அன்றும்... இன்றும்... -1

அன்று...
ஆசிரியர்: முருகா, வர வெள்ளிகிழமை விளையாட்டு போட்டிக்கு ஒரு 100 பேர் உட்கார பெஞ்சு போடனும்டா... அந்த வேளைய நீ பார்த்துக்கோ.

இன்று...
நண்பர்: முருகன், வர வெள்ளிகிழமை பிறந்த நாள் பார்ட்டி, ஒரு 100 பேர் உட்கார நாற்காலி ஏற்பாடு பண்ணும்... அத நீங்க பார்த்துக்கிறீங்களா?

முருகன்: சரி சார், காலைல ஏ.பி சார்கிட்ட சொல்லி அட்டெண்டன்ஸ் போட்டுட சொல்லுங்க... நான் கூட ரவிய அழைச்சிகிறேன், விளையாட்டு மைதானத்துல மதியம் பெஞ்ச இறக்கிடுறோம்.

ஒன்னும் பெரிய விசயம் இல்ல, ஒரு ஒன் அவர் அவே ஃப்ரம் டெஸ்க்னு போட்டுட்டு, மதியம் லன்ச் பிரேக்ல போயி எடுத்து கொண்டுவந்து வீட்டுல போட்டுடுறேன்.

டேய் ரவி வாடா ஒரு 20 பெஞ்சு ஏத்தனும், எங்க சிகப்பு காளை மாட்ட ஓட்டிக்கலாம், எங்க பார வண்டி சரிபடாது, உங்க வீட்டு டயர் வண்டிய எடுத்துப்போம், நம்ம தெருவிலேயே எடுத்து கொண்டாந்து இறக்கிடலாம்.

கணேஷ், லன்ச் பிரேக்ல ரெண்ட்-ய-பிளேஸ் வரை போயி கொஞ்சம் சேர் ஏத்திட்டு வந்திடலாமா? என் வண்டில ஏத்த முடியாது, யூகால்ல டிரக்க எடுத்துக்கலாம், அப்படியே ராஜ் வீட்டுல இறக்கிட்டு வந்திடலாம்.

பாட்டி: முருகா, பெஞ்ச ஒடைச்சி கொண்டாந்து போடுறீங்களா? காலு நொடிக்குது?

சேல்ஸ் லேடி: எச்சூசுமி, ரெண்டு சேரு டேமேஜ் ஆயிருக்கு

முருகன்: பாட்டி, அது ஏத்தும் போதே நொடிச்சிகிட்டுதான் இருந்துது... நீ பாக்கு இடிச்சி இடிச்சி... நொடிச்சி போச்சி. கவலை படாத அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு ஆசாரியார் வராரு அவர கூட்டிவந்து சரி பண்ணிதரேன்.

நாங்க செக் பண்ணல, உங்க டெலிவரிமேன் தான் லோட் பண்ணுனார், இருந்தாலும் இன்சூரன்ஸ் எடுத்திருக்கோம், அதுல கவர் பண்ணிக்கோங்க.

காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...
ஆனால் முருகனும் நானும் வேறல்ல...


இந்தியாவில் பாதி... அமெரிக்காவில் மீதி...
அன்றும் இன்றும் நம் நினைவுகள் ஒன்றல்லோ...


இத கவியரசர் கண்ணதாசன் எவ்வளவு அழகா பாட்டா எழுதியிருக்கார்.... கேட்கனுமா... இங்க அழுத்துங்க.

சோதனை

இனிய காலை பொழுது, நண்பர்களுடன் வழக்கமாக கூடும் இடத்தில் அன்றும் வழக்கமான விசயங்களை பேசிக்கொண்டிருந்தான். அஞ்சல்காரர் அவ்வழி கடக்கும் போது சொன்னார்... தம்பி உங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது அதை அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன் என்று.

கடிதம் பற்றி பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. என்ன விவசாய கூட்டுறவு சங்கத்திலிருந்து கடன் கட்டச்சொல்லி வந்திருக்கும் என்று மனதினுள் நினைத்துக் கொண்டு நண்பர்களுடனான அரட்டையை தொடர்ந்தான்.

தெரு கைப்பம்பில் தண்ணீர் எடுக்க வந்த நண்பனின் அம்மா நண்பனை காலை சிற்றுண்டிக்கு கூப்பிட்டார், வழக்கம்போல நண்பர்களையும். நண்பர்கள் மறுத்து... மீண்டும் மாலை சந்திப்பதாக கூறி அவர் அவர் இல்லம் சென்றனர்.

வீட்டில் இட்டிலியுடன் அம்மா கடிதத்தையும் கொடுத்தார்... இதை பார் ஏதோ அரசாங்க கடிதம் போலிருக்கிறது என்று. உறையின் முகப்பை பார்த்தவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி... ”எய்ம் ஹை”, இந்திய விமானப் படையின் தாரக மந்திரத்துடன் வந்திருந்தது அந்த கடிதம்.

விவசாய குடும்பத்தில் பிறந்து அறிவியல் முதுகலை பட்டம் பெற்ற அவனுக்கு, ஊதியத்துடன் முனைவர் படிப்பும்பெற வாய்ப்புடனுள்ள ஒரு வேலைவாய்ப்பிற்க்கான அழைப்பானை அது. ஒரு வாரம் மைசூர் இந்திய விமான பயிற்ச்சி மையத்தில் உடல் மற்றும் அறிவு சோதனை, தேர்ச்சி பெற்றால் ஐந்தாம் நாள் நேர்முக தேர்வு என்றும், சென்று வர செலவுகள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று கூறியது கடிதம்.

முதல் நாள் இரவு தொடர்வண்டி பயணம், மைசூர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல இந்திய விமானப்படைக்கு சொந்தமான லாரி வந்திருந்தது. மையத்தில் அழைப்பானை சரிபார்க்கப் பட்டு பயிற்சி சீருடைகள் மற்றும் தேர்வு அட்டவணை வழங்கப்பட்டது.

முதல் நாள் “டெஸ்ட் ஆஃப் ரீசனிங்”, முக்கோணங்கள், சதுரங்கள் போன்ற வடிவங்களின் வரிசை பற்றியும், எண்களின் தொடரமைப்பு பற்றியுமான சோதனை. நெல்லை பார்த்து இது ஐ.ஆர்.எட்டு, டி.கே.எம்.ஒன்பது என்று சொல்லும் ஸ்லம்டாக் விவாசாயிக்கு இது ஒரு பெரிய சோதனையாக இல்லை, மிகச் சுலபமாக கையாண்டான்.

இரண்டாம் நாள் “டெஸ்ட் ஆன் பிஸிகல் பிஃட்னஸ்”, ஓடுதல், தாண்டுதல், கயறு ஏறுதல், வளையத்தில் புகுந்து வருதல் போன்ற சோதனை. வைக்கோல் பிரியை மாங்காய் மரத்தில் கட்டி ஏறிய அனுபவம், கோடை எள் சாகுபடியின் போது கட்டி முட்டியில் ஆடுகளை விரட்டி ஓடிய அனுபவம், வேலிகளின் இடுக்கில் புகுந்து வாழையை அழித்த பன்றிகளை விரட்டிய அனுபவம்... இன்றும் சோதனைகள் சுலபமாக.

மூன்றாம் நாள் “திட்டமிடல், குழு வழி நடத்துதல் மற்றும் குழு ஆளுமை” பற்றிய சோதனை... குறிப்பாக இக்கட்டாண கால கட்டத்தில் ஒருவரின் செயல்பாடு பற்றி கண்டறிய. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை கையில் உள்ள கயிறு மற்றும் மரப் பலகை கொண்டு கரையேற்ற வேண்டும். காவிரிப் படுகையில் வெள்ளத்தில் அறுவடை செய்தவன், மிதக்கும் வெள்ளத்தில் வாழை மரங்களை மிதவையாக்கி, அதன் மீது நெற்கதிர்களை சேர்த்துக்கட்டி களம் சேர்த்த அனுபவம் கை கொடுத்தது… ஸ்லம்டாக் விவசாயிக்கு இன்றும் வெற்றி.

நான்காம் நாள் காலை, முதல் மூன்று நாட்களுக்கான மதிப்பு வெளியீடு, தேர்வு பெற்றவர்களுக்கான “சோசியல் கேதரிங்” - சாப்பட்டு மேசை மற்றும் பழகுதல் பற்றிய சோதனை மற்றும் திறனாய்வு. வங்கி கடன்பெற கூட்டுறவு சங்க அலுவலர் வரும்வரை அருகில் உள்ள நூலகத்தில் அமர்ந்து படித்தன் பயன் இன்றும் கை கொடுத்தது. தெரிவுபெற்ற பத்து பேரில் மூன்றாம் இடத்தில் ஸ்லாம்டாக் விவிசாயி.

ஐந்தாம் நாள், விமான படை உயர் நிலை அதிகாரிகளுடன், கழுத்தில் தொங்கும் கோவணத்துடன் (டை), நேர்முக தேர்வு. ஒரு அதிகாரி அவன் தகுதி மற்றும் மதிப்பீடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்தவர் அவன் பின்புலம் என்ன என்று வினவினார்... (ஸ்லம்டாக்) விவசாயம் என்று பெருமையுடன் சொன்னான். இறுதி ஆனை இல்லம் அனுப்பப்படும் என்ற வாசகத்துடன் விடைபெற்றான்... சேற்றில் செந்தாமரை இன்றுவரை முளைக்கவில்லை.

இன்றும் அவன் “எய்ம் ஹை” என்ற தாரக மந்திரம் விவசாயத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உ(ழ)ண்று வாழ்கிறான், ஆனால் வறண்டு போன காவிரியும், காலம் தவிர்த்து பெய்யும் வானமும் இன்றும் அவனுக்கு சோதனை மேல் சோதனையாய்... ”உன் எய்ம் பொய்” என சாதித்துக்கொண்டு இருக்கின்றன.

3 + 5 + 6 + 7 = 19

என்ன ஏதோ புதுசா (தப்பு) கணக்கு சொல்லிகொடுக்கப் போரேன்னு நினைச்சிங்களா? இல்லை... நான் அவன் இல்லை.

தலைப்பில் உள்ளது எல்லாம் ஜப்பான் நாட்டில், வாகன (கார்) உற்பத்தியில் முதன்மை நிறுவனமான, மிகத்திறன் வாய்ந்த, தரத்திற்க்கு பெயர்பெற்ற டொயோட்டா நிறுவனத்தின் இன்றைய அமெரிக்க கணக்கு.

உற்பத்தி துறையில் ஜப்பானியர் எட்டிய உயரம் மிகப் பெரியது... காரணம் தரக்கட்டுப்பாடு. அதை அடைய அவர்கள் பயன்படுத்திய வாய்ப்பாடு 3எம், 5எஸ், 6சிக்மா, 7டபியு எனப்படும் உற்பத்தி திறன் தரக்கோட்பாடுகள்.

உண்மைதான், சென்ற வாரம் வரை அமெரிக்காவில் விற்க்கப்பட்ட டொயோட்டா வாகனங்களில் 80% சதவிகித வாகனகள் இன்னும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்ற பெருமையோடு.

இன்று, எங்கோ ஏற்ப்பட்ட ஒரு சிறு தவறு 19 உயிர்களை பலிகொண்டுவிட காரணமாகிவிட்டது. காரணம் கண்டுபிடிக்கப்பட்டு (விசையுந்து பலகை) அதை சரிசெய்து கொடுக்க ஆவணம் செய்யப்பட்டும், அமெரிக்க வாகன சந்தையில் முதன்மை நிலமையை இழக்கும் தருவாயில் நிலமை உள்ளது.

3 + 5 + 6 + 7 = 19? இப்போதைக்கு கணக்க சரி பண்ண ஒரேவழிதான். டொயோட்டாவுக்கு (20)10-ல 7 1/2 (ஏழரை) = 19

மொழி படத்துல பிரகாஷ்ராஜ் சொல்லுவாரே... தாத்தா தினம் வெள்ள பூண்டு சாப்பிட்டு திடமா இருந்தார். ஒரு நால் மழைல நனைந்து ஒரு தும்மல் போட்டார், பொட்டுன்னு போயிட்டார். அவர அந்த வெள்ளப்பூண்டால் கூட காப்பாத்த முடியலன்னு. டொயோட்டாவுக்கு இன்று அதே நிலமை... கெய்ஸானால கூட காப்பாத்த முடியல.

என்ன செய்யமுடியும் 3,5,6,7 எல்லாத்தையும் விட ஏழரை பெரியதால்ல இருக்கு,