நான் அமெரிக்கா வந்த புதிதில் நண்பர்களுடன் பொருட்கள் வாங்க கடைகளுக்கு போகும் போது நான் வாங்கிய பொருட்களுக்கான ரசீதை பொருட்கள் வாரியாக சரி பார்ப்பேன், நண்பர்கள் எல்லோரும் மொத்த தொகையை பார்த்து விட்டு ரசீதை பையில் போட்டுவிடுவார்கள். ஏம்பா சரி பார்க்கலையா என்றால்... இங்கெல்லாம் அனைத்தும் கணிப்பொறி மயம், பைசா சுத்தமா இருக்கும் என்று சொல்லி அதற்க்கு ஒரு வங்கி உதாரணத்தையும் சொன்னார்.
ஒரு வங்கியில் நம் நண்பர் கணக்கில் ஒரு பைசா மட்டும் இருந்ததாம், கணக்கை முடித்தால் அவர் கடன் பற்று வரலாறு (கிரெடிட் ஹிஸ்டரி) பாதிப்படையும் என்று கணக்கை முடிக்காமல், ஆனால் பற்று வரவு இல்லாமல், வைத்திருந்தாராம். அதற்க்கு அந்த வங்கியில் இருந்து மாதா மாதம் குறைந்த மூன்று பக்கம் பற்று வரவு அறிக்கை என்று, அதற்கு அஞ்சல் செலவு வேறு, இருந்தாலும் நம் காசு ஒரு பைசாவாக இருந்தாலும் ரொம்ப ஞாயமாக நடப்பார்கள் என்று சொன்னார்.
இந்த கதை ஏதோ ஒரு 5 மாதம் இல்லை 6 மாதம்தான், பிறகு கணக்கை முடித்து கொள்ள சொல்லியிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள், இந்த கூத்து ஒரு இரண்டு வருடமாக நடந்திருக்கிறது. நான் கூட நண்பர் அமெரிக்காவ ரொம்ப தூக்கி பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
இல்லை அது உண்மை என்பது போல் இன்று ஒரு நிகழ்வு. இந்த வருடம் ஜார்ஜியா மாஹானத்தில் வரிவிதிப்பில் சில சிறிய பிரச்சனைகள், சிலரிடம் சற்று அதிகமாக வரி வசூலித்து விட்டனர், இப்போது அதை சரி பார்த்து திரும்ப கொடுத்து வருகின்றனர். அந்த தொகைகள் ஒரு பைசாவிலிருந்து... சில நூறுகள் வரை.
இன்று செய்தியில் ஒருவருக்கு எட்டு பைசாவிற்க்கு, 42 காசு அஞ்சல் செலவு செய்து மாஹாண கருவூலத்தில் இருந்து காசோலை அனுப்பி இருக்கின்றனர், அரசாங்கத்திற்க்கு அஞ்சல் செலவு தெண்டம் என்று செய்தி வாசிப்பவர் கூறினார்.
உண்மையில் தெண்ட செலவு அந்த 42 பைசா மட்டும் அல்ல, காசோலை மற்றும் அதை அச்சு செய்ய, கிடைத்தவர்கள் அந்த எட்டு காசை பெற வங்கிக்கு கார் எடுத்து செல்ல, வங்கியிலிருந்து கருவூலத்திற்க்காண தகவல் மற்றும் பண பறிமாற்றம் என்று...பல தெண்டங்கள்.
இப்ப சொல்லுங்க...
அவங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... சரிதான?
ஹும், நம்மூருல ஒரு பேரூந்து நடத்துனர் பணிகளிடம் 5 பைசா பாக்கி கொடுக்காம, அதை சேர்த்து மாடி வீடு கட்டிட்டார்ன்னு நையாண்டி பண்ணுவோம், இங்க கணிப்பொறி மயம்... அரசாங்க கஜானாவை காலி செய்து கொண்டிருக்கின்றது.
வளையுலக நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.