ஓம் டெக்னாலஜியே நமக...

வீட்டில்...

ஒரு இடத்துக்கு போகனும்னா நேரம் காலத்தோட வர்றியா? எப்ப பாரு லேட்டு லேட்டு லேட்டு.
ஏன் சொல்ல மாட்டீங்க, மருந்துக்கு கூட ஒரு வீட்டு வேலை செய்யறது கிடையாது, எல்லாத்தையும் செய்துட்டுதான வரனும்.
நீ ஒன்னும் செய்யவேணாம் வா, மேக்கப்ப கூட கார்லயே போட்டுக்கலாம்.
காரில்...

என்னங்க, ரூம் லைட்ட ஆஃப் பண்ணினீங்களா?

என்ன எங்கிட்ட கேட்கிற? நீதான கடைசியா ரூம்லேருந்து வந்த... லைட்ட ஆஃப் பண்ணலியா?

இல்லீங்க நான் ஆஃப் பண்ணினதா ஞாபகம் இல்லை. அடுப்புல உங்களுக்கு குடிக்க வெண்ணீர் போட்டேன்... நீங்க படுத்தின பாட்டுல அதையும் ஆஃப் பண்ண மறந்திட்டேன்.

சரி சரி விடு... டென்ஷன் ஆவாத, என் ஃபோனில் ஹோம் பேஜ் போ, அதுல ஹோம் அப்லையன்ஸ்ன்னு ஒரு ஆப் இருக்குபாரு, அதுல எது ஆணாயிருக்கோ அதையெல்லாம் ஆஃப் பண்ணு.
சிறிது நேரத்திற்க்குப் (மேக்கப்) பிறகு...

என்னங்க, இன்னிக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இருக்கே, டி.வி ரெக்கார்டர ஸ்கெடியூல் பண்ணியிருக்கீங்களா?

நான் டி.வி.ரிமோட்ட தொட்டு ரெண்டுநாள் ஆவுது, எல்லாத்தையும் இப்ப வந்து கேளு, வீட்டுல அப்படி என்னாத்த வெட்டி முறிக்கிறியோ தெரியல.

ஆ...ஊ-ன்னா அதையே சொல்லுங்க. அதான் வெட்டினாலே துண்டாயிடுமே அதையேன் முறிக்கனும்? இல்ல தெரியாமத்தேன் கேட்கிறேன்... பதில் சொல்லுங்க.

போனாப் போவுது டி.விய ரெக்கார்ட் பண்ணுவோம்ன்னு நினைச்சேன்... கேள்வியா கேட்கிற நீ?

அட உடனே கோவிச்சிக்காதீங்க, வீட்டோட ரெண்டு சாவியும் நம்மகிட்ட இருக்கு, எப்படி யார விட்டு ரெக்கார்ட் பண்ண சொல்றது?

என் ஃபோனுல அதுக்கும் ஒரு ஆப் இருக்கு பாரு, அதுல டைரக்ட் டி.வி-ன்னு ஒன்னு இருக்குல்ல, அதுல சேனலையும், நாளையும், டையதையும் போட்டு ஓ.கே பட்டன அழுத்து.

என்னங்க... கமலஹாசன் ஒரு படத்துல சொல்லுவாறே... நிஜமாவே டெக்னாலஜி காட் ஸோ இம்ப்ரூவ்டுங்க.
வாயாலதான் சொல்லுற... வீட்டிற்க்கு செட்பண்ணியிருக்கிற ஆட்டோமேட்டிக் அலார்ம் சிஸ்டத்த நம்பாம இன்னும் ஊருலேருந்து எடுத்துகிட்டு வந்த திண்டுக்கல் தொட்டிப்பூட்டல்ல போட்டு பூட்டுற.

அய்யய்யோ...

என்னாச்சு... லிப்ஸ்டிக்க மறந்துட்டு வந்திட்டியா?

இல்லைங்க, பூட்ட பூட்டி இழுத்துப் பார்க்க மறந்துட்டேங்க... உங்க ஃபோனுல ஏதாவது ஆப் இருக்கா?

அம்மா தாயே... சத்தியாம அதுக்கெல்லாம் ஆப் இல்லம்மா, முடிஞ்சா எந்திரன் வசீகரன கூப்பிட்டு சிட்டி சும்மா இருந்தா ஒரு எட்டு போயி பூட்ட இழுத்து பார்த்திட்டு வர சொல்லு.

வேணாங்க வேணாம்... அது பூட்டோட கதவையும் இழுத்து பார்க்கும். சொந்த காசுல சூனியமா? வேண்டவே வேண்டாம்.

சும்மா படம் காட்ட...

அப்போது ஃபோன் சினுங்குகிறது...

அம்மாடி ஃபோனு உங்கிட்டதான இருக்கு, யாரு கூப்பிடுறாங்கன்னு பாரு...

உங்க பாஸுங்க...

அவன் கிடக்கிறான் லூஸு, நான் இன்னொரு லைன்ல இருக்கேன் என்னன்னு கேளு.

.....

என்ன சொன்னாரு?

நீங்க பண்ணுன அப்பிளிகேஷன் ஊத்திகிச்சாம், உங்க எல்லோருக்கும் ஆப்பு அடிக்க உங்க பெரிய லூஸு...சாரிங்க... பெரிய பாஸு வராராம், அதனால் திங்க கிழமை வொரிகிங் ஃபிரம் ஹோம் போடாம ஆப்பீஸுக்கு வரச் சொன்னார்.

ஏங்க ஃபோனுல ஆப் இருக்கு... ஆப் இருக்குன்னீங்க... இப்படி ஒரு ஆப்பு இருக்குன்னு சொல்லவே இல்ல... அவ்வ்வ்வ்வ்வ்வ்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

எனக்கு ஐ.ஜி-ய தெரியும்...

எனக்கு ஐ.ஜி-ய தெரியும்... அ-னா, ஆனா, இனா, ஈயானா... இப்படி எத்தனை போட்டாலும் அவருக்கு என்ன தெரியாது.

இந்த அக்டோபர் மாதத்தில் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் நிகழ்வுகள் வாயிலாக தமிழ் நாட்டின் சில சிறந்த மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது... அதற்க்காக கேட்ஸ் செயற்க்குழு உறுப்பினர்களுக்கு என் நன்றி.



1. தமிழக சட்டசபையின் சபாநாயகர் (ஸ்பீக்கர்) திரு.ஆவுடையப்பன். அவருடைய வட அமெரிக்க பயணத்தின் நடுவில் எங்கள் ஊரில் நடைபெற்ற தமிழ் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சிறு உரையாற்றினார். மிக எளிமையான, பழகுவதற்க்கு இனிமையானவராக இருந்தார். கழக கண்மணிகள் இல்லாம இருக்கும்போது (சிங்கம் சிங்கிளா வந்தது) நம் தலைவர்களின் உண்மையான அன்பையும் பண்பையும் நாம் காணலாம் என நினைக்கிறேன்.


2. தமிழக தன்னார்வத் தொண்டர் திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் அட்சயா ட்ரஸ்ட்-க்கு உதவி. எங்களால்முடிந்த அளவிற்க்கு ஒர் நிதிதிரட்டு போட்டி நடத்தினோம். நீங்களும் உதவலாம் நிதி அளிக்காமலே... எப்படியா? சி.என்.என் நடத்தும் கதாநாயகர்கள் வாக்கெடுப்பில் கிருஷ்ணனுக்கு ஒரு ஓட்டு போட்டால் போதும்... போட்டுட்டீங்களா? நன்றி.


3. தமிழக (டான்சி-யின் நிர்வாக இயக்குனர்) அரசு இயந்திரத்தில் ஒரு அப்பழுக்கற்ற மனிதர் திரு. உமாசங்கர் (இ.ஆ.ப). அமெரிக்காவின் ஐந்தாவது தூண் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு குழு சந்திப்பு இது. திரு. உமாசங்கர் அவர்களை 18 வருடங்களுக்கு முன் மயிலாடுதுறையில் சப்-கலெக்டராக என் மாணவர்களுடன் சந்தித்தேன்... சில தினங்களுக்கு முன் அதே முனைப்பில் ஊழலை எதிர்த்து போராடும் ஒரு போராளியாக.

இணைப்புகளை தொட்டுப்பாருங்கள்... உங்கள் மன ஓட்டமும் அதுவாக இருந்தால் தொடர்ந்து பாருங்களேன்... அது நிதி உதவியாக இருந்தாலும் சரி... ஊழலுக்கு மணியடிக்கும் நிர்வாக உதவியாக இருந்தாலும் சரி... நன்றி... நன்றி.

அய்யோ பாவம் பூதம்

ஒரு நாள் நம்ம ஆளு ஒரு முனிவரை சந்தித்தார். இறை நம்பிக்கை இல்லாத நம்ம ஆளு அந்த முனிவரை பார்த்து இறைவன் இருக்கிறாரா அப்படி இருந்தால் நமக்கு ஏன் இவ்வளவு கெடுதல்கள் தருகிறார், மேலும் அவர் நாம் வேண்டுவதை கொடுப்பதே இல்லை என்றான்.


அதற்க்கு முனிவரோ, சரி சரி அது ஒரு நம்பிக்கைதான் நாம்தான் நன்றாக வாழ முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

முனிவரின் பேச்சில் திருப்தி அடையாத நம்ம ஆளு, இல்லை இல்லை நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றான்.

முனிவரோ, சரி நீயே சொல் நான் என்ன செய்யவேண்டும் என்று, நானாவது நீ விரும்புவதை தர முயற்ச்சிக்கிறேன் என்றார்.

முனிவரோ முயற்ச்சி அது இது என்று பேசுகிறார் அவரிடம் மொத்தமா ஒரு சில கோடிய கேட்டா போடா கேடின்னு சொல்லிவிடுவார் என நினைத்து நம்ம ஆளு சமயோசிதமாய் விக்கிரமாத்தனிடம் வேலைசெய்த வேதாளத்தை மனதில் நினைத்து ஒரு நல்ல வேலை செய்யும் பூதம் வேண்டும், அதை வைத்து நான் முயற்ச்சி செய்து பார்க்கிறேன் என்றான்.

முனிவரும் சரி உன் ஆசைப்படியே நான் ஒரு பூதத்தை தருகிறேன், உனக்கு தெரியும் தானே நீ பூதத்திற்க்கு வேலை கொடுக்கவில்லை என்றால் அது உன்னை கொன்றுவிடும் என்பதையும் நினைவு படுத்தினார். (முனிவர் ரொம்ப நல்லவர், விதிமுறைகள் சிறிய எழுத்தில் இருக்கு, படிச்சி தெரிந்துகொள் இல்லையேல் பரலோகம் செல் என்று சொல்லவில்லை).

நம்ம ஆளுக்கு இப்போ ஒரு சின்ன சந்தேகம் கூடவே சந்தோஷமும்... ஒரு வேளை கடவுள் இருக்கிறாரோ... கேட்டவுடனே பூதம் கிடைத்து விட்டதே என்று சந்தேகம், பூதத்த வெச்சி கடவுளையும் ஆராய்ச்சி பண்ணிடலாம்ன்னு ஒரு சந்தோஷம்.

தினத் தேவைகளையும் தன் பணத் தேவைகளையும் முடித்து கொண்டபின் நம்ம ஆளுக்கு பூதத்தை வைத்து ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லாததால், இனி கடவுள் ஆராச்சி (ஆத்திகம் / நாத்திகம்) என முடிவு செய்து ஆன்மீகம் பற்றி அந்த தகவலை கொண்டுவா இந்த தகவலை கொண்டுவா என அனுப்பினான். அது அர்த்தமுள்ள இந்து மதம் முதல் ஓசோ வரை பல தகவல் நூல்களை அள்ளிவந்து கொடுத்தது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தை படித்தவுடன் நம்மாளுக்கு சந்தேகம்... இந்த பூதம் வேலைகளுக்கு நடுவில் முனிவரை சந்திக்குதோ, அவர்தான் இந்த நூலை நம்மகிட்ட கொடுக்க சொல்லியிருப்பாரோ என்று. சந்தேகத்தை தெளிவு செய்ய நாத்திகம் பற்றி ஆராய்வது என முடிவு செய்து அந்த தகவல்களை கொண்டுவருமாறு கட்டளையிட்டான் (அது பதிவுலம் தெரிந்த பூதம் போல, ரொம்ப சிரம படாமா வினைவு, தமிழ் ஓவியா போன்ற தளங்களில் இருந்து தகவல்களை நொடிப் பொழுதில் கொண்டுவந்து கொடுத்தது).

நம்ம ஆளூ ஆராய்ச்சிய ஆரம்பிக்கவே இல்லை, ஆனால் பூதம் மீண்டும் அய்யா வேலை என்றது... இப்போதுதான் நம்மாளுக்கு தெரிந்தது அவனிடம் பூத்ததிற்கு சொல்ல ஏதும் வேலையில்லை என்று. பூதம் கொன்றுவிடுமே என்ற பயம் வந்தது, என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு முனிவரின் நினைவுதான் முதலில் வந்தது. மீண்டும் அய்யா வேலை என்ற பூதத்திடம் சொன்னான்... என்னை முனிவரிடம் அழைத்துச்செல் என்று.

முனிவர் கேட்டார், நீ கேட்டதை கொடுத்தேனே இறைவனை பார்த்தாயா?
என்ன கைய புடிச்சி இழுத்தியா? (அய்யோ அய்யோ பதிவ ரொம்ப படிக்காதன்னு சொன்னா கேட்டாதான) என்ன இறைவனை பார்த்தாயா? சாமியாவது பூதமாவாது? இது மனுசன நிம்மதியா இருக்கவிடமாட்டேங்குது, அய்யா வேலை அய்யா வேலைங்குது, எனக்கு இந்த பூதம் வேண்டாம் நீங்களே திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்றான்.

நம்மாளு சாமி இருக்குதோ இல்லையோ... இனி இந்த முனிவர் இல்லை... பூதம் கேட்கிற வேலைக்கு இடையில் இவரு வேதம் படிக்கிறாரா இல்லை பூதத்திற்க்கு சாப்பிட சாதம் போடுறாரான்னு (என்ன ஒரு வில்லத்தனம்) பார்க்கிறேன் என அமைதியாக நின்றான்.

முனிவர் சொன்னார், சரி பூதத்தை பற்றி நீ இனி கவலைகொள்ளத் தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ செல் என்றார்.
அய்யா நான் உங்களுடன் அமர்ந்து கொஞ்சம் தியானம் செய்துவிட்டு போகிறேன் என்றான்.


முனிவரும் சரி அப்படியே ஆகட்டும் என்றார். அதற்க்குள் பூதம் அய்யா வேலை என்றது. முனிவர் சொன்னார், காட்டிற்க்குச் சென்று கழு மரம் செய்ய கூடிய ஒரு நல்ல மரத்தைக் கொண்டுவா என்றார். உடனே கொண்டு வந்தது. சரி அதில் நன்கு விளக்கெண்ணையை தடவு என்றார்... ஆச்சு என்றது பூதம். சரி நான் கூப்பிடும் வரை அதில் ஏறி இறங்கி கொண்டிரு, தேவையிருப்பின் உன்னை அழைக்கிறேன் என்றார். பூதமும் அப்படியே ஆகட்டும் என்று தன் வேலையை பார்க்க போயிற்று… அய்யோ பாவம் பூதம்.


முனிவரோ அமைதியாக வேதங்களை படிக்க ஆரம்பித்து விட்டார்.

முந்தி முந்தி...

முந்தி முந்திச் சென்றேன்
முச்சந்தியில் முட்டி நின்றேன்
முதலில் முட்டியது நானில்லை என்று
முரண்டு பிடித்ததில் - பயன் ஏதுமில்லை.


அபராத புள்ளிகள் மூன்று
அபராத வெள்ளிகள் முன்னூறு
முச்சந்தி என்பதால்
மூன்றும் முன்னூறும் - முழுவதுமாய் எனக்கே.


முந்திச்செல் என்று ஒரு மூளை
ஊளையிட்டாலும், இப்போது
மூன்றும் முன்னூறும்தான் முந்திச் செல்கின்றன
முந்தாமல் நான் – முழுக்கட்டுப் பாட்டில்.

மூன்று முகம்

முகப்புத்தகத்தில் தன் நிஜமுகத்தை இழந்து
அறி-முகமில்லாரோடு அன்பாய் பழகி
முகமெல்லாம் சந்தோஷம் – உலகமெங்கும் நண்பர்கள்
முகம்மறந்து போனேன் – உள்ளூர் நண்பர்கள் யாரென்று.

முகப்புத்தகத்தை கண்டெடுத்தவன்
முகமறியா முன்கோபம் கொண்டேன்
முட்டாள், ஐனூறு மில்லியன் முகத்தை ஒருமுகமாக்கி
எழுனூறு பில்லியன் மணித்துளிகளை மரணித்துவிட்டானென்று.

வாய்ப்புகள் நிறைந்த நாட்டில் தற்போது வேலையிழப்பு
அதனால் கல்வியின் முகவரியிழப்பு - வேதனை
கொட்டி கொடுத்திருக்கிறாய் நூறு மில்லியன்
இன்று உன் முகமும் தெரிந்தது, அகமும் தெரிந்த்து
இருபத்தியாறு வயதில் இணையில்லா – சாதனை.

மெது ஓட்டம்...


அந்தி மாலை
பசுமைச் சாலை

உச்சியிலிருக்கு நிலவு
வீடு இருக்கு தொலைவு




குறிலைக் (பம்பு) கண்டேன் வந்தது தாகம்
நெடிலைக் (பாம்பு) கண்டதும் கொண்டேன் வேகம்

விரைந்து வந்து தொட்டேன் இல்லக் கதவு
மறக்கும் முன் இட்டேன் இந்தப் பதிவு.

அன்றும்... இன்றும் – 2

அன்று, மாலை வழக்கம் போல் பூப்பந்து விளையாடிவிட்டு சற்று இளைப்பாறும் வேளையில் அந்த வருடத்திற்க்காண விளையாட்டுப் போட்டி நடத்துவது குறித்து பேச்சு வந்தது. உடனே ஒரு மூத்த உறுப்பினர் சொன்னார் சரி அனைவரும் இன்று இரவு யோசித்து வந்து சொல்லுங்கள், இந்த வருடம் சென்ற வருடத்தைவிட சிறப்பாக செய்ய வேண்டும். மற்றவைகளை நாளை பேசலாம். (ஏன் பெரிசு எங்ககிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கேட்டுபுட்டு சொல்ல மாட்டீங்களா?)

இன்று, நண்பர்கள் ஒருவருக்கொருவர் கைத்தொலைபேசியில் அழைத்து இந்த ஆண்டு கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடத்துவது குறித்து பேச, உடனே ஓரிரு தினங்களில் ஒரு குழுச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. (என்னப்பா எல்லோருக்கும் ஓ.கே-தான? இல்லன்னா சொல்லுங்க சந்திப்ப ரெண்டு நாள் தள்ளி வச்சிக்கலாம்...அது சரி)

மாலை விளையாட்டு முடிந்தவுடன் மூத்த உறுப்பினர் வழக்கம் போல் தேனீர் அருந்தும் போது அனைவரையும் விழா பற்றிய விருப்பங்களை கேட்டு சிறப்பு விருந்தினராக யாரை அழைப்பது, முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுத்தொகை எவ்வளவு, யார் யார் எந்த வேளையை பார்க்க போகிறோம் என்பதும், எப்போது என்பதும் முடிவாகியது. (திண்ணையும் சொம்பும் இல்லாமலேயே தீர்ப்ப சொல்லி முடிச்சிட்டா எப்பூடி? ரொம்ப லோக்கலால்ல இருக்கு!)

குழுச் சந்திப்பில் முதல் வேலையாக, வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு யார் இந்த நிகழ்வை/குழுவை தலைமை தாங்கி நடத்துவது என்பதற்க்காண வாக்கெடுப்பு மற்றும் வெவ்வேறு குழுக்களின் தலைமை மற்றும் குழு உறுப்பினர்கள் யார் என முடிவு செய்யப்பட்டது. (என்னதான் இருதாலும் படிச்சவங்க இல்லியா? ஜனநாயக முறைப்படி நடந்துகிறாங்க... திங்க் குளோபல்!!)

நான் நம்ம காவல் நிலையம் சென்று புதிதாக வந்துள்ள சட்ட ஒழுங்கு ஆய்வாளரை விழாவிற்க்கு அழைக்கிறேன், அவர் விளையாட்டு பிரியராம். (திடலிலேயே முடிவு எடுத்திடுராங்க, திடமான முடிவாய் எடுக்கிறாங்க).

நான் நம்ம நகைக் கடைக்கார்ர பார்த்து பரிசுக்காண ஏற்பாட்டை செய்திடுறேன். ( நம்பிக்கையும் வாக்கும் தானே வாழ்க்கை)

நான் நம்ம அரிசி மண்டி தம்பி, மற்றும் மளிகை கடைகளை பார்த்து உணவுக்கு பொருட்களை தயார் பண்ணிடுறேன். (வருசா வருசா கேட்டாளும், எப்படி அண்ணே உதவி பண்ணுறீங்க... ரொம்ப பெரிய மனசுன்னே)

நான் நம்ம அச்சகத்துல கொஞ்சம் நோட்டீஸ் அடிக்க சொல்லிட்டு, அப்படியே நிருபரை பார்த்து செய்திதாள்கள்ல வர ஏற்பாடு பண்ணிடுறேன். (ஹேய்... அந்த கலர் நோட்டீஸ்தான? சைக்கிள்ல போயி குடுப்பீங்களா இல்லை மாட்டு வண்டியா?)


டேய் குட்டிப் பசங்களா... நீங்கதாண்டா களப்பணி எல்லாம் செய்யனும்... தயாரா இருங்க. (சின்ன பிள்ளைகலா வேலை செய்தாலும் சிறப்பா செய்வோம்ல)

விழாக் குழு தலைவர்... யார் சீஃப் கஸ்ட காண்டாக் பண்ண போறீங்க? நம்ம குழுவப் பத்தி ஒரு மெயில் அனுப்பி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கோங்க. ஒன்னுக்கு ரெண்டுபேரா பார்த்து பேசுங்க. ஒருத்தவங்கதான் வருவதா இருந்தா அவங்களே எல்லா பரிசையும் கொடுக்கட்டும். ரெண்டு பேர் வந்தா இன்னொருத்தவங்க நம்ம வாலியண்டர்ஸுக்கு மெமண்டோ கொடுக்கிற மாதிரி பண்ணிடலாம் (ரூம் போட்டு யோசிக்கிறாங்க...பிளான் – ஏ, பிளன் – பி எல்லாம் இல்லாட்டி எப்பூடி?)

பைனான்ஸ் டீம்: பட்ஜெட் தயார் பண்ணிகிட்டு இருக்கோம், ஸ்பான்ஸர்ஸ் லிஸ்ட் அடுத்த வாரம் தயார் ஆயிடும். (பார்த்து பட்ஜெட்ல துண்டு விழுந்திட போகுது....அவ்வ்வ்வ்வ்)

லாஜிஸ்டிக் டீம்: நாங்க விளையாட்டு திடல், பந்து மற்றும் வந்து போகிறவர்களுக்காண சாப்படு உதவி/ஏற்பாடுன்னு வேலைய பிரிச்சிக்கிறோம். (ஸ்பான்ஸ்ர்ஸ்க்கு பூத் கொடுக்கனுமா? அவங்க எல்லாம் கோவிச்சிக்க போறாங்க)

கம்மியூனிகேஸன்ஸ் டீம்: நாங்க மெயில் எஸ்கலேசன், கடைகளுக்கு ஃபிளையர்ஸ், நியூஸ் ஜேர்னல்ஸ் போஸ்டிங் (தமிழ் மணத்துல உண்டா?) வேலைகள பார்த்துக்கிறோம். (அய்யோ... இன்னொரு ஜங்க் மெய்லா? ஏன் பில்டர் ஆவுல?)

யூத் டீம்... நீங்க உங்களுக்கு பிடிச்ச டீம்ல உதவி பண்ணுங்க. உங்க திறமைகள வளர்த்துக்க இந்த விழாவை சரியா பயன்படுத்திக்கோங்க. (அதெல்லாம் நாங்க பண்ணுவோம், நீங்க எல்லாம் உள்குத்து இல்லாம வேலை செய்ங்க)

அன்றும் விழாக்கள் சிறப்பாக நடந்தன,
இன்றும் விழாக்கள் சிறப்பாக நடக்கின்றன.

அன்று ஒரு குடும்பமாய்...
இன்று பல குழுக்களாய்.