டிக்கெட்... டிக்கெட்... சார் டிக்கெட்

நாம் மரணத்தை குறிப்பிடும் போது அவர் சிவலோகத்திற்க்கு அல்லது பரலோகத்திற்க்கு டிக்கெட் வாங்கிவிட்டார் என்று சொல்லுவோம், அந்த சொல் எந்த அளவிற்க்கு நம் நடைமுறை வாழ்விற்க்கு பொருந்தும்?

உதாரணத்திற்க்கு நாமும் நம் நண்பரும் ஒரு பேருந்தில் பயணம் செல்லுவதாக வைத்துக்கொள்வோம், நீங்கள் சராசரி சாரீரம் கொண்ட நபர், உங்கள் நண்பரோ இரட்டை நாடி, இருப்பினும் அவருக்காக நாம் இரண்டு டிக்கெட் எடுக்க வேண்டாம், எந்த ஒரு பயணத்திலும்... அது தொடர்வண்டியோ அல்லது விமான பயணமோ... எதுவாயினும் பயணச்சீட்டு உருவத்தை பொருத்து வழங்கப்படுவது அல்ல. (பிறகு?....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

அப்படி பயணிக்கும் போது நமக்கு மரணம் சம்பவிக்கிறது என வைத்துக்கொள்வோம்.... பிறகு என்ன நடக்கும்?

நடத்துனர் சொல்வார்... அதை கீழே இறக்கு என்று.

நம் நண்பர் சொல்லுவார்... சார் அவர் டிக்கெட் எடுத்திருக்கிறார் எதுக்கு பாதியில் இறங்க வேண்டும் என்று?

யோவ்... வேணும்னா லக்கேஜா மேல போட்டு கொண்டுவா, இங்க சீட்டுல உட்கார்ந்து வரமுடியாது... சொன்னாக்கேளு

சார்... இது என்ன அநியாயம்? டிக்கெட் எடுத்தவர் இதோ உட்கார்ந்து இருக்கிறார், அவர் பையில் அவர் வாங்கிய பயணச்சீட்டு இருக்கிறது, பிறகு ஏன் லக்கேஜுல போடனும்? டிக்கெட் இவருக்குதானே கொடுத்தீங்க?

யோவ்... டிக்கெட் வாங்கனப்ப இவருக்குள்ள இருந்த அவரு இப்ப இல்லைய்யா?

யாரு இப்ப இல்ல? இவருதான் டிக்கெட் வாங்கினாரு, இவருக்குள்ள அவரு இருந்தாரா? அவர நான் பார்க்கலையே... நீங்க பார்த்தீங்களா? அப்ப அவருகிட்ட கொடுத்த டிக்கெட் இவரு பையில எப்படி வந்தது?

அய்யா, உடல் என்பது பருப்பொருள்... உயிர் என்பது பரம்பொருள்... அந்த பரம-ஆத்மா பரமாத்தாவை பார்க்க பரலோகத்திற்க்கு டிக்கெட் வாங்கி இருக்கிறது. இந்த டிக்கெட் இனி செல்லாது... இனி புதுசா ஒரு லக்கேஜ் டிக்கெட் வாங்கு.

(பகவத்கீதை சொற்பொழிவில் நான் கேட்டது... இறப்பு என்பது உடலுக்கு... உயிருக்கு அல்ல... சற்றே நகைச்சுவையுடன் இங்கு. ஒருவரின் பிறப்பை வைத்தோ, உருவத்தை வைத்தோ மதிப்பது தவறு... எல்லா உயிரும்/டிக்கெட்டும் ஒன்றே)

இன்பமான வாழ்க்கை...

இன்பமான வாழ்க்கை – இந்தியாவிலா? இல்லை அமெரிக்காவிலா?
(அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம் - 2009 தீபாவளி பட்டிமன்றம்)

நான் இந்தியாவில் என்று பேசியது...

இந்த அரங்கில் குழுமியிருக்கும் அனைத்து தமிழ் தமிழ் ரசிகப்பெருமக்களுக்கும், பட்டிமன்ற தலைவி திருமதி உமயாள் முத்து அவர்களுக்கும், இம்மேடையில் அமர்ந்திருக்கும் சக நண்பர்களுக்கும் என் வணக்கங்களும் தீபத்திரு நாள் வாழ்த்துக்களும்.

இன்பம், சந்தோசம் அல்லது மகிழ்ச்சி அமெரிக்காவில் இருக்கின்றது… ஏன் ஆப்பிரிக்காவில் இருக்கின்றது, ஐரோப்பாவில் இருக்கின்றது, அதை யாரும் மறுக்க முடியாது, அதானால்தான் நாம் எல்லோரும் பிறந்த மண்ணை, தாய் நாட்டை விட்டு இங்கு வந்திருக்கிறோம். சந்தோசம் என்பது ஒரு சத்தம் மாதிரி, அது அழுகின்ற குழந்தையின் அழுகையில் இருக்கிறது, நாம் விடுற குறட்டைல இருக்கிறது, கொத்து பரோட்டா போடுகிற கல்லில் இருக்கிறது, அதையா நாம் விரும்புகின்றோம்? இல்லையே... அதே சத்தம் இசையா ஒரு குழந்தையின் சிரிப்பில், இளையராஜாவின் பாடலில், குயிலின் கூவலில்... என்று இதமாக இருக்கிறது... நாம் அதைத்தான் விரும்புகிறோம். சத்தமாக இருந்தாலும் அது இசை... எதிரணியினர் பேசிய அமெரிக்காவில் சந்தோசம் என்கிற வாதம் வெறும் சத்தம். அது இசையா? இல்லை அது இம்சை.

எதிரணியில் பேசிய சகோதரி ஜெயா பேசிய போது பலவற்றை சொன்னாங்க, சுருக்கமா நாங்க நல்லாதான் நடக்கிறோம் என்கிறார், அவருக்கு பின் பேசிய நண்பர் தங்கமணி நடக்குரோம்ல்ல...என்கிறார். நானும், சகோதரி ராஜியும் என்ன சொல்கிறோம், அதே நடைய... சிங்கம் மாதிரி ராஜ நடையா நடங்கன்னு சொல்லுறோம், இல்ல நாங்க நண்டு மாதிரிதான் நடப்போம்கிறீங்க, மக்களே உங்களுக்கே தெரியும் நண்டு நேராக பார்க்கும் ஆனா பக்கவாட்டுலதான் நடக்கும், அதேமாதிரிதான் அமெரிக்க சந்தோசமும்.

நான் உங்களுக்கு என் அணியின் சார்பாக இரண்டு இன்பங்களை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். ஒன்று குழந்தை பருவ சந்தோசம், மற்றொன்று வாலிப பருவ சந்தோசம்... அமெரிக்காவில் 50 வயசு ஆனாலும் நாம யூத்து... யூத்து... யூத்து.

அமெரிக்க பெற்றோர்கள் எவ்வளவு பேர் குழந்தையை இடுப்பிலோ இல்லை தோளிலோ தூக்குறோம்? பிள்ளை ஸ்டோலர்ல வசதியா இருக்கான்னு சொல்லி ஷாப்பிங் போகும் போது அப்பா தள்ளுரார், வரும் போது அம்மா தள்ளுராங்க... அப்படி வளர்ந்த குழந்தை பின்னாலில் பெற்றோரை முதியோர் இல்லாத்தில் தள்ளுகிறது. உண்மயில் அந்த குழந்தை பெல்டை பிடிச்சி பிராண்டி அப்படியே தாவி தவிச்சிகிட்டு வரும். அது இன்பமா? இந்தியாவில் அந்த அம்மா... மகனே நான் பார்க்கின்ற உலகை நீயும் பார் என்று இடுப்பிலே தூக்கி அலைவால்... அப்பா... அம்மாவுக்கு ஒரு படி மேல போய், மகனை தோளில் தூக்கி வைத்து கொண்டு சொல்லுவார்... மகனே... நான் பார்க்காத உலகத்தையும் நீ பார் என்று, அம்மாவின் இடுப்பிலும், அப்பாவின் தோளிலும் உலகத்தை பார்த்த குழந்தை இன்பமா இருந்துச்சா இல்லை ஸ்டோலர்ல தவ்விகிட்டு வந்த குழந்தை இன்பமா இருந்துச்சா?

இப்படி வளந்த குழந்தைங்ககிட்ட ஒரு அழகான பெண்ணை காண்பித்து மூன்று வரிகளில் ஒரு கவிதை எழுதுன்னு சொன்னா... ஸ்டோலர் குழந்தை எழுதுனுது... “கொக்க கோலா” – கவிதையின் தலைப்பு, அட்லாண்டாவில் பிறந்து வளர்ந்த பிள்ளையா இருக்கும் போல… அப்ஜெக்டிவ் டைப்ல படிச்சி படிச்சி அழகான பெண்ணை ஆப்ஜெக்டா பார்க்கிறான்... மூன்று வரி கவிதை...

முப்பதியெட்டு...
இருபத்தி நாலு...
முப்பத்தியெட்டு,


தவறில்லை சந்தோசம்தான் நமக்கு. அம்மா தூக்கி வளர்ந்த பையன் சொன்னான்... “அம்மா” - கவிதையின் தலைப்பு, அம்மா இடுப்புல உட்கார்ந்து வளர்ந்த பையன் சப்ஜெக்ட்டிவா எழுதுனான்...

எர்கனாமிக் ஈஸி ச்சேரில் இல்லை...
எஸ்கிளாஸ் ஏஸி காரில் இல்லை...
உன் இடுப்புக்கு ஈடான இன்பம் –னு,


அடுத்த குறிப்பு... இங்கு அமெரிக்கவில் சந்தோசத்திற்க்கு ஒரு விடுமுறை அல்லது மணமகிழ் இடத்திற்கு செல்லுகிறோம்னு வெச்சுக்கோங்க, உதாரணத்திற்க்கு மூன்று நாள் டிஸ்னிலேண்ட் பயணம்ன்னு வெச்சுக்கோங்க...., ஆகா.. ஓகோன்னு ஒரே அலம்பலா இருக்கும், நாலாம் நாள் வீட்டுக்கு வந்தோன்ன ஒரு நண்பர் கேட்பார்... டிரிப் எல்லாம் எப்படி இருந்ததுன்னு? நாமும் சொல்லுவோம் நல்லா இருந்துங்க... நணபர்... ஓ அப்படியா-ன்னு சொல்றதுக்குள்ள... நாம என்ன சொல்லுவோம்... ஆனா கூட்டம்தான், வரிசைல நின்னு கால் வலிதான் மிச்சம்... பற்று அட்டைய தேய்த்ததுதான் சொச்சம்-ன்னு பல ம்-முவோம்.

அதே ஒரு கோடை விடுமுறைக்கு ஊருக்கு போயிட்டு வந்தத சொல்லும் போது... அவங்கள பார்த்தேன், இவங்கள பார்த்தேன், நான் படித்த பள்ளிக்கு போனேன், முக்குல உள்ள கடைக்கு போய் இலந்த அடை சாப்பிடேன், கடலை மிட்டாய் சாப்பிட்டேன், டீ குடிச்சேன்... அந்த இன்பம் பாருங்க இங்க பெட்டி கடை போடுற அளவுக்கு வந்திருக்கு. நீங்க சொல்லும்போதே... உடனே நண்பர் சொல்லுவார்... எங்க ஊர் பேருந்து நிலையத்துல ஒரு லஸ்ஸி போடுவான் பாருங்க-ன்னு அவர் ஆரம்பிப்பார்... இவ்வளவுக்கும் அவர் மூன்று வருசத்துக்கு முன்ன ஊருக்கு போயிட்டு வந்திருப்பார்... அந்த இன்பம் அவர் மனசுல மூன்று வருசமா வாழ்ந்துகிட்டு இருக்கு... அது அவர் அடுத்த முறை இந்தியா சென்று வரும் வரை வாழும். அங்க பாருங்க... ஒரு கோவை நண்பர் இப்பவே நெஞ்ச தடவுகிறார் (அது பழமை இல்லீங்கோ)... கோவை காந்திபுரம் பேருந்து நிலைய லாலா கடை இனிப்பு சாப்பிட்டத நினைத்து சந்தோசம். இங்க உட்கார்ந்திருக்கிற ஜெயாவா, அரங்கிற்க்கு வெளியில் என் மனைவியுடன் பார்த்தேன்... நடுவர் அவர்களே உங்களுக்கே தெரியும் அவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என்று... புடவைதான்.. என் மனைவி சொன்னாங்க... ஜெயா புடவை அருமையாயிக்குன்னு... ம்... ம்... நல்ல இருக்கா, போனமுறை இந்தியா போனப்ப எடுத்துட்டு வந்தேன்னு சொல்லி அப்படி ஒரு மகிழ்ச்சி. சரி ஏதோ மேடைக்காக பேசுகிறேன்னு நினைப்பீங்க...இல்லை. மற்றுமொரு நிகழ்வு... நான் இப்ப சொல்லப்போவது ஒரிரு மாதத்திற்க்குள் நடந்த நிகழ்வு. நான், நம் கேட்ஸ் செயலாளர் திரு.ரவி பழனியப்பன், கூட ஒரு நண்பர்... நான் பேர சொல்ல விரும்பல... தமிழ் கல்வி பயிற்சி முகாம் முடிந்து, மதியம் ஒரு சமுதாய கூட்டம், அருகில் சப்வே-ல சாப்பிட நண்பரின் வேனில் போனோம், வேன்ல பார்த்தா சில பல ஸிப்லாக் பாக்கெட்... பகோடா... ரொட்டி... நண்பர் சொன்னார்... எடுத்து சாப்பிடுங்க... ஊருலேருந்து எடுத்துட்டு வந்தேன்... அருமையா இருக்கும் அப்படின்னார்... சொல்லும்போது அப்படி ஒரு சந்தோசம்... ஆனா நான் அவர் பேர சொல்ல விரும்பல (அவர் எதிரணியில் வாதாடிய தங்கமணி).

ரொம்ப சுருக்கமா சொல்லானும்னா... அமெரிக்க வாழ்க்கையில் சந்தோசம் என்பது (தலையை தொட்டு) இங்க கேட்டு வேளை செய்வது, இந்திய வாழ்க்கையில் சந்தோசம் என்பது (நெஞ்சை தொட்டு)இங்க கேட்டு வேளை செய்வது... இத நான் உங்ளுக்கு சொல்லத் தேவையில்லை... ஏன்னா... நீங்க எல்லோரும் தமிழ் என்கிற அன்பால சேர்ந்த கூட்டம்... இன்பமான வாழ்க்கை இந்தியாவில்-ன்னு உங்க சார்பா நான் சொல்லிட்டேன்... நல்லதொரு தீர்ப்ப அதிரடியா நீதிபதி சொல்லுவாங்க... அதற்கு சரவெடியா உங்கள் கரகோசத்தை தாருங்கள் எனக்கூறி... வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன்... நன்றி...வணக்கம்.

குவாட்டர், ஹாஃப்... புஃல்

இது பழமையின் "அரைலூசு யார்" என்ற "என் கேள்விக்கு என்ன பதில்"?

இலங்கைக்கு சுற்றுலா போன எம்.பி-ங்க எல்லோரும் கால் (குவாட்டர்) லூசு.

ஒரு இந்தியனா, இனப்படுகொலைக்கு காரணமாணவரை நம் பக்கத்து மானிலத்திற்க்கு வர வைத்து நம்மை ஆழம் பார்க்கும் இந்திய அரசு அரை (ஹாஃப்) லூசு.

இது போதாது தமிழ் கடவுள் முருகனையும் தமிழகம் வந்து சேவித்து செல் இல்லையேல் அவர் கோவித்து கொள்வார் என அழைக்க காத்து கிடப்பவர்கள் முழு (புஃல்) லூசு.

அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போடும் நாம் வெறும் "காமெடி பீஸு"

அமெரிக்க பராசக்தி

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி எழுதி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்ட பராசக்தி வசனம் இது.

இந்த ஆண்டின் தீபாவளி மலர் நகைச்சுவையை மையக் கருவாக கொண்டதாலும், அமெரிக்கா வந்த நம்மில் பலர் கடந்து வந்த சில நிகழ்வுகளையும், பலர் சொல்ல நினைத்ததையும் சற்றே நகைச்சுவையுடன் உங்களுக்காக, யார் மனதையும் வருத்தப் படுத்த அல்ல... கற்பனை மட்டுமே.
(தீபாவளி விழா மலருக்காக எழுதியது – இங்கு மீள்பதிவாக )
***

அமெரிக்கா, லேண்ட் ஆஃப் ஆப்போர்ச்சுனிடீஸ்... விசித்திரம் நிறைந்த பல நாட்டவரை உள்ளே விட்டிருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டிருக்கின்றது, ஆனால் இந்த தேசியின் கூவல் விசித்திரமானதும் அல்ல கூவும் நான் புதிய தேசியும் அல்ல.

அமெரிக்க ஆசையிலே... ஒரு சாதாரண தேசியாக ஹெச்-1-ல் வந்தவன்தான் நான், இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதற்க்காக அடிக்கடி எம்ப்ளாயரை மாற்றினேன், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று ஹெச்-1-க்கு விண்ணப்பித்து லாட்டரிக்கு வழிவகுத்தேன், கிரீன் கார்ட் பிராசஸை ரிட்ராகேஸனுக்கு தள்ளினேன் – இப்படி எல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருகிறேன் நான்.

நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள், இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை.

அடிக்கடி எம்ப்ளாயரை மாற்றினேன்... இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதற்க்காக அல்ல, கிளையண்ட்டிடம் 90 டாலர் வாங்கி எனக்கு 30 டாலர் கொடுத்து... நாம் கொடுப்பதைத்தான் வாங்கிகொள்ள வேண்டும் என்று மார்தட்டினார்களே... அந்த எம்ப்ளாயரின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பத்றக்காக.

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று ஹெச்-1-க்கு விண்ணப்பித்து லாட்டரிக்கு வழிவகுத்தேன்... ஏன்? அதனால் இன்னொரு சக தேசிக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை கெடுக்க அல்ல, என்றோ ஒரு நாள் என்னுடைய தற்போதைய எம்ப்ளாயரிடம் வேலை போய்... நான் என் சோற்றுக்கு லாட்டரி அடிக்ககூடாது என்பத்றக்காக.

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை... தேசிகள் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்? நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்.

சுய நலம் என்பீர்கள்... என் சுய நலத்திலே பலரது குடும்ப நலமும் கலந்து இருக்கிறது. என் வேலையை பற்றி மட்டுமே கவலைப்படாமல்... எல்லா தேசிகளுக்காகவும் கவலைப்பட்டேன், தனக்கு சாப்பிட உணவு கிடைத்தால் ஊரையே கூப்பிடுமே... அந்த காக்கையை போல.

என்னை குற்றவாளி என்பீர்களா? இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறு எவ்வளவு என்று பார்க்க முடியும். தானே முன்வந்து சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும் எம்ப்ளாயர் இல்லை என் வேலையில்... அலுவலக அரசியலில் படாதபாடுபட்டேன் நான்.... தங்கமானவன் என்று யாரும் தட்டிக்கொடுக்கவில்லை என்னை... தத்தாரிகளை தாண்டி வந்திருக்கிறேன் நான்.

கேளுங்கள் என் கதையை, இவன் தேசி இல்லை பரதேசி என்று பரிகாசம் செய்யும்முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... தஞ்சை மாவட்டத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. நன்கு படித்தவரின் தலை எழுத்திற்க்கு நான் மட்டும் விதிவிலக்கா? சிங்கப்பூர் என்னை சீராட்டி வரவேற்றது, தகுதியை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது.

சரி அமெரிக்காவையும் ஒரு முறை பார்த்துவிடலாமே என்று அமெரிக்கா வந்தேன். இன்று லாட்டரி ஹெச்-1-னால் கலகலத்துபோய் இருக்கிறார்களே இந்த மேன்பவர் கம்பெனிகள்... அவர்கள் விரித்த வலையில் விழுந்த ஆயிரக் கணக்காணவர்களில் நானும் ஒருவன்... இண்டர்வியூ நன்றாக செய்தும் ரேட் சரியில்லை என்று பென்ச்ஞில் உட்கார வைக்கப்பட்டேன்... நல்ல ரேட்டிற்க்காக சீனியாரிட்டியை பறிகொடுத்தேன்... மனம் உடைந்தேன்... கடைசியில் கன்சல்டண்ட்டாக மாறினேன்.

காண வந்த அமெரிக்காவை கண்டேன்... அகண்டு விரிந்த மாகாணங்களாய்... ஆம் தறிகெட்ட தட்ப வெட்ப நிலையிலும், நாலு வேறுபட்ட நேரங்களுடனும். தரையிரங்கியா ஊரோ சிகாகோ... அடித்தது குளிர் என்னை சிக்-ஆக்க. தடுமாறிவிட்டது டிராபிகல் வெதரில் வளர்ந்த என் உடம்பு.

கூட்டாளிகளின் தொல்லை... குடிக்க சொன்னார்கள், எனக்கு பிடித்ததோ கல்யாணி... கூட்டாளிகள் ஹாட்டுக்கு அலைந்தார்கள்...கல்யாணிக்காக நான் அலைந்தேன். கண்டுபிடித்தோம் ஒரு கடையை, கல்யாணிக்காக காத்திருந்தனர்... அதில் காளையர் பலர், கண்ணியர் சிலர். கல்யாணியின் டிமாண்டை பார்த்து காசு கூடகேட்டான் அந்த கடைக்காரன்.

சம்பள பாக்கியில் சம்பந்தப்பட்டு லேபர்கோர்ட்டில் பாப்பர் சொல்லி நிற்க்கிறார்களே இந்த இன்க் கம்பெனிகாரர்கள்... பகட்டு வார்த்தையால் பலபேரை பதம் பார்த்தவர்கள்... என்னையும் மயக்க பார்த்தார்கள்... என் நண்பர்கள் தடுத்திருக்காவிடில் நானும் மாட்டியிருப்பேன். அமெரிக்க கம்பெனிகள் காப்பாற்ற வந்தன என்னை... பிரதி உபகாரமாய் டிராவலிங் ஜாப் பண்ணவேண்டும் என்று சொன்னார்கள். அதில் தலையாய பங்கு வகித்த கம்பெனி ஆர்.பி.எம். நாலு நாள் வேலை பார்த்தால் போதும் என்றனர்... ஆனால் அந்த நாலு நாளில் என் நாடி நரம்பையெல்லாம் கயட்டி விட்டான் அவன் கிளையண்ட்.

ஆர்.பி.எம்-ல் வேலை என்ற பெருமை... விட்டுவர மனமில்லை, குடும்பத்தை விட்டு அலையவும் விருப்பம் இல்லை... அதனால் டிராவலிங்கை கைவிட்டேன். விருப்பமான வேலையை விடுவது விந்தையல்ல... உலக உத்தமர் காந்தி... அகிம்சா மூர்த்தி... பாரட்-லா படித்தவர்... அவரே தேச சுதந்திரத்திற்க்காக வக்கீல் தொழிலை விட்டு இருக்கிறார்.

வேலை என்னை விரட்டியது... ஆரம்ப ப்ராஜக்ட் ஆர்கன்ஸாசில் என்றான்... அங்கு ஓடினேன்.... பக்கா ப்ராஜக்ட் பாஸ்டனில் என்றான்... அங்கும் ஓடினேன். ஜாப் ரிஸர்ஸன் என்னை பயமுறுத்தியது... ஓடினேன்... ஓடினேன்... அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களுக்கும் ஓடினேன். அந்த ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்... என் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் அந்த கிரீன் கார்ட் பிராசஸ் பண்ணும் ஐ.என்.எஸ்... ஈ.ஏ.டி கொடுத்தார்களா? ஈ.ஏ.டி கொடுத்தார்களா படித்த ஹெச்-4 உள்ளவர்களுக்கு?

(ஒருவர் இடைமறித்து: இவர் வேலைக்காகவோ இல்லை கிரீன் கார்டுக்காகவோ கூவ வில்லை... யாரோட ஈ.ஏ.டி-க்காகவோ கூவுகிறார்)

இல்லை... யாரோட ஈ.ஏ.டி-க்காகவோ இல்லை... அதுவும் என் கூவல் தான்... என் மனைவிக்காண கூவல்... பட்ட படிப்பு படித்த மனைவியின் படிப்பை, திறமையை வீணடிக்காமல் துட்டு பார்க்க நினைப்பதில் என்ன தவறு?

தகுதி உடையவர்களை ஈ.ஏ.டி-யை காரணம் காட்டி வீட்டில் உட்கார வைத்தது ஒரு குற்றம், தேசத்திற்க்கு திரும்பி விட்ட தேசிகளை கணக்கில் கொண்டுவராமல் பழைய கேப் கவுண்டை காட்டுவது இன்னொரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார் காரணம்?

ஹெச்-4 அத்தைகளுக்கு ஈ.ஏ.டி கொடுக்காதது யார் குற்றம்? ஹெச்-1-ல் வந்தவனின் குற்றமா? அல்லது ஒருவருக்கே பல ஹெச்-1 தந்த ஐ.என்.எஸ்-ன் குற்றமா?

பணம் பறிக்கும் இன்க் கம்பெனிகளை வளர விட்டது யார் குற்றம்? அமெரிக்கா வந்தால் போதும் என்று வரும் தேசிகளின் குற்றமா? அல்லது கஞ்சமாக பலர் நெஞ்சை மிதிக்கும் வஞ்சகர்களின் குற்றமா?

பிரையாரிட்டி டேட்டை பிண்ணுக்கு தள்ளியது யார் குற்றம்? கோட்டா என்ற பெயரில் அப்ளிகேஸன் ”துட்டை” உயர்த்தி தேசியிடம் ”ஆட்டை”-யை போடும் ஐ.என்.எஸ்-ன் குற்றமா? அல்லது ”துட்டை” வாங்கி கொண்டு பதிலே பேசாமல் தேசியின் நெற்றியில் ”பட்டை”-யை போடும் அட்டர்னியின் குற்றமா?

இந்த குற்றங்கள் திருத்தப்படும் வரை இந்த ஹெச்-1/ஹெச்-4-ன் கூவல்களும் குமுறல்களும் குறையப்போவது இல்லை. இதுதான் நான் இங்கு படித்த பாடம், பட்டறிவு... பரிதாபமான அமெரிக்க அனுபவம்.