இன்பமான வாழ்க்கை...

இன்பமான வாழ்க்கை – இந்தியாவிலா? இல்லை அமெரிக்காவிலா?
(அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம் - 2009 தீபாவளி பட்டிமன்றம்)

நான் இந்தியாவில் என்று பேசியது...

இந்த அரங்கில் குழுமியிருக்கும் அனைத்து தமிழ் தமிழ் ரசிகப்பெருமக்களுக்கும், பட்டிமன்ற தலைவி திருமதி உமயாள் முத்து அவர்களுக்கும், இம்மேடையில் அமர்ந்திருக்கும் சக நண்பர்களுக்கும் என் வணக்கங்களும் தீபத்திரு நாள் வாழ்த்துக்களும்.

இன்பம், சந்தோசம் அல்லது மகிழ்ச்சி அமெரிக்காவில் இருக்கின்றது… ஏன் ஆப்பிரிக்காவில் இருக்கின்றது, ஐரோப்பாவில் இருக்கின்றது, அதை யாரும் மறுக்க முடியாது, அதானால்தான் நாம் எல்லோரும் பிறந்த மண்ணை, தாய் நாட்டை விட்டு இங்கு வந்திருக்கிறோம். சந்தோசம் என்பது ஒரு சத்தம் மாதிரி, அது அழுகின்ற குழந்தையின் அழுகையில் இருக்கிறது, நாம் விடுற குறட்டைல இருக்கிறது, கொத்து பரோட்டா போடுகிற கல்லில் இருக்கிறது, அதையா நாம் விரும்புகின்றோம்? இல்லையே... அதே சத்தம் இசையா ஒரு குழந்தையின் சிரிப்பில், இளையராஜாவின் பாடலில், குயிலின் கூவலில்... என்று இதமாக இருக்கிறது... நாம் அதைத்தான் விரும்புகிறோம். சத்தமாக இருந்தாலும் அது இசை... எதிரணியினர் பேசிய அமெரிக்காவில் சந்தோசம் என்கிற வாதம் வெறும் சத்தம். அது இசையா? இல்லை அது இம்சை.

எதிரணியில் பேசிய சகோதரி ஜெயா பேசிய போது பலவற்றை சொன்னாங்க, சுருக்கமா நாங்க நல்லாதான் நடக்கிறோம் என்கிறார், அவருக்கு பின் பேசிய நண்பர் தங்கமணி நடக்குரோம்ல்ல...என்கிறார். நானும், சகோதரி ராஜியும் என்ன சொல்கிறோம், அதே நடைய... சிங்கம் மாதிரி ராஜ நடையா நடங்கன்னு சொல்லுறோம், இல்ல நாங்க நண்டு மாதிரிதான் நடப்போம்கிறீங்க, மக்களே உங்களுக்கே தெரியும் நண்டு நேராக பார்க்கும் ஆனா பக்கவாட்டுலதான் நடக்கும், அதேமாதிரிதான் அமெரிக்க சந்தோசமும்.

நான் உங்களுக்கு என் அணியின் சார்பாக இரண்டு இன்பங்களை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். ஒன்று குழந்தை பருவ சந்தோசம், மற்றொன்று வாலிப பருவ சந்தோசம்... அமெரிக்காவில் 50 வயசு ஆனாலும் நாம யூத்து... யூத்து... யூத்து.

அமெரிக்க பெற்றோர்கள் எவ்வளவு பேர் குழந்தையை இடுப்பிலோ இல்லை தோளிலோ தூக்குறோம்? பிள்ளை ஸ்டோலர்ல வசதியா இருக்கான்னு சொல்லி ஷாப்பிங் போகும் போது அப்பா தள்ளுரார், வரும் போது அம்மா தள்ளுராங்க... அப்படி வளர்ந்த குழந்தை பின்னாலில் பெற்றோரை முதியோர் இல்லாத்தில் தள்ளுகிறது. உண்மயில் அந்த குழந்தை பெல்டை பிடிச்சி பிராண்டி அப்படியே தாவி தவிச்சிகிட்டு வரும். அது இன்பமா? இந்தியாவில் அந்த அம்மா... மகனே நான் பார்க்கின்ற உலகை நீயும் பார் என்று இடுப்பிலே தூக்கி அலைவால்... அப்பா... அம்மாவுக்கு ஒரு படி மேல போய், மகனை தோளில் தூக்கி வைத்து கொண்டு சொல்லுவார்... மகனே... நான் பார்க்காத உலகத்தையும் நீ பார் என்று, அம்மாவின் இடுப்பிலும், அப்பாவின் தோளிலும் உலகத்தை பார்த்த குழந்தை இன்பமா இருந்துச்சா இல்லை ஸ்டோலர்ல தவ்விகிட்டு வந்த குழந்தை இன்பமா இருந்துச்சா?

இப்படி வளந்த குழந்தைங்ககிட்ட ஒரு அழகான பெண்ணை காண்பித்து மூன்று வரிகளில் ஒரு கவிதை எழுதுன்னு சொன்னா... ஸ்டோலர் குழந்தை எழுதுனுது... “கொக்க கோலா” – கவிதையின் தலைப்பு, அட்லாண்டாவில் பிறந்து வளர்ந்த பிள்ளையா இருக்கும் போல… அப்ஜெக்டிவ் டைப்ல படிச்சி படிச்சி அழகான பெண்ணை ஆப்ஜெக்டா பார்க்கிறான்... மூன்று வரி கவிதை...

முப்பதியெட்டு...
இருபத்தி நாலு...
முப்பத்தியெட்டு,


தவறில்லை சந்தோசம்தான் நமக்கு. அம்மா தூக்கி வளர்ந்த பையன் சொன்னான்... “அம்மா” - கவிதையின் தலைப்பு, அம்மா இடுப்புல உட்கார்ந்து வளர்ந்த பையன் சப்ஜெக்ட்டிவா எழுதுனான்...

எர்கனாமிக் ஈஸி ச்சேரில் இல்லை...
எஸ்கிளாஸ் ஏஸி காரில் இல்லை...
உன் இடுப்புக்கு ஈடான இன்பம் –னு,


அடுத்த குறிப்பு... இங்கு அமெரிக்கவில் சந்தோசத்திற்க்கு ஒரு விடுமுறை அல்லது மணமகிழ் இடத்திற்கு செல்லுகிறோம்னு வெச்சுக்கோங்க, உதாரணத்திற்க்கு மூன்று நாள் டிஸ்னிலேண்ட் பயணம்ன்னு வெச்சுக்கோங்க...., ஆகா.. ஓகோன்னு ஒரே அலம்பலா இருக்கும், நாலாம் நாள் வீட்டுக்கு வந்தோன்ன ஒரு நண்பர் கேட்பார்... டிரிப் எல்லாம் எப்படி இருந்ததுன்னு? நாமும் சொல்லுவோம் நல்லா இருந்துங்க... நணபர்... ஓ அப்படியா-ன்னு சொல்றதுக்குள்ள... நாம என்ன சொல்லுவோம்... ஆனா கூட்டம்தான், வரிசைல நின்னு கால் வலிதான் மிச்சம்... பற்று அட்டைய தேய்த்ததுதான் சொச்சம்-ன்னு பல ம்-முவோம்.

அதே ஒரு கோடை விடுமுறைக்கு ஊருக்கு போயிட்டு வந்தத சொல்லும் போது... அவங்கள பார்த்தேன், இவங்கள பார்த்தேன், நான் படித்த பள்ளிக்கு போனேன், முக்குல உள்ள கடைக்கு போய் இலந்த அடை சாப்பிடேன், கடலை மிட்டாய் சாப்பிட்டேன், டீ குடிச்சேன்... அந்த இன்பம் பாருங்க இங்க பெட்டி கடை போடுற அளவுக்கு வந்திருக்கு. நீங்க சொல்லும்போதே... உடனே நண்பர் சொல்லுவார்... எங்க ஊர் பேருந்து நிலையத்துல ஒரு லஸ்ஸி போடுவான் பாருங்க-ன்னு அவர் ஆரம்பிப்பார்... இவ்வளவுக்கும் அவர் மூன்று வருசத்துக்கு முன்ன ஊருக்கு போயிட்டு வந்திருப்பார்... அந்த இன்பம் அவர் மனசுல மூன்று வருசமா வாழ்ந்துகிட்டு இருக்கு... அது அவர் அடுத்த முறை இந்தியா சென்று வரும் வரை வாழும். அங்க பாருங்க... ஒரு கோவை நண்பர் இப்பவே நெஞ்ச தடவுகிறார் (அது பழமை இல்லீங்கோ)... கோவை காந்திபுரம் பேருந்து நிலைய லாலா கடை இனிப்பு சாப்பிட்டத நினைத்து சந்தோசம். இங்க உட்கார்ந்திருக்கிற ஜெயாவா, அரங்கிற்க்கு வெளியில் என் மனைவியுடன் பார்த்தேன்... நடுவர் அவர்களே உங்களுக்கே தெரியும் அவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என்று... புடவைதான்.. என் மனைவி சொன்னாங்க... ஜெயா புடவை அருமையாயிக்குன்னு... ம்... ம்... நல்ல இருக்கா, போனமுறை இந்தியா போனப்ப எடுத்துட்டு வந்தேன்னு சொல்லி அப்படி ஒரு மகிழ்ச்சி. சரி ஏதோ மேடைக்காக பேசுகிறேன்னு நினைப்பீங்க...இல்லை. மற்றுமொரு நிகழ்வு... நான் இப்ப சொல்லப்போவது ஒரிரு மாதத்திற்க்குள் நடந்த நிகழ்வு. நான், நம் கேட்ஸ் செயலாளர் திரு.ரவி பழனியப்பன், கூட ஒரு நண்பர்... நான் பேர சொல்ல விரும்பல... தமிழ் கல்வி பயிற்சி முகாம் முடிந்து, மதியம் ஒரு சமுதாய கூட்டம், அருகில் சப்வே-ல சாப்பிட நண்பரின் வேனில் போனோம், வேன்ல பார்த்தா சில பல ஸிப்லாக் பாக்கெட்... பகோடா... ரொட்டி... நண்பர் சொன்னார்... எடுத்து சாப்பிடுங்க... ஊருலேருந்து எடுத்துட்டு வந்தேன்... அருமையா இருக்கும் அப்படின்னார்... சொல்லும்போது அப்படி ஒரு சந்தோசம்... ஆனா நான் அவர் பேர சொல்ல விரும்பல (அவர் எதிரணியில் வாதாடிய தங்கமணி).

ரொம்ப சுருக்கமா சொல்லானும்னா... அமெரிக்க வாழ்க்கையில் சந்தோசம் என்பது (தலையை தொட்டு) இங்க கேட்டு வேளை செய்வது, இந்திய வாழ்க்கையில் சந்தோசம் என்பது (நெஞ்சை தொட்டு)இங்க கேட்டு வேளை செய்வது... இத நான் உங்ளுக்கு சொல்லத் தேவையில்லை... ஏன்னா... நீங்க எல்லோரும் தமிழ் என்கிற அன்பால சேர்ந்த கூட்டம்... இன்பமான வாழ்க்கை இந்தியாவில்-ன்னு உங்க சார்பா நான் சொல்லிட்டேன்... நல்லதொரு தீர்ப்ப அதிரடியா நீதிபதி சொல்லுவாங்க... அதற்கு சரவெடியா உங்கள் கரகோசத்தை தாருங்கள் எனக்கூறி... வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன்... நன்றி...வணக்கம்.

5 comments:

பழமைபேசி said...

நன்று!

ஆனா, எங்களையெல்லாம் ஒரு பேச்சுக்கு கூட கூப்பிடவே இல்லை?! அவ்வ்வ்வ்வ்வ்.......

ஆயில்யன் said...

சூப்பரூ!

சரியான ஃப்ளோவுல தாக்கியிருக்கீங்கபோல ஆடியோ ரெக்கார்ட் செய்யலயா? அடுத்தமுறை கண்டிப்பாக ஆடியோ போஸ்ட்டுங்க பாஸ்

அரசூரான் said...

நன்றி பழமை & ஆயில்யன்.

பழமை, உங்கள 'கை முறுக்கு' சாப்பிட கூப்பிட்டேனே, மறந்துவிட்டீர்கள் போலும்.

ஆயில்யன், ஆடியோ என்ன வீடியோவே போடலாம்... என்ன... அதை கேட்ட/பார்த்த பிறகு இந்த பக்கம் திரும்பி வரமாட்டீங்களேங்கிற பயம்தான்...:)

நட்புடன் ஜமால் said...

இன்னா ஆச்சி மாம்ஸ்

இன்பமான வாழ்க்கை வெளியில் இல்லை

உங்கள் உள்ளே தான் இருக்கு

நீங்கள் எங்கு இருந்தாலும் ...

Tamil Home Recipes said...

மிகவும் அருமை