பாத்திரமறிந்து பிச்சையிடு...

பாத்திரமறிந்து பிச்சையிடு... முதுமொழி
பதிவபடிச்சி பின்னூட்டமிடு... இது புதுமொழி
புது மொழிய விட்டுடுவோம், போடுறது மொக்கை அதை படிச்சி பார்த்து போடுனுமான்னு நீங்க கேட்க்க வேணாம், பதிவரே கேட்டுக்குவாங்க.
பீ கேர்புஃல்... நான் என்ன சொன்னேன்.
முது மொழிய பார்ப்போம், வாசலில் வந்து யாசகம் கேட்பவர் எல்லோரும் பிச்சைக்காறாரர் அல்ல அவர்களில் சிலர் சிவ/வைணவ அடியார்களாகவும் இருப்பார்கள், அவர்களில் சிலர் பழவகைகளை மட்டுமே பெற்றுகொள்வார்கள். அதனால் வந்திருப்பவரின் கையில் திருஓடு இருக்கிறதா இல்லை வேறு பாத்திரம் உள்ளதா என்பதறிந்து உணவிட வேண்டும் என்பதற்க்காக சொல்லப்பட்ட முது மொழி.
ராப்பிச்சை... வழக்கம் போலதான், எது போட்டாலும் வாங்கி கொண்ட காலம் போய், சூடா ஏதாவது போடுங்கன்னு கேட்டாங்க, அது இப்ப கொஞ்சம் சூடு பிடிச்சி... சூடா இல்லாட்டி பரவா இல்லை பணமா குடுங்க நல்ல கடையா பார்த்து நானே வாங்கி கொள்கிறேன் என்று சொல்லும் வரை வந்துவிட்டது.
காதல்பிச்சை... இப்ப காத-ல்/லில் பிச்சை எடுக்கிற ஸ்டைல்/டிரெண்டு ரொம்ப மாறிடுச்சி. கடற்க்கரையில் காதலி பாத்திரமே இல்லாமல் என்னங்க(!!!) என்றால் போதும் கையில் சுண்டலோ, பொறியோ, ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறது. பதிலுக்கு காதலன் கண்ணத்தை காட்டுகிறான்... கிடைத்தது முத்தப் பிச்சை.

அற்ப்பனுக்கு வாழ்வு வந்தால்...

அற்ப்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பார்” என்று ஒரு முது மொழி. அமெரிக்கா காரர்கள் ரொம்பவே குடை பிடித்து இருப்பார்கள் போல இருக்கு, இப்போது அதை கொஞ்சம் அனுபவிக்கிறார்கள். சரி இனிமேலாவது குடை பிடிக்காமல் இருக்கலாம் அல்லவா? இல்லவே இல்லை... ஆடின காலும் பாடின வாயும் போல... வாழ்க்கையை அனுபவிக்க அமெரிக்கருக்கு நிகர் அமெரிக்கரே.

அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இதை சொல்வதற்க்கு சங்கடமாக இருந்தாலும் இப்போது நான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தி, ”கேஸ் ஃபார் க்ளங்கர்ஸ்” - Cash for Clunkers, இது அமெரிக்க பொருளாதார சீர்குலைவை – குறிப்பாக நலிவுற்ற வாகன சந்தையை தூக்கி நிறுத்த - சரி செய்ய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டம். பழைய கார்களை பெற்று கொண்டு அதற்க்காக புதிய காரின் விலையில் $4500 டாலர் குறைத்து கொள்வது. மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சரி இப்படி பெறப்பட்ட பழைய கார்கள் என்ன செய்யப்படுகின்றன? அப்படியே நொருக்கப்படுகிறன, அதிலிருந்து எந்த ஒரு பாகமும் மறுபயனீட்டிற்க்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை, அதைத்தான் தொலைக்காட்சி செய்தியில் நான் கண்டேன்.

சரி அமெரிக்கர்கள் முன்பு குடை பிடித்ததை – மாதிரிக்கு ஒன்றே ஒன்று பார்ப்போமா? அலுவலகத்தில் வெளிச்சம் பெற கூறையில் சுமார் இரண்டு மூன்று அடிகளுக்குள் ஒரு வாழைத்தண்டு விளக்கு பொருத்தி இருப்பார்கள், மேலும் நாம் உட்கார்ந்திருக்கும் சதுரத்தில் (கியூபிகல்) ஒன்றோ அல்லது இரண்டோ ( நான் இப்போது வேலை செய்யும் இட்த்தில் மூன்று) பொருத்தி இருப்பார்கள், அது போதாது என்று அமெரிக்க நண்பர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு மேசை விளக்கு வாங்கி வைத்து இருப்பார்கள். வேலை இடம் சும்மா ஸூட்டிங் ஸ்பாட் போல பல பல என்று சொலிக்கும்.

ஏன் என்று கேட்டால் இதற்கு பெயர்தான் வாழ்க்கை தரம் என்பார்கள். பணக்காரனாய் வாழ்ந்து பிச்சைக்காரனாய் சாவது அமெரிக்கரின் தரம், மாறாக எதிர்காலத்திற்க்கு என்று சேமித்து சேமித்து பிச்சைக்காரனாய் வாழ்ந்து பணக்காரனாய் சாவது நாம் வாங்கி வந்த வரம்.

தாங்குமா தமிழகம்?

சமீபத்திய சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் அன்பழகன் நாம் ரூ.74,456 கோடி கடனில் இருப்பதாகவும், வரும் வருடங்களில் அது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தங்களது (தி.மு.க) ஆட்சியால் ஒன்றும் அது அதிகரிக்க வில்லை, அதற்க்கு முன் இருந்த ஆட்சியிலிருந்து அது தொடர்வதாக குறிப்பிட்டு உள்ளார். அது 2000-2001 தி.மு.க ஆட்சியில் இருந்தபோது சுமார் 28,000 கோடியாகவும், தொடர்ந்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அது சுமார் 57,000 பின்பு 60,000 என்று வளர்ந்து இன்று 75,000 கோடியை தொட்டு நிற்கிறதாம்.

நம் ஆட்சியாளர்களின் குறிகோள் என்ன? தமிழர்களை கடனில் முன்னேற்றுவதா? முந்தைய அட்சியில் இவ்வளவு கடன் இருந்தது அதை நாங்கள் குறைத்துள்ளோம் அல்லது உயராமல் பல நல்ல திட்டங்களை செய்துள்ளோம் என்று இருக்க வேண்டாமா?

தேவையான தொழிலுக்கு / துறைக்கு, நலிந்த மக்கள் வளர்ச்சிக்கு அரசு மானியம் மிக அவசியம். ஆனால் ஓட்டு தேவைக்காக அரசு மானியம் பல இலவச திட்டங்களால் வீணடிக்கப்பட்டு, தமிழர்களின் வீட்டை கொள்ளையடிக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.

சட்டசபை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடாம்... என்ன கொடுமை? அவர்களுக்கு அவர்கள் தொகுதியில் இல்லாத வேலை சென்னையிலா இருக்கிறது? அவர்கள் சட்டசபை கூட்ட நேரத்தில் தங்கிகொள்ளத்தானே பல கோடியில் சமீபத்தில் எம்.எல்.ஏ விடுதி புதுப்பிக்கப் பட்டது?

இலவசத்தாலும், தகுதிக்கு/திறமைக்கு மீறிய சம்பள முறையாலும் இன்று அமெரிக்கா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சீரழிவு உங்களுக்கு தெரிய வில்லையா?

பட்டு தெரிந்துகொள்பவன் முட்டாள், பட்டு கெட்டவரிடம் இருந்து கற்றுகொள்பவன் அறிவாளி.

அமெரிக்காவின் கட்டமைப்பு அதனை எந்த சீரழிவிலிருந்தும் எழுச்சிகொள்ள செய்துவிடும். தமிழகம் தாங்குமா?

உருவாக்கத்தன்மையின் உச்சகட்டம்...

கிரியேட்டிவிட்டி என்கிற உருவாக்கத்தன்மைக்கு இன் நாளில் ஒரு சிறந்த உதாரணம் கூகிள் தேடு தளம் என்றால் மிகையாகாது.

அவர்கள் தொடர்ந்து அந்த நாளைப் பற்றிய சிறப்பை கூகில் முத்திரையாக பதிப்பதில் பெரும் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.

இன்று மனிதன் நிலவில் காலடி வைத்த நாற்பது ஆண்டுகள் நிறைவை கொண்டாடுவதை குறிப்பிடும் பொருட்டு கூகிளின் முத்திரை...




எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்...

இதுவும் ஒரு பெஃட்னா-2009 நிகழ்வு குறிப்புதான். இலக்கிய கவியரங்க நாள் அன்று கவிஞர் ஜெய பாஸகரன் சமகால கவிஞர்கள் பற்றி பேசிய போது "அரசியல்வாதி" பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றை சொன்னார்...

அவர் சற்று நகைச்சுவையுடன் சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது... நீங்களும் படித்து மகிழுங்கள்.

இதுவரை
இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...
சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்.

பலமுறை
"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...
அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.

அடிக்கடி
"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...
ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்
"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...
அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.

நன்றி: கவிஞர் ஜெய பாஸ்கரனுக்கு - காதால் கேட்டதை கண்ணால் குறிப்பெழுதி இங்கு இடுக்கையாக இட்டிருக்கிறேன் - தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

வென்றாக வேண்டும் தமிழ்...

வென்றாக வேண்டும் தமிழ்... அமெரிக்க மாகாணம் ஜார்ஜியா - அட்லாண்டாவில் நடைபெற்ற பெஃட்னா - 2009 நிகழ்வுகளில் நடைபெற்ற ஒரு இலக்கிய நிகழ்ச்சி.

அதில் குறிப்பிடப்பட்ட ஒரு கவிதை குறிப்பு...

இப்போது
இருதயம் கூட இயந்திரத்தில்
தமிழ் கூட தடுமாற்றத்தில்...

உண்மைதான், தமிழ் வென்றாக வேண்டுமோ இல்லையோ தமிழ் ஒன்றாக வேண்டும் என்பது என் ஆசை... காரணம் அங்கு நான் கண்ட சில காட்ச்சிகள். அவ மனதிற்க்கு மிக வருத்தமளிக்கும் வகையில் இருந்தது.

விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட கவிஞர்களிடம் காணப்பட்ட வேற்றுமை. சிலர் அதை பேசும் போது வெளிப்படுத்தினர், சிலர் அவர்களது செய்கை / நடத்தையில் வெளிப்படுத்தினர்.

இருந்தாலும் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பேசினார்கள்... எனக்கு அதில் மகிழ்ச்சியே.

கவிஞர் வைரமுத்துவிற்க்கு என் வரவேற்ப்பு

பெஃட்னா 2009, அட்லாண்டாவில் மிக சிறப்பாக கொண்டாட பட்டது. கவிஞர் வைரமுத்துவிற்க்கு நான் வாசித்த கவிதை...

பெயரோ வைரமுத்து
கைகளிலோ விரல்கள் பத்து
உன் கவிதைகளோ பெரும் சொத்து.

முகத்திலே சாந்தம்
குரலிலே காந்தம்
கவிப்பாக்களிலே பாந்தம்
சுருங்கச்சொன்னால் நீயொரு ஏகாந்தம்.

மண்ணிற்க்கு கவிதை எழுதினாய்
மொழிக்கு கவிதை எழுதினாய்
மனிதனுக்கு கவிதை எழுதினாய்

ஏன்...மரத்திற்க்கும் கவிதை எழுதினாய்...

கவிதையின் தலைப்புத்தான் மரம்
அதில் ஒவ்வொரு வரியும் உலகத் தரம்
கவியே, நீ எங்களுக்கு கிடைத்த வரம்.

மரத்திலிருந்து... மரப்பாச்சி
மனிதனுக்கு... மனசாட்சி
கரிசலிலிருந்து... கருவாச்சி
அதுகாவியமாய்... உருவாச்சி.

தமிழை காதலித்தாய்... கவிஞனானாய்
பொண்மணியை காதலித்தாய்... கணவனானாய்
எதனை காதலித்தாய்?
கலைஞரின் நண்பனானாய்?

மொழிகளில் செம்மொழி
நம் தமிழ் மொழி
இவ்விழாவிற்க்கு அழைத்ததும்
இசைந்தது உன் விழி

தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உனை வருக வருக எனவரவேற்க்குது
அட்லாண்டா தமிழ் சங்கம்.


பி.கு: நேரமின்மை காரணமாக வரவேற்ப்பு நன்றி நவிலலாய் மாறியது...

தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உன் வருகைக்கு நன்றி நவிழ்கின்றது
அட்லாண்டா தமிழ் சங்கம்.