ப்யூட்டர் பராசக்தி', 'சாஃப்ட்வேர் பராசக்தி' -னு சில பராசக்திகள்... இது ஒரிஜினல் பராசக்தியில் 'இம்ப்ரஸ்' ஆகி... அமெரிக்க அனுபவத்தில் 'கம்ப்ரஸ்' ஆன என் அனுபவத்தில் உருவான பராசக்தி... எவர் மனதையும் புண்படுத்த அல்ல.

அமெரிக்கா, லேண்ட் ஆஃப் ஆபர்சுனிட்டி... விசித்திரம் நிறைந்த பல நாட்டவரை உள்ளே விட்டிருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டு இருக்கிறது, ஆனால் இந்த தேசியின் கூவல் விசித்திரமானதும் அல்ல, கூவும் நான் புதுமையான தேசியும் அல்ல.

அமெரிக்கா ஆசையிலே... ஒரு சாதாரண தேசியாக H1-ல் வந்தவன் தான் நான், இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அடிக்கடி எம்ப்லாயரை மாற்றினேன், இரண்டு மூன்று H1 அப்லை பண்ணி லாட்டரிக்கு வழிவகுத்தேன், கிரீன் கார்டு பிராஸஸை ரிட் ராகேஸனுக்கு தள்ளினேன், இப்படியெல்லாம் குற்றம் சாற்றப்பட்டிருகிறேன் நான்.

நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை.

இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அடிக்கடி எம்ப்லாயரை மாற்றினேன்... இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அல்ல, கிளையண்டிடம் 90 டாலர் வாங்கி எனக்கு 33 கொடுத்து... நாம் கொடுப்பதைதான் வாங்கிகொள்ள வேண்டும் என்று மார்தட்டினார்களே அந்த எம்ப்ளாயர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதர்க்காக.

இரண்டு மூன்று H1 அப்லை பண்ணி லாட்டரிக்கு வழிவகுத்தேன்... ஏன்? அதனால் இன்னொரு சக தேசிக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை கெடுக்க அல்ல... என்றோ ஒரு நாள் என்னுடைய தற்போதைய எம்ப்ளாயரால் வேலை போய்... நான் என் சோற்றுக்கு லாட்டரி அடிக்க கூடாது என்பதர்க்காக.

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை... தேசிகள் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்?

நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள்... என் சுய நலத்திலே பலர் குடும்ப நலமும் கலந்து இருக்கிறது. என் வேலையை பற்றி மட்டுமே கவலாப்படாமல்... எல்ல தேசிகளுக்காகவும் கவலைப்படேன், தனக்கு சாப்பிட உணவு கிடைத்தால் ஊரையே கூப்பிடுமே... அந்த காக்கையை போல.

என்னை குற்றவாளி என்கிறீர்களா?... இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறு எவ்வளவு என்று பார்க்க முடியும். தானே முன்வந்து சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும் எம்ப்ளாயர் இல்லை என் பாதையில்... அலுவலக பாலிட்டிக்ஸில் படாதபாடு பட்டேன் நான்... தங்கமானவன் என்று தட்டிக் கொடுக்கவில்லை என்னை... தத்தாரிகளை தாண்டி வந்து இருக்கிறேன் நான்.

கேளுங்கள் என் கதையை, இவன் தேசி இல்லை பரதேசி என்று பரிகாசம் செய்யும் முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... மயிலாடுதுறையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. தமிழ் நாட்டின் தலை எழுத்திற்கு நான் விதிவிலக்கா? சிங்கப்பூர் என்னை சீராட்டி வரவேற்றது, உடம்பை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது.

சரி அமெரிக்காவையும் ஒரு எட்டு பார்த்துவிடலாம் என்று அமெரிக்கா வந்தேன். லாட்டரி H1-ஆல் கலலத்துபோய் கிடக்கிறார்களே இந்த மேன்பவர் கம்பெனிகள்... அவர்கள் விரித்த வலையில் விழுந்த ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்... இண்டர்வியூ நன்றாக செய்தும் ரேட் சரியில்லை என்று பெஞ்சில் உட்கார வைக்கபட்டேன்... நல்ல ரேட்டிற்க்காக சீனியாரிட்டியை பறிகொடுத்தேன்... மனம் உடைந்தேன்... கடைசியில் கன்சல்ட்டண்டாக மாறினேன்.

காண வந்த அமெரிக்காவை கண்டேன்... அகண்டு விரிந்த மாஹானங்களாய்... ஆம் தறிகெட்ட தட்ப வெட்ப நிலையிலும், நாலு வேறுபட்ட நேரங்களுடனும். தரையிறங்கிய ஊரோ 'சிகாகோ'... அடித்தது குளிர்... என்னை 'சிக்காக்க'. தடுமாறிவிட்டது டிராஃபிகள் வெதரில் வளர்ந்த உடம்பு.

கூட்டாளிகளின் தொல்லை, குடிக்க சொன்னார்கள். எனக்கு பிடித்ததோ 'கல்யாணி' (பீர்)... கூட்டாளிகள் 'ஹாட்'டுக்கு அலைந்தார்கள்... கல்யணிக்காக நான் அலைந்தேன். கண்டுபிடிதோம் ஒரு கடையை... கல்யாணிக்காக காத்திருந்தனர்... அதில் காளையர் பலர், கண்ணியர் சிலர். கல்யாணியின் டிமாண்டை பார்த்து காசு கூட கேட்டான் அந்த கடைகாரன்.

சம்பள பாக்கியில் சம்பத்தப்பட்டு லேபர் கோர்ட்டில் பாப்பர் சொல்லி நிற்க்கிறார்களே இந்த Inc கம்பெனிகள்... பகட்டு வார்த்தையால் பலபேரை பதம் பார்த்தவர்கள்... என்னையும் மயக்க பார்த்தார்கள்... என் நண்பர்கள் தடுத்திருக்காவிட்டல் நானும் மாட்டியிருப்பேன். அமெரிக்க கம்பெனிகள் காப்பாற்ற வந்தன என்னை... பிரதி உபகாரமாக 'டிராவலிங்' பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அதில் தலையாய பங்கு வகித்த கம்பெனி IBM. நாலு நால் வேலை பார்த்தால் போதும் என்றான்... ஆனால் அந்த நாலு நாலில் என் நாடி நரம்பை எல்லாம் கயட்டி விட்டான் அவன் கிளையண்ட்.

IBM-ல் வேலை என்ற பெருமை... விட்டு வர மனமில்லை, குடும்பத்தை விட்டு அலையவும் விருப்பம் இல்லை... அதானல் 'டிராவலிங்கை' கைவிட்டேன். விருப்பமான வேலையை விடுவது விந்தையல்ல... உலக உத்தமர் காந்தி... அகிம்சா மூர்த்தி... பாரட்-லா படித்தவர்... அவரே தேச சுதந்திரத்திற்க்காக வக்கீல் தொழிலை விட்டு இருக்கிறார்.

வேலை என்னை விரட்டியது... ஆரம்ப பிராஜக்ட் ஆர்க்கன்ஸாசில் என்றான்... அங்கு ஓடினேன். பக்கா பிராஜக்ட் பாஸ்டனில் என்றான்... பறந்து ஓடினேன். ஜாப் ரிஸர்ஸன் என்னை பயமுறுத்தியது... ஓடினேன்... ஓடினேன்... அமெரிக்காவின் 50 மாஹானங்களுக்கும் ஓடினேன். அந்த ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்... என் வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும் அந்த கிரீன் கார்ட் பிராஸஸ் பண்ணும் INS. EAD கொடுத்தார்களா? EAD கொடுத்தார்களா H4-ல் உள்ளவர்களுக்கு?

(ஒருவர் இடை மறித்து: ஹும்..ஹும்...இவர் கிரீன் கார்டுக்காக கூவ வில்லை... யாரோட EAD-க்காக கூவுகிறார்)

இல்லை... யாரோட EAD-யோ இல்லை... அதுவும் என் கூவல்தான்... என் மனைவியின் கூவல். மனைவியின் படிப்பை, திறமையை வீணடிக்காமல் துட்டு பார்க்க நினைப்பதில் என்ன தவறு?

தகுதி உடையவர்களை EAD-யை காரணம் காட்டி வீட்டில் உட்கார வைத்தது ஒரு குற்றம், தேசத்திற்கு திரும்பி விட்ட R2I-யை கணக்கில் கொண்டுவராமல் பழைய கேப் கவுண்டை காட்டுவது இன்னொரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார் காரணம்?

H4 ஆண்டிகளுக்கு EAD கொடுக்காதது யார் குற்றம்? H1-ல் வந்தவனின் குற்றமா? அல்லது ஒருவருக்கே பல H1 தரும் INS-ன் குற்றமா?

பணம் பறிக்கும் Inc கம்பெனிகளை வளர விட்டது யார் குற்றம்? அமெரிக்கா வந்தால் போதும் என்று வரும் தேசிகளின் குற்றமா? அல்லது கஞ்சமாக பலர் நெஞ்சை மிதிக்கும் வஞ்சகர்களின் குற்றமா?

பிரையாரிட்டி டேட்டை பிண்ணுக்கு தள்ளியது யார் குற்றம்? கோட்டா என்ற பெயரில் அப்லிகேஸன் 'துட்டை' உயர்த்தி தேசியிடம் 'ஆட்டை'ய போடும் INS-ன் குற்றமா? அல்லது 'துட்டை' வாங்கி கொண்டு பதிலே பேசாது தேசியின் நெற்றியில் 'பட்டை'யை போடும் வக்கீலின் குற்றமா?

இந்த குற்றங்கள் திறுத்தப்படும் வரை இந்த H1, H4-களின் கூவல் குறைய போவது இல்லை. இதுதான் நான் இங்கு படித்த பாடம், பட்டறிவு...பரிதாபமான அமெரிக்க அனுபவம்.

பராசக்தி

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேசி புகழ் பெற்ற அந்த ஏழு நிமிட வசனம்... நீங்கள் படித்து மகிழ...

நீதி மன்றம், விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டு இருக்கிறது, ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனும் அல்ல. வாழ்க்கை பாதையிலே, சர்வ சாதாரணமாக தென்படக் கூடியவந்தான் நான்.

கோவிலிலே குழப்பம் விலைவித்தேன், பூசாரியை தாக்கினேன், இப்படியெல்லாம் குற்றம் சாற்றப்பட்டிருகிறேன் நான். நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்... கோவில் கூடாது என்பதர்க்காக அல்ல... கோவில் கொடியவ்ரின் கூடாரமாக இருக்க கூடாது என்பதர்க்காக. பூசாரியை தாக்கினேன்... அவன் பக்தன் என்பதர்க்காக அல்ல... பக்தி பகல்வேசம் ஆகிவிட்டதே என்பதை கண்டிப்பதர்க்காக.

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை... உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்? நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள்... என் சுய நலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது. ஆகரத்திற்க்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன்... அதை போல.

என்னை குற்றவாளி என்கிறார்களே... இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறு எவ்வளவு என்று பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்... படமெடுக்கும் பாம்புகள் நெளிந்து இருக்கின்றன. தென்றலை தீண்டியது இல்லை நான்... தீயை தாண்டி இருக்கிறேன்.

கேளுங்கள் என் கதையை, தீர்ப்பு எழுதுவதர்க்கு முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. தமிழ் நாட்டின் தலை எழுத்திற்கு நான் விதிவிலக்கா? ரங்கூன் என் உயிரை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது. திருமண கோலத்தில் இருக்கும் என் தங்கையை காணவந்தேன், மோசடி வழக்கில் ஈடுபட்டு குற்றவாளி கூண்டிலே நிற்கிறாலே இதோ இந்த ஜாலகாரி ஜாலி, இவள் வலையிலே விழுந்த ஆடவர்களில் நானும் ஒருவன். பணப்பெட்டியை பறிகொடுத்தேன்... பட்டினியில் திரிந்தேன்... பசியால் மெலிந்தேன்... கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையை கண்டேன்... உயிர் அற்ற ஓவியமாக... ஆம் கைம்பெண்ணாக. தங்கையின் பெயரோ கல்யாணி... மங்களமான பெயர்... ஆனால் கழுத்திலோ மாங்கள்யம் இல்லை. செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது, கையிலே பிள்ளை... கண்ணிலே நீர்... கல்யாணி அலைந்தால், கல்யாணிக்காக நான் அலைந்தேன். கல்யான்ணிக்கு கருணை காட்டினார்கள் பலர், அவர்களில் காளையர் சிலர் கைமாறாக அவளின் காதலை கேட்டனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கைதியாக நிற்கிறானே இதோ இந்த கொடியவன் வேலு... இவன் பகட்டால் மயக்க முயன்றான் என் தங்கையை. நான் தடுத்திருக்காவிட்டல் அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பால் என் தங்கை.

கடவுள் பக்தர்களும் காப்பற்ற வந்தார்கள் கல்யாணியை... பிரதி உபகாரமாக கேட்டார்கள் அவள் கடைக்கண் பார்வையை... அவர்களில் தலைமையானவன் இதோ இந்த பூசாரி... கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான்... பராசக்தியின் பெயரால்... உலக மாதாவின் பெயரால். கல்யாணி புழுவாக துடித்தபடியாவது இருந்திருப்பால் இந்த உலகத்தில்...அவளை தற்கொலை செய்ய தூண்டியது இந்த பூசாரிதான்.

தன் குழந்தையை இந்த இறக்கமற்ற உலகத்தில் விட்டு செல்ல அவள் விறும்பவில்லை... ஆதரவற்று துடித்து இறப்பதை விரும்பவில்லை அவள், அதனால் அவளே கொன்றுவிட்டால். விறுப்பமானவர்களை கொல்வது விந்தையல்ல... உலக உத்தமர் காந்தி... அகிம்சா மூர்த்தி... ஜீவகாருன்ய சத்தியசீலர்... அவரே நோயால் துடித்து கொண்டிருந்த கன்றுகுட்டியை கொன்றுவிட சொல்லி இருக்கிறார் அது கஷ்டமுருவதை காணசகிக்காமல். அதே முறையைதான் கையாண்டு இருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்? வெளி நாட்டில் இருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ வழியில்லை... தமிழ் நாட்டிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பு இல்லை...என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால்... கோடிஸ்வரன் வீட்டு பள்ளியறையிலே ஒரு நாள்... மானத்தை விலை கூறி இருந்தால் மாளிகை வாசியின் மடியேலே ஒரு நாள்... இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.

அதைத்தானா இந்த நீதி மன்றம் விரும்புகிறது? பகட்டு என் தங்கையை விரட்டியது... பயந்து ஓடினால்... பணம் என் தங்கையை துரத்தியது... மீண்டும் ஓடினால்... பசி என் தங்கையை பயமுறுத்தியது... ஓடினால் ஓடினால் வாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடினால். அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும், அவள் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இந்த சட்டத்தை நீட்டுவோர். வாழ விட்டார்களா? வாழ விட்டார்களா? என் தங்கை கல்யாணியை?

(ஹும்..ஹும்...குற்றவாளி...யார் வழக்கிற்கோ வக்கீலாகிறார்)

இல்லை... யார் வழக்கிற்கும் இல்லை... அதுவும் என் வழக்குதான்... என் தங்கையின் வழக்கு... தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்ய முயன்றது ஒரு குற்றம், குழந்தையை கொன்றது ஒரு குற்றம், நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம்... இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார்...யார் காரணம்?

கல்யாணியை கஞ்சிக்கு வழியில்லாதவளாக அலைய விட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவைத்த வஞ்சகர்களின் குற்றமா?
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாடவிட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி கலாட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா?

இந்த குற்றங்கள் களையப்படும் வரை இந்த குணசேகரன்களும், கல்யாணிகளும் குறையப்போவது இல்லை... இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்த பக்கத்தை புரட்டினாலும் காணப்படும் பாடம்... பகுத்தறிவு... பயனுள்ள அரசியல் தத்துவம்.