அமெரிக்க பராசக்தி

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி எழுதி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்ட பராசக்தி வசனம் இது.

இந்த ஆண்டின் தீபாவளி மலர் நகைச்சுவையை மையக் கருவாக கொண்டதாலும், அமெரிக்கா வந்த நம்மில் பலர் கடந்து வந்த சில நிகழ்வுகளையும், பலர் சொல்ல நினைத்ததையும் சற்றே நகைச்சுவையுடன் உங்களுக்காக, யார் மனதையும் வருத்தப் படுத்த அல்ல... கற்பனை மட்டுமே.
(தீபாவளி விழா மலருக்காக எழுதியது – இங்கு மீள்பதிவாக )
***

அமெரிக்கா, லேண்ட் ஆஃப் ஆப்போர்ச்சுனிடீஸ்... விசித்திரம் நிறைந்த பல நாட்டவரை உள்ளே விட்டிருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டிருக்கின்றது, ஆனால் இந்த தேசியின் கூவல் விசித்திரமானதும் அல்ல கூவும் நான் புதிய தேசியும் அல்ல.

அமெரிக்க ஆசையிலே... ஒரு சாதாரண தேசியாக ஹெச்-1-ல் வந்தவன்தான் நான், இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதற்க்காக அடிக்கடி எம்ப்ளாயரை மாற்றினேன், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று ஹெச்-1-க்கு விண்ணப்பித்து லாட்டரிக்கு வழிவகுத்தேன், கிரீன் கார்ட் பிராசஸை ரிட்ராகேஸனுக்கு தள்ளினேன் – இப்படி எல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருகிறேன் நான்.

நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள், இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை.

அடிக்கடி எம்ப்ளாயரை மாற்றினேன்... இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதற்க்காக அல்ல, கிளையண்ட்டிடம் 90 டாலர் வாங்கி எனக்கு 30 டாலர் கொடுத்து... நாம் கொடுப்பதைத்தான் வாங்கிகொள்ள வேண்டும் என்று மார்தட்டினார்களே... அந்த எம்ப்ளாயரின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பத்றக்காக.

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று ஹெச்-1-க்கு விண்ணப்பித்து லாட்டரிக்கு வழிவகுத்தேன்... ஏன்? அதனால் இன்னொரு சக தேசிக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை கெடுக்க அல்ல, என்றோ ஒரு நாள் என்னுடைய தற்போதைய எம்ப்ளாயரிடம் வேலை போய்... நான் என் சோற்றுக்கு லாட்டரி அடிக்ககூடாது என்பத்றக்காக.

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை... தேசிகள் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்? நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்.

சுய நலம் என்பீர்கள்... என் சுய நலத்திலே பலரது குடும்ப நலமும் கலந்து இருக்கிறது. என் வேலையை பற்றி மட்டுமே கவலைப்படாமல்... எல்லா தேசிகளுக்காகவும் கவலைப்பட்டேன், தனக்கு சாப்பிட உணவு கிடைத்தால் ஊரையே கூப்பிடுமே... அந்த காக்கையை போல.

என்னை குற்றவாளி என்பீர்களா? இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறு எவ்வளவு என்று பார்க்க முடியும். தானே முன்வந்து சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும் எம்ப்ளாயர் இல்லை என் வேலையில்... அலுவலக அரசியலில் படாதபாடுபட்டேன் நான்.... தங்கமானவன் என்று யாரும் தட்டிக்கொடுக்கவில்லை என்னை... தத்தாரிகளை தாண்டி வந்திருக்கிறேன் நான்.

கேளுங்கள் என் கதையை, இவன் தேசி இல்லை பரதேசி என்று பரிகாசம் செய்யும்முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... தஞ்சை மாவட்டத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. நன்கு படித்தவரின் தலை எழுத்திற்க்கு நான் மட்டும் விதிவிலக்கா? சிங்கப்பூர் என்னை சீராட்டி வரவேற்றது, தகுதியை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது.

சரி அமெரிக்காவையும் ஒரு முறை பார்த்துவிடலாமே என்று அமெரிக்கா வந்தேன். இன்று லாட்டரி ஹெச்-1-னால் கலகலத்துபோய் இருக்கிறார்களே இந்த மேன்பவர் கம்பெனிகள்... அவர்கள் விரித்த வலையில் விழுந்த ஆயிரக் கணக்காணவர்களில் நானும் ஒருவன்... இண்டர்வியூ நன்றாக செய்தும் ரேட் சரியில்லை என்று பென்ச்ஞில் உட்கார வைக்கப்பட்டேன்... நல்ல ரேட்டிற்க்காக சீனியாரிட்டியை பறிகொடுத்தேன்... மனம் உடைந்தேன்... கடைசியில் கன்சல்டண்ட்டாக மாறினேன்.

காண வந்த அமெரிக்காவை கண்டேன்... அகண்டு விரிந்த மாகாணங்களாய்... ஆம் தறிகெட்ட தட்ப வெட்ப நிலையிலும், நாலு வேறுபட்ட நேரங்களுடனும். தரையிரங்கியா ஊரோ சிகாகோ... அடித்தது குளிர் என்னை சிக்-ஆக்க. தடுமாறிவிட்டது டிராபிகல் வெதரில் வளர்ந்த என் உடம்பு.

கூட்டாளிகளின் தொல்லை... குடிக்க சொன்னார்கள், எனக்கு பிடித்ததோ கல்யாணி... கூட்டாளிகள் ஹாட்டுக்கு அலைந்தார்கள்...கல்யாணிக்காக நான் அலைந்தேன். கண்டுபிடித்தோம் ஒரு கடையை, கல்யாணிக்காக காத்திருந்தனர்... அதில் காளையர் பலர், கண்ணியர் சிலர். கல்யாணியின் டிமாண்டை பார்த்து காசு கூடகேட்டான் அந்த கடைக்காரன்.

சம்பள பாக்கியில் சம்பந்தப்பட்டு லேபர்கோர்ட்டில் பாப்பர் சொல்லி நிற்க்கிறார்களே இந்த இன்க் கம்பெனிகாரர்கள்... பகட்டு வார்த்தையால் பலபேரை பதம் பார்த்தவர்கள்... என்னையும் மயக்க பார்த்தார்கள்... என் நண்பர்கள் தடுத்திருக்காவிடில் நானும் மாட்டியிருப்பேன். அமெரிக்க கம்பெனிகள் காப்பாற்ற வந்தன என்னை... பிரதி உபகாரமாய் டிராவலிங் ஜாப் பண்ணவேண்டும் என்று சொன்னார்கள். அதில் தலையாய பங்கு வகித்த கம்பெனி ஆர்.பி.எம். நாலு நாள் வேலை பார்த்தால் போதும் என்றனர்... ஆனால் அந்த நாலு நாளில் என் நாடி நரம்பையெல்லாம் கயட்டி விட்டான் அவன் கிளையண்ட்.

ஆர்.பி.எம்-ல் வேலை என்ற பெருமை... விட்டுவர மனமில்லை, குடும்பத்தை விட்டு அலையவும் விருப்பம் இல்லை... அதனால் டிராவலிங்கை கைவிட்டேன். விருப்பமான வேலையை விடுவது விந்தையல்ல... உலக உத்தமர் காந்தி... அகிம்சா மூர்த்தி... பாரட்-லா படித்தவர்... அவரே தேச சுதந்திரத்திற்க்காக வக்கீல் தொழிலை விட்டு இருக்கிறார்.

வேலை என்னை விரட்டியது... ஆரம்ப ப்ராஜக்ட் ஆர்கன்ஸாசில் என்றான்... அங்கு ஓடினேன்.... பக்கா ப்ராஜக்ட் பாஸ்டனில் என்றான்... அங்கும் ஓடினேன். ஜாப் ரிஸர்ஸன் என்னை பயமுறுத்தியது... ஓடினேன்... ஓடினேன்... அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களுக்கும் ஓடினேன். அந்த ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்... என் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் அந்த கிரீன் கார்ட் பிராசஸ் பண்ணும் ஐ.என்.எஸ்... ஈ.ஏ.டி கொடுத்தார்களா? ஈ.ஏ.டி கொடுத்தார்களா படித்த ஹெச்-4 உள்ளவர்களுக்கு?

(ஒருவர் இடைமறித்து: இவர் வேலைக்காகவோ இல்லை கிரீன் கார்டுக்காகவோ கூவ வில்லை... யாரோட ஈ.ஏ.டி-க்காகவோ கூவுகிறார்)

இல்லை... யாரோட ஈ.ஏ.டி-க்காகவோ இல்லை... அதுவும் என் கூவல் தான்... என் மனைவிக்காண கூவல்... பட்ட படிப்பு படித்த மனைவியின் படிப்பை, திறமையை வீணடிக்காமல் துட்டு பார்க்க நினைப்பதில் என்ன தவறு?

தகுதி உடையவர்களை ஈ.ஏ.டி-யை காரணம் காட்டி வீட்டில் உட்கார வைத்தது ஒரு குற்றம், தேசத்திற்க்கு திரும்பி விட்ட தேசிகளை கணக்கில் கொண்டுவராமல் பழைய கேப் கவுண்டை காட்டுவது இன்னொரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார் காரணம்?

ஹெச்-4 அத்தைகளுக்கு ஈ.ஏ.டி கொடுக்காதது யார் குற்றம்? ஹெச்-1-ல் வந்தவனின் குற்றமா? அல்லது ஒருவருக்கே பல ஹெச்-1 தந்த ஐ.என்.எஸ்-ன் குற்றமா?

பணம் பறிக்கும் இன்க் கம்பெனிகளை வளர விட்டது யார் குற்றம்? அமெரிக்கா வந்தால் போதும் என்று வரும் தேசிகளின் குற்றமா? அல்லது கஞ்சமாக பலர் நெஞ்சை மிதிக்கும் வஞ்சகர்களின் குற்றமா?

பிரையாரிட்டி டேட்டை பிண்ணுக்கு தள்ளியது யார் குற்றம்? கோட்டா என்ற பெயரில் அப்ளிகேஸன் ”துட்டை” உயர்த்தி தேசியிடம் ”ஆட்டை”-யை போடும் ஐ.என்.எஸ்-ன் குற்றமா? அல்லது ”துட்டை” வாங்கி கொண்டு பதிலே பேசாமல் தேசியின் நெற்றியில் ”பட்டை”-யை போடும் அட்டர்னியின் குற்றமா?

இந்த குற்றங்கள் திருத்தப்படும் வரை இந்த ஹெச்-1/ஹெச்-4-ன் கூவல்களும் குமுறல்களும் குறையப்போவது இல்லை. இதுதான் நான் இங்கு படித்த பாடம், பட்டறிவு... பரிதாபமான அமெரிக்க அனுபவம்.

3 comments:

Venkat said...

Itha ithaan ethir parthen...

Yappa.. namma oorla 50 ruvaa lajammunu kodutha neethi nermai neyayam ellam potchchunu solluravanga.. epadi epadi intha 90 - 30 $ -i thakku pidikkuranga...


Yellam kali kaalamppa... ( Emanthavarkalin kaalam ! )

பழமைபேசி said...

ஹையோ ஹையோ....

அரசூரான் said...

நன்றி வெங்கட் & பழமை.

வெங்கட், இங்கு இன்க் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளை கூட்டுக் (கார்பரேட்) கொள்ளை... அது அப்படித்தான்