திரி சூலம்...

என்னமோ நான் இங்க பழைய சிவாஜி படத்தை பத்தி (மூன்று வேடம்) சொல்ல போரேன்னு நினைக்காதீங்க... இது நான் எழுதிய(தாக சொல்லப்பட்ட) காதல் கடிதத்தின் கையொப்பம்... அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு-பி கிளாஸ்... கோ எஜுகேஸன்... ஏ-செக்ஸ்ன் (மகளிர் மட்டும்) ஃபுல் ஆனா பி-செக்ஸன்-னுக்கு மாணவிகள் அனுப்புவது வழக்கம், இல்லைன்னா மாணவர் மட்டும்தான். ஆனா நான் படிச்ச 5 வருசம் வரைக்கும் (6-லிருந்து 10-வரை) 9-பி செக்ஸன் கோ-எட்தான்.

இந்த பி-செக்ஸன்ல இடம் கிடைக்காதான்னு காத்து கிடந்தவர்கள் பல பேர்... நான் இல்லீங்கோ... ஏன்னா என் "பவுண்டேஸனே" பி-ல இருந்துதான், 6-பி, 7-பி, 8-பி... ஆக வேறு மிட்டில் ஸ்கூல்லேருந்து புதுசா "எங்க" ஹை ஸ்கூலுக்கு வர பொண்ணுங்கள தவிர, பழைய பி-செக்ஸ்ன் மாணவர்கள் தாக்கு பிடிக்கனும்னா அவன் நல்லா படிக்கிற பையனா இருக்கும்... ஏன்னா கிளாஸ் டீச்சர் அவங்க செக்ஸன் நல்ல பேர் எடுக்கனும்கிற ஸ்டேடஜிய வச்சு, கழிசடைகலை சி-க்கும் டி-க்கும் கழிச்சி கட்டிடுவாங்க... இப்ப தெரியுதா நான் ஏன் கவலைபடுலேன்னு... சரி அதவிடுங்க... உங்க காதுல வர புகை இங்க அடிக்குது.

ஒரு நாள் காலை வழக்கம் போல் நான் வகுப்பில் (முதல் பெஞ்ச்ல) உட்கார்ந்து இருந்தேன், பசங்க எல்லம் ஒரு பக்கம்... வாசல் அருகில், பெண்கள் உள்பக்கம் உட்கார வைக்கப்பட்டு இருப்பார்கள்... எல்லா பெண்களும் எங்கள கடந்து தான் செல்ல வேண்டும்... அப்ப புதுசா திருச்சி-யில் இருந்து வந்த ஒரு பொண்ணு, அவங்க பேரு இந்திரா... கண்ணு நிறைய "ஐ-டெக்ஸ்" மை விட்டு பார்க்கவே பயமா இருக்கும்... என்ன ஒரு லுக்... அதாங்க ஒரு முறை முறைச்சிட்டு போனாங்க... சரி, அது மூஞ்சி அப்படித்தான் என்று நான் ஒன்னும் சீரியஸா எடுத்துக்கல... அதோட எனக்கு அந்த கிளாஸுல ரெண்டு போட்டியாளர்கள்... அதுல இது ஒரு பெண்... சரி எதுலயோ நம்ம அதிகமா மார்க் வாங்கிட்டோம் போல... அங்க புகையுதுன்னு நினைச்சிகிட்டேன்.

பள்ளி மணி ஓலித்தது... பிரேயர் முடிந்து வகுப்பிற்கு வந்தோம், என் வகுப்பு ஆசிரியர் (அவர் ஒரு மாக்கான்... நல்லா பாடம் நடத்துவார் ஆனால் அடிக்கும் போது வாட்ச கயட்டி வச்சுட்டு அடிப்பார்... நீங்களே யோசிச்சி பாருங்க அடி எப்படி இருக்கும்னு) வழக்கத்திற்கு மாறாக சிறிது நேரம் கழித்து வந்தார், வந்தவர் வெங்கடேஸ், ராஜா, பழனி மூன்று பேரும் வகுப்பு வெளியில் முட்டி போடுங்கன்னார்... எங்களுக்கு ஒன்னும் புரியல... ஏன்னு கேட்ட பின்னி எடுத்துடுவார்... சரின்னு 45 நிமிஷம் முட்டி போட்டோம்... இதுல என்ன கொடுமைன்னா இந்த 9-பி இருக்கே அது எங்க ஸ்கூலோட லேடீஸ் எண்ட்றன்ஸ்... அன்று லேட்டா வந்த எல்லா பொண்ணுங்களும் எங்கள பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு... மானம் போய் விட்டது.

வகுப்பு முடியும் நேரம் மூனு பேரையும் உள்ள கூப்பிட்டு வெங்கடேஸ் மூஞ்சியில் விட்டெரிந்தார் ஒரு பேப்பரை... படிக்க வந்தீங்களா இல்ல லவ் பண்ண வந்தீங்களா என கேட்டு ஒரு அடி (அவன் கொஞ்சம் குசும்பன்) வேறு அவனுக்கு, எனக்கு தெரியும் அவர் என்னை அடிக்க மட்டார் என்று... ஏன்னா நம்ம "பேக்கிரவுண்ட்" அப்படி... அங்க உள்ள வாத்தியார்ல பாதி பேர் எங்க அப்பா ஃபிரண்ட்... அதோட என் சகோதரிகள்... ஒன்னா... ரெண்டா... நாலு பேர் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தார்கள்... அவர் பங்குக்கு ஒரு முறை முறைத்துவிட்டு... அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றார். அடுத்து வந்த சகுந்தலா டீச்சரிடம்... இந்த பசங்க மன்னிப்பு கேட்டா உள்ள விடுங்க இல்ல வெளியில் நிற்கட்டும் என்று சொல்லிவிட்டார்.

அப்பாட, சகுந்தலா டீச்சர் வந்தது பெரிய ஆறுதல்... நான் அவர்கள் செல்ல குட்டி... என்னடா இதெல்லாம் என்றார்கள்... அப்போதுதான் அந்த "லவ் லெட்டர்" என் கைக்கு வந்தது... அதில் சில வாசாகம்... ஞாபகம் இல்லை... முடிவில் இருந்ததுதான் நம்ம " நெஞ்சில் நின்ற" வரிகள்...

இப்படிக்கு,
(திரிசூலம்)
வெங்கடேசன்
வே.இராஜா
பழனி

உடனே டீச்சரிடம் சொன்னேன்... இது எங்கள் கையெழுத்து இல்லை... வேறு யாரோ எங்கள் பெயரை "பஞ்சர்" பண்ணிவிட்டார்கள் என்று. முட்டி போட்ட அவமானம்... மூலை பர பரத்தது... யார் அந்த கள்ளன்/கள்ளி? மட மட வென்று பட்டியல் இட்டோம்... நம் மூவரின் பொது எதிரி யார்... நிட்சயம் பெண் இல்லை... பிறகு... வெங்கடேஸ் கிளாஸ் லீடர்... கிளாசில் பாதி பேர் அவனுக்கு எதிரி... பழனி... கோபம் வந்தால் பட் என்று அடித்து விடுவான்... அவனிடம் அடி வாங்கியவர் கடைசி ரெண்டு பெஞ்ச்... எனக்கு ஒருவன் கூட இல்லை... மீண்டும் ஒரு முறை படிதேன் அந்த கடிதத்தை... உடனே கேட்டேன்... டேய் கனகசபை எங்கே?

ஆகா பாதி கண்டு பிடித்து விட்டேன்... மனதிற்க்குள் என் தமிழ் ஆசானுக்கு நன்றி சொன்னேன்... தமிழில் பெயர் எழுத சொல்லி வர்புறுத்தியவர் அவர்தான். தமிழ் கட்டுரை நோட் திருத்துவது எனக்கு கொடுக்கப் பட்டு இருந்தது... ஓரளவுக்கு எல்லோருடைய கையெழுத்தும் எனக்கு அத்துபடி... வெங்கடேஸிடம் கத்தினேன்... டேய் நம்ம வகுப்புல "வே"-வன்னாவுல உள்ள ரெட்டை சுழி-ய/கொம்ப "எட்டு" மாதிரி போடுர ஓரே ஒருத்தன் கனகசபை... இது அவனோட எழுத்து-ன்னு சொன்னேன். லவ் லெட்டர் கொடுத்தானே... இன்னிக்கு லீவ் லெட்டர் கொடுத்தானா-ன்னு கேட்டேன்... லீடர் வெங்கடேஸுக்கு சந்தோஷம் தாங்கள... எடுறா சைக்கிள... விடுறா வல்லத்துக்கு என்றான்.

கனகசபையோட வீடு வல்லம் என்ற ஊர்... 5 கி.மி போயி... ஆளுக்கு 4 அரை விட்டுட்டு... அவன் கட்டுரை நோட்டோட வந்து சேர்ந்தோம்... ஆதாரம் வேணும்ல்ல?

நாங்கள் நிரபராதி என்று நிரூபித்த பின் நன்றி சொன்னேன்... பரலோகம் சென்று விட்ட என் தந்தை "வேணு" விற்கு.

No comments: