அய்யோ பாவம் பூதம்

ஒரு நாள் நம்ம ஆளு ஒரு முனிவரை சந்தித்தார். இறை நம்பிக்கை இல்லாத நம்ம ஆளு அந்த முனிவரை பார்த்து இறைவன் இருக்கிறாரா அப்படி இருந்தால் நமக்கு ஏன் இவ்வளவு கெடுதல்கள் தருகிறார், மேலும் அவர் நாம் வேண்டுவதை கொடுப்பதே இல்லை என்றான்.


அதற்க்கு முனிவரோ, சரி சரி அது ஒரு நம்பிக்கைதான் நாம்தான் நன்றாக வாழ முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

முனிவரின் பேச்சில் திருப்தி அடையாத நம்ம ஆளு, இல்லை இல்லை நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றான்.

முனிவரோ, சரி நீயே சொல் நான் என்ன செய்யவேண்டும் என்று, நானாவது நீ விரும்புவதை தர முயற்ச்சிக்கிறேன் என்றார்.

முனிவரோ முயற்ச்சி அது இது என்று பேசுகிறார் அவரிடம் மொத்தமா ஒரு சில கோடிய கேட்டா போடா கேடின்னு சொல்லிவிடுவார் என நினைத்து நம்ம ஆளு சமயோசிதமாய் விக்கிரமாத்தனிடம் வேலைசெய்த வேதாளத்தை மனதில் நினைத்து ஒரு நல்ல வேலை செய்யும் பூதம் வேண்டும், அதை வைத்து நான் முயற்ச்சி செய்து பார்க்கிறேன் என்றான்.

முனிவரும் சரி உன் ஆசைப்படியே நான் ஒரு பூதத்தை தருகிறேன், உனக்கு தெரியும் தானே நீ பூதத்திற்க்கு வேலை கொடுக்கவில்லை என்றால் அது உன்னை கொன்றுவிடும் என்பதையும் நினைவு படுத்தினார். (முனிவர் ரொம்ப நல்லவர், விதிமுறைகள் சிறிய எழுத்தில் இருக்கு, படிச்சி தெரிந்துகொள் இல்லையேல் பரலோகம் செல் என்று சொல்லவில்லை).

நம்ம ஆளுக்கு இப்போ ஒரு சின்ன சந்தேகம் கூடவே சந்தோஷமும்... ஒரு வேளை கடவுள் இருக்கிறாரோ... கேட்டவுடனே பூதம் கிடைத்து விட்டதே என்று சந்தேகம், பூதத்த வெச்சி கடவுளையும் ஆராய்ச்சி பண்ணிடலாம்ன்னு ஒரு சந்தோஷம்.

தினத் தேவைகளையும் தன் பணத் தேவைகளையும் முடித்து கொண்டபின் நம்ம ஆளுக்கு பூதத்தை வைத்து ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லாததால், இனி கடவுள் ஆராச்சி (ஆத்திகம் / நாத்திகம்) என முடிவு செய்து ஆன்மீகம் பற்றி அந்த தகவலை கொண்டுவா இந்த தகவலை கொண்டுவா என அனுப்பினான். அது அர்த்தமுள்ள இந்து மதம் முதல் ஓசோ வரை பல தகவல் நூல்களை அள்ளிவந்து கொடுத்தது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தை படித்தவுடன் நம்மாளுக்கு சந்தேகம்... இந்த பூதம் வேலைகளுக்கு நடுவில் முனிவரை சந்திக்குதோ, அவர்தான் இந்த நூலை நம்மகிட்ட கொடுக்க சொல்லியிருப்பாரோ என்று. சந்தேகத்தை தெளிவு செய்ய நாத்திகம் பற்றி ஆராய்வது என முடிவு செய்து அந்த தகவல்களை கொண்டுவருமாறு கட்டளையிட்டான் (அது பதிவுலம் தெரிந்த பூதம் போல, ரொம்ப சிரம படாமா வினைவு, தமிழ் ஓவியா போன்ற தளங்களில் இருந்து தகவல்களை நொடிப் பொழுதில் கொண்டுவந்து கொடுத்தது).

நம்ம ஆளூ ஆராய்ச்சிய ஆரம்பிக்கவே இல்லை, ஆனால் பூதம் மீண்டும் அய்யா வேலை என்றது... இப்போதுதான் நம்மாளுக்கு தெரிந்தது அவனிடம் பூத்ததிற்கு சொல்ல ஏதும் வேலையில்லை என்று. பூதம் கொன்றுவிடுமே என்ற பயம் வந்தது, என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு முனிவரின் நினைவுதான் முதலில் வந்தது. மீண்டும் அய்யா வேலை என்ற பூதத்திடம் சொன்னான்... என்னை முனிவரிடம் அழைத்துச்செல் என்று.

முனிவர் கேட்டார், நீ கேட்டதை கொடுத்தேனே இறைவனை பார்த்தாயா?
என்ன கைய புடிச்சி இழுத்தியா? (அய்யோ அய்யோ பதிவ ரொம்ப படிக்காதன்னு சொன்னா கேட்டாதான) என்ன இறைவனை பார்த்தாயா? சாமியாவது பூதமாவாது? இது மனுசன நிம்மதியா இருக்கவிடமாட்டேங்குது, அய்யா வேலை அய்யா வேலைங்குது, எனக்கு இந்த பூதம் வேண்டாம் நீங்களே திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்றான்.

நம்மாளு சாமி இருக்குதோ இல்லையோ... இனி இந்த முனிவர் இல்லை... பூதம் கேட்கிற வேலைக்கு இடையில் இவரு வேதம் படிக்கிறாரா இல்லை பூதத்திற்க்கு சாப்பிட சாதம் போடுறாரான்னு (என்ன ஒரு வில்லத்தனம்) பார்க்கிறேன் என அமைதியாக நின்றான்.

முனிவர் சொன்னார், சரி பூதத்தை பற்றி நீ இனி கவலைகொள்ளத் தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ செல் என்றார்.
அய்யா நான் உங்களுடன் அமர்ந்து கொஞ்சம் தியானம் செய்துவிட்டு போகிறேன் என்றான்.


முனிவரும் சரி அப்படியே ஆகட்டும் என்றார். அதற்க்குள் பூதம் அய்யா வேலை என்றது. முனிவர் சொன்னார், காட்டிற்க்குச் சென்று கழு மரம் செய்ய கூடிய ஒரு நல்ல மரத்தைக் கொண்டுவா என்றார். உடனே கொண்டு வந்தது. சரி அதில் நன்கு விளக்கெண்ணையை தடவு என்றார்... ஆச்சு என்றது பூதம். சரி நான் கூப்பிடும் வரை அதில் ஏறி இறங்கி கொண்டிரு, தேவையிருப்பின் உன்னை அழைக்கிறேன் என்றார். பூதமும் அப்படியே ஆகட்டும் என்று தன் வேலையை பார்க்க போயிற்று… அய்யோ பாவம் பூதம்.


முனிவரோ அமைதியாக வேதங்களை படிக்க ஆரம்பித்து விட்டார்.

7 comments:

நட்புடன் ஜமால் said...

முன்னெல்லாம் முடில்ல குடுப்பாங்க பூதத்திற்கு

நிறைய கருத்து மாம்ஸ்

Chitra said...

அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி.

பழமைபேசி said...

ஆகா... நம்ம இராசா நல்ல கதை எல்லாம் சொல்லுறாரு... நன்றிங்கோ!!!

மதுரை சரவணன் said...

super story . vaalththukkal.

மயிலாடுதுறை சிவா said...

ராஜா

கதை எல்லாம் எழத ஆரம்பித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்!

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Unknown said...

கதை நல்லா இருக்கே! உங்களுக்கு, பிள்ளைங்களுக்கு கதை சொல்லி பழக்கம் போல! விளக்கெண்ணெய் நல்ல ஐடியா. உறியடி நினைப்பு வந்திச்சு...!

அரசூரான் said...

@ஜமால்
@சித்ரா
@பழமை
@சரவணன்
@சிவா
@கெ.பி
நண்பர்களே... உங்கள் வருகைகு நன்றி.

கதையெல்லாம் இல்லீங்கோ, ராம ஜென்ம பூமி தீர்ப்பு வந்தப்போ ஒரு தாக்கத்துல எழுத ஆரம்பிச்சேன்... நேரமின்மையால் கொஞ்சம் மாத்தி இப்போ போட்டேன்... அவ்வளவே.