கொசுத் தொல்லை...

அமெரிக்கா வந்த ஐந்து ஆண்டுகளில் நான் (ஏன் இந்த கொசுக் கடிய ஒவ்வொரு தேசியும் அனுபவிச்சி இருப்பாங்க) அதிகம் கடி பட்டது இரண்டு கொசுக்களிடம். ஒன்று தேசிக் கொசு, மற்றொன்று விதேசிக் கொசு. இந்த ரெண்டு கொசுக்களை அடையாளம் காணுதல், அவற்றை கையாளுதல் மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். நகச்சுவைக்காக மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல.

தேசிக் கொசு:

இந்தக் கொசு தேசியை மட்டும்தான் கடிக்கும். இது மளிகை கடை, காய்கறி கடை மற்றும் வால்மார்ட் போன்ற தேசிகள் அதிகம் நடமாடும் இடங்களில் தென்படும். இது உங்களை பார்த்தவுடன் சிரிக்கும், நீங்கள் பதிலுக்கு சிரித்தவுடன் (சிரிக்கா விட்டாலும்) உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று குசலம் விசாரிக்கும். பிறகு பழகுவதற்க்கும், தொடர் நட்பிற்க்கும் என்று சொல்லி உங்கள் தொலைபேசி எண்ணை கேட்கும். தொலைபேசியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு மீண்டும் சந்திக்கலாம் என்றும், வீட்டிலிருந்தபடியே பணம் பண்ணலாம் என்றும் கடிக்கும். இந்த சிறுகடி ஒரு நாள் பெருங்கடியாக மாறும். இது ரொம்ப சமர்த்தான கொசு கடைசி வரை ஏன் கடிக்கிறேன் எதுக்கு கடிக்கிறேன் என்று சொல்லாது... ஆனா கடிக்கும். இந்த கொசு உங்களை ஒரு வியாபார குழு சந்திப்பிற்க்கு அழைக்கும், உங்களுக்காக அது ஒரு இருக்கையை முன்பதிவு செய்திருப்பதாக சொல்ல... சிறுது நேரத்தில் ஒரு கொசுக் கூட்டம்... உங்கள் காதில் (கிழிய) ரத்தம் வர வர கடிக்கும். நீங்கள் கொஞ்சம் ஏமார்ந்தால் அன்றே அது உங்கள் மணி பர்சையும் கடிக்கும்.

இந்த கொசுக்களை நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். மேற்ச்சொன்ன இடங்களில் இந்தக் கொசு வெறும் வண்டியுடன் (எம்டி கார்ட்) சுற்றும்.
இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? அது மிகச் சுலபம். உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் வரும் மன மகிழ்வு தொலைபேசி எண்களை (உதாரணத்திற்கு, கொஸ்ட் எண்) நினைவு படுத்தி அதை அந்தக் கொசுவிடம் கொடுத்து விடுங்கள். பிறகு என்ன? உங்களுக்கு ஜாலி... கொசுவுக்கு டென்சன்.

விதேசிக் கொசு:

இந்தக் கொசு பெரும்பாலும் தொடர் குடியிருப்பில் உள்ள அனைவரையும் கடிக்கும். இது சனிக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் உங்கள் கதவை தட்டும். உங்கள் நாடு மற்றும் அமெரிக்கா பற்றிய சில நல்ல விசயங்களை கடித்துவிட்டு மெல்ல உங்களை சமயம் பற்றி கடிக்க ஆரம்பிக்கும். இந்த கொசு பரிசுத்த வேதகாமம், பழைய/புதிய ஏற்பாடுகளில் இருந்து சில நீதி/வசனம் என்று சொல்லியும், உங்களை வருகின்ற ஞாயிற்றுக் கிழமை கூட்டு பிரார்த்தனைக்கு வாங்க என அழைத்துக் கடிக்கும்.

இந்தக் கொசுவையும் நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். இந்தக் கொசு வீட்டிற்க்கே வந்து கதவை தட்டி கடிப்பதால், கையில் உள்ள விசயங்களை வைத்து முடிவு செய்து விடலாம்.

இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? இந்த விதேசிக் கொசு தேசிக் கொசுக்களைக் காட்டிலும் பல மடங்கு நல்ல கொசுக்கள். இதன் நோக்கம் நல்ல(?!) நோக்கம் என்பதாலும், கடிக்கும் போது நல்ல விசயங்களை சொல்லி கடிப்பதாலும் இந்தக் கடியை பொருத்துக் கொள்ளலாம். மேலும் இதை உங்கள் மன நிலைக்கும், பக்குவத்திற்க்கும் ஏற்ப்ப இதைக் கையாளலாம். உதாரணத்திற்கு, கார்ட் ப்ளஸ் அமெரிக்கா, பிறகு சந்திப்போம் என்று சொல்லி அனுப்பி விடலாம். இல்லை எனில் இந்தக் கொசு பரிசுத்த வேதகாமம் என்று ஆரம்பிக்கும் போது நீங்களும், பகவத்கீதை, சுலோஹம் 67, ஸ்ரீ பகவானுவுவாச்ச-ன்னு உங்க பராக்கிரமத்த (கடிதான்) காட்டலாம்.

அன்புடன் அழைக்கிறேன்...

நீங்கள் அட்லாண்டா (அமெரிக்கா – ஜார்ஜியா மாகாணம்) வாழ் தமிழராகவோ அல்லது அட்லாண்டா அருகில் வாழும் தமிழார்வம் கொண்டவராகவோ இருப்பின் உங்களை கேட்ஸ் – கலிஃபோர்னியா தமிழ்க் கழகத் தமிழ்ப் பள்ளிகளின் முதலாம் ஆண்டு விழாவிற்க்கு, விழாக் குழுவினரின் சார்பில் உங்களை வருக வருக என வரவேற்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாள் : மே 16, 2010 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மதியம் 2 மணி முதல்
இடம் : இண்டிபெண்டன்ஸ் உயர் நிலைப் பள்ளி,
மில்டன் மையம், 86 – ஸ்கூல் டிரைவ், அல்ஃபரட்டா, ஜார்ஜியா – 30009.

நிகழ்ச்சிக் குறிப்பு : 141 குழந்தைகளுக்கு கல்வியாண்டு சான்றிதழ் வழங்குதல், அவர்களின் கலை நிகழ்ச்சிகள் – ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு, காவடியாட்டம் போன்ற தமிழ்க் கலாச்சார மற்றும் பண்பாட்டு கலைகளுடன்.

150-க்கு மேற்ப்பட்ட தமிழ்க் குடும்பங்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்களின் சந்திப்புக்கள்.

உங்கள் பகுதியில் புதிய கல்விக்கூடம் அமைப்பதற்க்காண வழிகாட்டுதல்கள்.