அஞ்சாவுப்பு புள்ளையோட அறிவாளியா நீங்க?

நீங்கள் ஐந்தாம் வகுப்பு மாணவரை விட அறிவாளியா?

இது ஒரு அமெரிக்க தொலைகாட்சி நிகழ்ச்சி (ஆர் யு ஸ்மார்டர் தன் பிஃப்த் கிரேடர்?), போட்டியிடும் பெரியவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுடன் மல்லுகட்ட வேண்டும். சரியாக பதில் சொன்னால் பணம் வரும்... இல்லையேல் மானம் போகும்.

மொத்தம் பத்து கேள்வி, பிறகு ஒரு கொசுறு (போனஸ்) சரியாக பதில் சொல்ல சொல்ல $250, $500, $1000 என்று பரிசு பணம் மில்லியனில் போய் நிற்க்கும்.

1-ம் வகுப்பிலிருந்து இரண்டு கேள்வி, 2-லிருந்து இரண்டு என பத்து கேள்விகள். ஒரு சில உதவிகள் உண்டு.

உதாரணத்திற்க்கு சில கேள்விகள்...

1. நட்சத்திர மீன்கள் எப்போதும் ஐந்து கைகளுடந்தான் பிறக்கும் -
சரியா / தவறா?

2. இந்த தொடரில் வரும் அடுத்த எண் என்ன?
1, 2, 6, 42, 1806, ?

3. 'மூஸ்' என்கிற வாத்தையின் பன்மை (ப்லூரல்) என்ன?
அ) மூஸஸ், ஆ) மீஸ்ஸ், இ) மூஸ்

கேள்விய பார்த்தா ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கா? நாம்லும் போட்டியில் கலந்து கிட்டா சுலையா... முள்ளங்கி பத்தையா 1 மில்லியன ஆட்டைய போட்ட்டுலாம்ன்னு தோணுதா? பதில் சொன்னா பரிசு... சொல்லாட்டி? தருமி மாதிரிதான் நம் நிலமை... கைபுள்ள கணக்கா எனக்கு இப்பவே கண்ண கட்டுதேன்னு சொல்லிட்டு கழண்டுகிலாம்... ஆனா... கேமராவ பார்த்து "சாமியோவ் நான் அஞ்சாவுப்பு புள்ள மாதிரி அறிவாளி இல்லீங்கோ"-ன்னு சொல்லிட்டுதான் நடைய கட்டனும்.

( 1 மில்லியன் தரேன்னு சொல்லி கூப்பிட்டு நான் தற்குறின்னு நானே சொல்லிக்கினுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதுக்கு நாக்கை பிடிங்கிகிட்டு சாவலாம்)

இதுவரை இருவர் 1 மில்லியன் அமெரிக்க வெள்ளியை பரிசாக வென்றுள்ளனர்.

விடை:
1. தவறு. (இது வரை ஒரு நட்ச்சத்திர மீன் 40 கைகளுடன் பிறந்து உள்ளதாம்)
2. 3263442 (எப்பூடி?)
3. மூஸ்

லாபம் நமக்கு மட்டுமே...

இலங்கையில் 11 வருசத்திற்க்கு பிறகு கிரிகெட்டு விளையாடி இலங்கை அணிக்கு நெத்தியில் திரு நாமத்தை போட்டுட்டு வந்திருக்காங்க நம்ம பசங்க.


அதுக்கு காரணம் யாரு? தோணி-யா? இல்லவே இல்லை... அங்கே அவன் உருவில் விளையாடிய பாணி.. நம் முருகன் தண்ட-பாணி.


சச்சின் எப்படி சதம் அடிச்சான்? எம்பெருமான் முருகன், தண்ட-பாணி கேப்டன் தோணி-யா மாறி சொன்னார்... சச்சின்... இலங்கை ஆட்டக்காரன் வீசுரது எல்லாம் பந்தே அல்ல அது பழனிமலை லட்டு... நீ அதை உன் இஸ்டத்துக்கு தட்டுன்னு.


லாபம் நமக்கு மட்டுமே... திருமுருக கிருபானந்த வாரியார் அருளியது...

பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.

அரசு ஒழிக என்று கோஷம் போடும் கைதிகளை சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு உணவு போட வேண்டியது அரசனின் கடமையே. அதுபோல கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவரையும் கடவுள் காப்பாற்றவே செய்கிறார்.

சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.

சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் "ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா' என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.

கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.

பாத்திரமறிந்து பிச்சையிடு...

பாத்திரமறிந்து பிச்சையிடு... முதுமொழி
பதிவபடிச்சி பின்னூட்டமிடு... இது புதுமொழி
புது மொழிய விட்டுடுவோம், போடுறது மொக்கை அதை படிச்சி பார்த்து போடுனுமான்னு நீங்க கேட்க்க வேணாம், பதிவரே கேட்டுக்குவாங்க.
பீ கேர்புஃல்... நான் என்ன சொன்னேன்.
முது மொழிய பார்ப்போம், வாசலில் வந்து யாசகம் கேட்பவர் எல்லோரும் பிச்சைக்காறாரர் அல்ல அவர்களில் சிலர் சிவ/வைணவ அடியார்களாகவும் இருப்பார்கள், அவர்களில் சிலர் பழவகைகளை மட்டுமே பெற்றுகொள்வார்கள். அதனால் வந்திருப்பவரின் கையில் திருஓடு இருக்கிறதா இல்லை வேறு பாத்திரம் உள்ளதா என்பதறிந்து உணவிட வேண்டும் என்பதற்க்காக சொல்லப்பட்ட முது மொழி.
ராப்பிச்சை... வழக்கம் போலதான், எது போட்டாலும் வாங்கி கொண்ட காலம் போய், சூடா ஏதாவது போடுங்கன்னு கேட்டாங்க, அது இப்ப கொஞ்சம் சூடு பிடிச்சி... சூடா இல்லாட்டி பரவா இல்லை பணமா குடுங்க நல்ல கடையா பார்த்து நானே வாங்கி கொள்கிறேன் என்று சொல்லும் வரை வந்துவிட்டது.
காதல்பிச்சை... இப்ப காத-ல்/லில் பிச்சை எடுக்கிற ஸ்டைல்/டிரெண்டு ரொம்ப மாறிடுச்சி. கடற்க்கரையில் காதலி பாத்திரமே இல்லாமல் என்னங்க(!!!) என்றால் போதும் கையில் சுண்டலோ, பொறியோ, ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறது. பதிலுக்கு காதலன் கண்ணத்தை காட்டுகிறான்... கிடைத்தது முத்தப் பிச்சை.

அற்ப்பனுக்கு வாழ்வு வந்தால்...

அற்ப்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பார்” என்று ஒரு முது மொழி. அமெரிக்கா காரர்கள் ரொம்பவே குடை பிடித்து இருப்பார்கள் போல இருக்கு, இப்போது அதை கொஞ்சம் அனுபவிக்கிறார்கள். சரி இனிமேலாவது குடை பிடிக்காமல் இருக்கலாம் அல்லவா? இல்லவே இல்லை... ஆடின காலும் பாடின வாயும் போல... வாழ்க்கையை அனுபவிக்க அமெரிக்கருக்கு நிகர் அமெரிக்கரே.

அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இதை சொல்வதற்க்கு சங்கடமாக இருந்தாலும் இப்போது நான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தி, ”கேஸ் ஃபார் க்ளங்கர்ஸ்” - Cash for Clunkers, இது அமெரிக்க பொருளாதார சீர்குலைவை – குறிப்பாக நலிவுற்ற வாகன சந்தையை தூக்கி நிறுத்த - சரி செய்ய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டம். பழைய கார்களை பெற்று கொண்டு அதற்க்காக புதிய காரின் விலையில் $4500 டாலர் குறைத்து கொள்வது. மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சரி இப்படி பெறப்பட்ட பழைய கார்கள் என்ன செய்யப்படுகின்றன? அப்படியே நொருக்கப்படுகிறன, அதிலிருந்து எந்த ஒரு பாகமும் மறுபயனீட்டிற்க்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை, அதைத்தான் தொலைக்காட்சி செய்தியில் நான் கண்டேன்.

சரி அமெரிக்கர்கள் முன்பு குடை பிடித்ததை – மாதிரிக்கு ஒன்றே ஒன்று பார்ப்போமா? அலுவலகத்தில் வெளிச்சம் பெற கூறையில் சுமார் இரண்டு மூன்று அடிகளுக்குள் ஒரு வாழைத்தண்டு விளக்கு பொருத்தி இருப்பார்கள், மேலும் நாம் உட்கார்ந்திருக்கும் சதுரத்தில் (கியூபிகல்) ஒன்றோ அல்லது இரண்டோ ( நான் இப்போது வேலை செய்யும் இட்த்தில் மூன்று) பொருத்தி இருப்பார்கள், அது போதாது என்று அமெரிக்க நண்பர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு மேசை விளக்கு வாங்கி வைத்து இருப்பார்கள். வேலை இடம் சும்மா ஸூட்டிங் ஸ்பாட் போல பல பல என்று சொலிக்கும்.

ஏன் என்று கேட்டால் இதற்கு பெயர்தான் வாழ்க்கை தரம் என்பார்கள். பணக்காரனாய் வாழ்ந்து பிச்சைக்காரனாய் சாவது அமெரிக்கரின் தரம், மாறாக எதிர்காலத்திற்க்கு என்று சேமித்து சேமித்து பிச்சைக்காரனாய் வாழ்ந்து பணக்காரனாய் சாவது நாம் வாங்கி வந்த வரம்.

தாங்குமா தமிழகம்?

சமீபத்திய சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் அன்பழகன் நாம் ரூ.74,456 கோடி கடனில் இருப்பதாகவும், வரும் வருடங்களில் அது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தங்களது (தி.மு.க) ஆட்சியால் ஒன்றும் அது அதிகரிக்க வில்லை, அதற்க்கு முன் இருந்த ஆட்சியிலிருந்து அது தொடர்வதாக குறிப்பிட்டு உள்ளார். அது 2000-2001 தி.மு.க ஆட்சியில் இருந்தபோது சுமார் 28,000 கோடியாகவும், தொடர்ந்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அது சுமார் 57,000 பின்பு 60,000 என்று வளர்ந்து இன்று 75,000 கோடியை தொட்டு நிற்கிறதாம்.

நம் ஆட்சியாளர்களின் குறிகோள் என்ன? தமிழர்களை கடனில் முன்னேற்றுவதா? முந்தைய அட்சியில் இவ்வளவு கடன் இருந்தது அதை நாங்கள் குறைத்துள்ளோம் அல்லது உயராமல் பல நல்ல திட்டங்களை செய்துள்ளோம் என்று இருக்க வேண்டாமா?

தேவையான தொழிலுக்கு / துறைக்கு, நலிந்த மக்கள் வளர்ச்சிக்கு அரசு மானியம் மிக அவசியம். ஆனால் ஓட்டு தேவைக்காக அரசு மானியம் பல இலவச திட்டங்களால் வீணடிக்கப்பட்டு, தமிழர்களின் வீட்டை கொள்ளையடிக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.

சட்டசபை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடாம்... என்ன கொடுமை? அவர்களுக்கு அவர்கள் தொகுதியில் இல்லாத வேலை சென்னையிலா இருக்கிறது? அவர்கள் சட்டசபை கூட்ட நேரத்தில் தங்கிகொள்ளத்தானே பல கோடியில் சமீபத்தில் எம்.எல்.ஏ விடுதி புதுப்பிக்கப் பட்டது?

இலவசத்தாலும், தகுதிக்கு/திறமைக்கு மீறிய சம்பள முறையாலும் இன்று அமெரிக்கா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சீரழிவு உங்களுக்கு தெரிய வில்லையா?

பட்டு தெரிந்துகொள்பவன் முட்டாள், பட்டு கெட்டவரிடம் இருந்து கற்றுகொள்பவன் அறிவாளி.

அமெரிக்காவின் கட்டமைப்பு அதனை எந்த சீரழிவிலிருந்தும் எழுச்சிகொள்ள செய்துவிடும். தமிழகம் தாங்குமா?

உருவாக்கத்தன்மையின் உச்சகட்டம்...

கிரியேட்டிவிட்டி என்கிற உருவாக்கத்தன்மைக்கு இன் நாளில் ஒரு சிறந்த உதாரணம் கூகிள் தேடு தளம் என்றால் மிகையாகாது.

அவர்கள் தொடர்ந்து அந்த நாளைப் பற்றிய சிறப்பை கூகில் முத்திரையாக பதிப்பதில் பெரும் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.

இன்று மனிதன் நிலவில் காலடி வைத்த நாற்பது ஆண்டுகள் நிறைவை கொண்டாடுவதை குறிப்பிடும் பொருட்டு கூகிளின் முத்திரை...




எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்...

இதுவும் ஒரு பெஃட்னா-2009 நிகழ்வு குறிப்புதான். இலக்கிய கவியரங்க நாள் அன்று கவிஞர் ஜெய பாஸகரன் சமகால கவிஞர்கள் பற்றி பேசிய போது "அரசியல்வாதி" பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றை சொன்னார்...

அவர் சற்று நகைச்சுவையுடன் சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது... நீங்களும் படித்து மகிழுங்கள்.

இதுவரை
இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...
சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்.

பலமுறை
"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...
அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.

அடிக்கடி
"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...
ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்
"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...
அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.

நன்றி: கவிஞர் ஜெய பாஸ்கரனுக்கு - காதால் கேட்டதை கண்ணால் குறிப்பெழுதி இங்கு இடுக்கையாக இட்டிருக்கிறேன் - தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்