அஞ்சா நெஞ்ஜன் அசாங்...

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் பால் அசாங் பற்றி நிறைய படித்திருப்பீர்கள், இல்லையேல் பதிவர் சுடுதண்ணி-ய படிங்க. இது சும்மா நகைச்சுவைக்காக மட்டும்.




தகுதி என்பது...1

காஞ்சி மகாப் பெரியவர் பற்றி திரு.சுகி சிவம் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தேன்... ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவர் அல்லது பொது நலச்சேவையில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும், சிலர் எப்படி வாழ்ந்தார்கள் என்று சொன்னார்... அப்படி நான் கேட்டதில் ஒன்றிரண்டு... நன்றி சொல்வேந்தர் சுகி அவர்களுக்கு.


அன்று வழக்கம் போல் பூசை முடிந்தது, மகா பெரியவர் தனக்கு பிட்சை (உணவு) வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். சரி பெரியவருக்கு பசியில்லை போல என நினைத்து அலுவலர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள். இரண்டாம் நாளும் பெரியவர் பூசை முடித்து போசனம் வேண்டாம் என்று சொல்லி சென்றுவிட்டார். மடாலய நிர்வாகிகளுக்குள் சற்று பயம், ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர், யார்-என்ன-ஏது நடந்தது என தகவல் பறிமாற்றம் தீவிரமடைந்தது.

மூன்றம் நாள், பெரியவர் வழக்கம் போல் பூசையில், இன்று எல்லா மட நிர்வாகிகளும் ஆஜர், பிட்ஷைக்கு அழைப்பு, பெரியவர் மறுப்பு. மடத்தின் நிர்வாகிகள் இன்று நாங்கள் செய்த தவறு தெரியாமல் வேறு வேலை செய்யப்போவது இல்லை (உணவு உண்பது உட்பட) என்று பெரியவரிடம் சொல்ல, பெரியவர் சொன்னாராம்... சரி என்னை விடமாட்டீங்க போல இருக்கு, தவறு செய்தது நான் தான் என்றும், அதற்க்கு தண்டனையாய் உணவருந்தாமல் இருப்பதாகவும் சொன்னாராம்.

கீரைக்கு ஆசைப்பட்டு...


அவர் அப்படி என்ன தவறு செய்தார் தெரியுமா? பெரியவர் சொன்னதாக..
ஒரு நாள் (பிட்ஷை வேண்டாம் என்று சொன்ன மூன்று தினங்களுக்கு முன்) உணவில் கீரை சாப்பிட்டேன், நன்றாக இருக்க கொஞ்சம் அதிகம் சாப்பிட்டேன், அதை கவனித்த மட சிப்பந்தி இரண்டாம் நாளும் அந்த கீரையை சமைத்து பறிமாறினார், அன்றும் நன்றாக சாப்பிட்டேன். மூன்றாம் நாள் பூசையின் போதே மனம் பூசையில் ஒட்டாமல் இன்றும் சமையலில் கீரை இருக்குமா என்று நினைக்க ஆரம்பித்து விட்டது. அந்த ஆசையை ஒழிக்கவும், பூசையில் மனமில்லாமல் உணவை நினைத்ததிற்காகவும் நான் எனக்கு கொடுத்து கொள்ளும் தண்டனை இது, நீங்கள் அவர் அவர் தங்கள் அலுவல்களை கவனியுங்கள் என்று சொன்னாராம்.

பெரியவர்... தன் செயல்பாட்டால் என்றுமே பெரியவர்.

என்னை மன்னியுங்கள் அப்பா...

உழுதவன் கணக்கு பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சாது
விவசாயத்தில் விழுந்து விழுந்து
உடலும் மனமும் காயம் ஆகும்முன்
உன் ஆடை சாயம் போகும்முன்
படி படி என்றாள் அம்மா.



படித்தவுடன் வேலையை
பிடி பிடி என்றாள் பாட்டி
உள்ளூரிலே வேலை ரொம்ப
கடி(னம்) கடி(னம்) என்றாள் மனைவி
விவசாயத்தை விட்டேன்
விமானத்தை தொட்டேன்.



கலந்துரையாடைலில் நண்பர்கள் சொன்னார்கள்
என் அப்பா டாக்டர்... நானும் டாக்டர்
என் அப்பா எஞ்ஜினியர்... நானும் எஞ்ஜினியர்
அப்பா... நான் என்ன சொல்ல?
மவுனமாய் இருந்து விட்டேன்
விவசாயத்தை மறந்து விட்டேன்
அப்பாவை மறைத்து விட்டேன்...

என்னை மன்னியுங்கள் அப்பா...

இன்னா பேசுர நீ?

தமிழ்தான் பேசுரேன்னு சொன்னீங்கன்னா சந்தோசம்.

இன்னா தமிழு அது? தஞ்சாவூரா, மதுரையா, திருநெல்வேலியா, கோவையா இல்ல சிங்கார சென்னையா?

தமிழ அழகா எப்பவும் எங்க மண்வாசனையோடுதான் பேசுவேன்னு சொன்னீங்கன்னா ரொம்ப ரொம்ப சந்தோசம்.

அது உங்களுக்கும் உங்க உடல் நலத்திற்க்கும் நல்லது. மற்றவரைப் போல பேசுதல் தலைவலியில் ஆரம்பித்து நம் உயிரையே எடுக்கும் அபாயம் கொண்டதாம்.

இன்று தொலைகாட்சி பார்த்தபோது இதுபற்றிய தகவல் அறிந்தேன், அதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இது பேசும் தன்மை பாதிப்பு (மன நல பாதிப்பு மாதிரி) – ஸ்பீச் டிஸ்ஸாடர்/SPEECH DISORDER-ன்னு சொல்லி, அதை ஒரு உடல் நலக் குறைவு அல்லது நோய் என்று வகைப்படுத்துறாங்க... பேர் இன்னா நைனான்னு யாங்கைல கேட்க்காதீங்க... அவங்க அத “ஃபாரின் ஆக்ஸண்ட் சிண்ட்ரோம்”-ன்னு சொல்றாங்க.

நாங்க ஃபாரினே போகல எங்களுக்கு எப்படி ஃபாரின் ஆக்ஸண்ட் சிண்ட்ரோம் வரும்ன்னு கேட்க்க கூடாது. நம்ம ஊருல உள்ள முள்ளு நம்ம ஊருலயே நம்ம கால்ல குத்தினால் நமக்கு சீழ் பிடிக்கும், காரணம் முள்ளு (மரத் தூள்) நம்ம பாடிக்கு ஃபாரின் பாடி, அதான் ஒவ்வாமைன்னு சொல்லுவேமே அந்த அலர்ஜிதான்.

எலே என்னலே சொல்றே, தமிழ மாத்திபேசுனா தலவலியாம்லேன்னு லேசானா விசயமா நினைக்காதீங்களே... இத படிச்சி பாருங்களே...

விக்கி என்ன சொல்லுதுன்னா...

மேலதிகத் தகவலுக்குன்னா...

கண்ணு, ரோமாபுரியில் இருக்கும் போது ரோமானியனா இருன்னு சொல்லியிருக்காங்க, அத வுட்டுபோட்டு சிண்ட்ரோம் காந்திபுரம்ன்னு சொல்லிகிட்டு திரியிரிங்கன்னுதான கேட்கிறீங்க?

புரியிது... புரியிது. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த நம் இந்திய மக்கள், அதுவும் குறிப்பா நம் தமிழ் மக்கள் அமெரிக்கர் மாதிரியே ஆங்கிலம் பேசி அசத்துரதுல கெட்டிக்காரங்க. வாயில ‘ர’-வே வராம ‘ழ’-வாவே பேசுவாங்க... வென் ஐ டிழைவ் த காழ்-ன்னு பெருமையா பேசுவாங்க. பேசுங்க... நீங்க உங்கள் பணி சம்பந்தமா உங்கள் வாடிக்கையாளர்களிடம் பேசும்போது பேசுங்க. நம்மவர்களுடன் பேசும்போது நார்மல பேசலாமே?

இங்க ஒரு அம்மா சாமி வந்த பூச்சரியா பேசுது கிளிக்கி பாருங்க.

நாம் நம் மனத்தாலும், சொல்லாலும்/பேச்சாலும், செயலாலும் நாமாக இருக்கும்போது நாம் எந்தவகை சிண்ட்ரோமையும் வென்றோம் என்று சொல்ல முடியும்தானே?

ஓம் டெக்னாலஜியே நமக...

வீட்டில்...

ஒரு இடத்துக்கு போகனும்னா நேரம் காலத்தோட வர்றியா? எப்ப பாரு லேட்டு லேட்டு லேட்டு.
ஏன் சொல்ல மாட்டீங்க, மருந்துக்கு கூட ஒரு வீட்டு வேலை செய்யறது கிடையாது, எல்லாத்தையும் செய்துட்டுதான வரனும்.
நீ ஒன்னும் செய்யவேணாம் வா, மேக்கப்ப கூட கார்லயே போட்டுக்கலாம்.
காரில்...

என்னங்க, ரூம் லைட்ட ஆஃப் பண்ணினீங்களா?

என்ன எங்கிட்ட கேட்கிற? நீதான கடைசியா ரூம்லேருந்து வந்த... லைட்ட ஆஃப் பண்ணலியா?

இல்லீங்க நான் ஆஃப் பண்ணினதா ஞாபகம் இல்லை. அடுப்புல உங்களுக்கு குடிக்க வெண்ணீர் போட்டேன்... நீங்க படுத்தின பாட்டுல அதையும் ஆஃப் பண்ண மறந்திட்டேன்.

சரி சரி விடு... டென்ஷன் ஆவாத, என் ஃபோனில் ஹோம் பேஜ் போ, அதுல ஹோம் அப்லையன்ஸ்ன்னு ஒரு ஆப் இருக்குபாரு, அதுல எது ஆணாயிருக்கோ அதையெல்லாம் ஆஃப் பண்ணு.
சிறிது நேரத்திற்க்குப் (மேக்கப்) பிறகு...

என்னங்க, இன்னிக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இருக்கே, டி.வி ரெக்கார்டர ஸ்கெடியூல் பண்ணியிருக்கீங்களா?

நான் டி.வி.ரிமோட்ட தொட்டு ரெண்டுநாள் ஆவுது, எல்லாத்தையும் இப்ப வந்து கேளு, வீட்டுல அப்படி என்னாத்த வெட்டி முறிக்கிறியோ தெரியல.

ஆ...ஊ-ன்னா அதையே சொல்லுங்க. அதான் வெட்டினாலே துண்டாயிடுமே அதையேன் முறிக்கனும்? இல்ல தெரியாமத்தேன் கேட்கிறேன்... பதில் சொல்லுங்க.

போனாப் போவுது டி.விய ரெக்கார்ட் பண்ணுவோம்ன்னு நினைச்சேன்... கேள்வியா கேட்கிற நீ?

அட உடனே கோவிச்சிக்காதீங்க, வீட்டோட ரெண்டு சாவியும் நம்மகிட்ட இருக்கு, எப்படி யார விட்டு ரெக்கார்ட் பண்ண சொல்றது?

என் ஃபோனுல அதுக்கும் ஒரு ஆப் இருக்கு பாரு, அதுல டைரக்ட் டி.வி-ன்னு ஒன்னு இருக்குல்ல, அதுல சேனலையும், நாளையும், டையதையும் போட்டு ஓ.கே பட்டன அழுத்து.

என்னங்க... கமலஹாசன் ஒரு படத்துல சொல்லுவாறே... நிஜமாவே டெக்னாலஜி காட் ஸோ இம்ப்ரூவ்டுங்க.
வாயாலதான் சொல்லுற... வீட்டிற்க்கு செட்பண்ணியிருக்கிற ஆட்டோமேட்டிக் அலார்ம் சிஸ்டத்த நம்பாம இன்னும் ஊருலேருந்து எடுத்துகிட்டு வந்த திண்டுக்கல் தொட்டிப்பூட்டல்ல போட்டு பூட்டுற.

அய்யய்யோ...

என்னாச்சு... லிப்ஸ்டிக்க மறந்துட்டு வந்திட்டியா?

இல்லைங்க, பூட்ட பூட்டி இழுத்துப் பார்க்க மறந்துட்டேங்க... உங்க ஃபோனுல ஏதாவது ஆப் இருக்கா?

அம்மா தாயே... சத்தியாம அதுக்கெல்லாம் ஆப் இல்லம்மா, முடிஞ்சா எந்திரன் வசீகரன கூப்பிட்டு சிட்டி சும்மா இருந்தா ஒரு எட்டு போயி பூட்ட இழுத்து பார்த்திட்டு வர சொல்லு.

வேணாங்க வேணாம்... அது பூட்டோட கதவையும் இழுத்து பார்க்கும். சொந்த காசுல சூனியமா? வேண்டவே வேண்டாம்.

சும்மா படம் காட்ட...

அப்போது ஃபோன் சினுங்குகிறது...

அம்மாடி ஃபோனு உங்கிட்டதான இருக்கு, யாரு கூப்பிடுறாங்கன்னு பாரு...

உங்க பாஸுங்க...

அவன் கிடக்கிறான் லூஸு, நான் இன்னொரு லைன்ல இருக்கேன் என்னன்னு கேளு.

.....

என்ன சொன்னாரு?

நீங்க பண்ணுன அப்பிளிகேஷன் ஊத்திகிச்சாம், உங்க எல்லோருக்கும் ஆப்பு அடிக்க உங்க பெரிய லூஸு...சாரிங்க... பெரிய பாஸு வராராம், அதனால் திங்க கிழமை வொரிகிங் ஃபிரம் ஹோம் போடாம ஆப்பீஸுக்கு வரச் சொன்னார்.

ஏங்க ஃபோனுல ஆப் இருக்கு... ஆப் இருக்குன்னீங்க... இப்படி ஒரு ஆப்பு இருக்குன்னு சொல்லவே இல்ல... அவ்வ்வ்வ்வ்வ்வ்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

எனக்கு ஐ.ஜி-ய தெரியும்...

எனக்கு ஐ.ஜி-ய தெரியும்... அ-னா, ஆனா, இனா, ஈயானா... இப்படி எத்தனை போட்டாலும் அவருக்கு என்ன தெரியாது.

இந்த அக்டோபர் மாதத்தில் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் நிகழ்வுகள் வாயிலாக தமிழ் நாட்டின் சில சிறந்த மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது... அதற்க்காக கேட்ஸ் செயற்க்குழு உறுப்பினர்களுக்கு என் நன்றி.



1. தமிழக சட்டசபையின் சபாநாயகர் (ஸ்பீக்கர்) திரு.ஆவுடையப்பன். அவருடைய வட அமெரிக்க பயணத்தின் நடுவில் எங்கள் ஊரில் நடைபெற்ற தமிழ் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சிறு உரையாற்றினார். மிக எளிமையான, பழகுவதற்க்கு இனிமையானவராக இருந்தார். கழக கண்மணிகள் இல்லாம இருக்கும்போது (சிங்கம் சிங்கிளா வந்தது) நம் தலைவர்களின் உண்மையான அன்பையும் பண்பையும் நாம் காணலாம் என நினைக்கிறேன்.


2. தமிழக தன்னார்வத் தொண்டர் திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் அட்சயா ட்ரஸ்ட்-க்கு உதவி. எங்களால்முடிந்த அளவிற்க்கு ஒர் நிதிதிரட்டு போட்டி நடத்தினோம். நீங்களும் உதவலாம் நிதி அளிக்காமலே... எப்படியா? சி.என்.என் நடத்தும் கதாநாயகர்கள் வாக்கெடுப்பில் கிருஷ்ணனுக்கு ஒரு ஓட்டு போட்டால் போதும்... போட்டுட்டீங்களா? நன்றி.


3. தமிழக (டான்சி-யின் நிர்வாக இயக்குனர்) அரசு இயந்திரத்தில் ஒரு அப்பழுக்கற்ற மனிதர் திரு. உமாசங்கர் (இ.ஆ.ப). அமெரிக்காவின் ஐந்தாவது தூண் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு குழு சந்திப்பு இது. திரு. உமாசங்கர் அவர்களை 18 வருடங்களுக்கு முன் மயிலாடுதுறையில் சப்-கலெக்டராக என் மாணவர்களுடன் சந்தித்தேன்... சில தினங்களுக்கு முன் அதே முனைப்பில் ஊழலை எதிர்த்து போராடும் ஒரு போராளியாக.

இணைப்புகளை தொட்டுப்பாருங்கள்... உங்கள் மன ஓட்டமும் அதுவாக இருந்தால் தொடர்ந்து பாருங்களேன்... அது நிதி உதவியாக இருந்தாலும் சரி... ஊழலுக்கு மணியடிக்கும் நிர்வாக உதவியாக இருந்தாலும் சரி... நன்றி... நன்றி.

அய்யோ பாவம் பூதம்

ஒரு நாள் நம்ம ஆளு ஒரு முனிவரை சந்தித்தார். இறை நம்பிக்கை இல்லாத நம்ம ஆளு அந்த முனிவரை பார்த்து இறைவன் இருக்கிறாரா அப்படி இருந்தால் நமக்கு ஏன் இவ்வளவு கெடுதல்கள் தருகிறார், மேலும் அவர் நாம் வேண்டுவதை கொடுப்பதே இல்லை என்றான்.


அதற்க்கு முனிவரோ, சரி சரி அது ஒரு நம்பிக்கைதான் நாம்தான் நன்றாக வாழ முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

முனிவரின் பேச்சில் திருப்தி அடையாத நம்ம ஆளு, இல்லை இல்லை நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றான்.

முனிவரோ, சரி நீயே சொல் நான் என்ன செய்யவேண்டும் என்று, நானாவது நீ விரும்புவதை தர முயற்ச்சிக்கிறேன் என்றார்.

முனிவரோ முயற்ச்சி அது இது என்று பேசுகிறார் அவரிடம் மொத்தமா ஒரு சில கோடிய கேட்டா போடா கேடின்னு சொல்லிவிடுவார் என நினைத்து நம்ம ஆளு சமயோசிதமாய் விக்கிரமாத்தனிடம் வேலைசெய்த வேதாளத்தை மனதில் நினைத்து ஒரு நல்ல வேலை செய்யும் பூதம் வேண்டும், அதை வைத்து நான் முயற்ச்சி செய்து பார்க்கிறேன் என்றான்.

முனிவரும் சரி உன் ஆசைப்படியே நான் ஒரு பூதத்தை தருகிறேன், உனக்கு தெரியும் தானே நீ பூதத்திற்க்கு வேலை கொடுக்கவில்லை என்றால் அது உன்னை கொன்றுவிடும் என்பதையும் நினைவு படுத்தினார். (முனிவர் ரொம்ப நல்லவர், விதிமுறைகள் சிறிய எழுத்தில் இருக்கு, படிச்சி தெரிந்துகொள் இல்லையேல் பரலோகம் செல் என்று சொல்லவில்லை).

நம்ம ஆளுக்கு இப்போ ஒரு சின்ன சந்தேகம் கூடவே சந்தோஷமும்... ஒரு வேளை கடவுள் இருக்கிறாரோ... கேட்டவுடனே பூதம் கிடைத்து விட்டதே என்று சந்தேகம், பூதத்த வெச்சி கடவுளையும் ஆராய்ச்சி பண்ணிடலாம்ன்னு ஒரு சந்தோஷம்.

தினத் தேவைகளையும் தன் பணத் தேவைகளையும் முடித்து கொண்டபின் நம்ம ஆளுக்கு பூதத்தை வைத்து ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லாததால், இனி கடவுள் ஆராச்சி (ஆத்திகம் / நாத்திகம்) என முடிவு செய்து ஆன்மீகம் பற்றி அந்த தகவலை கொண்டுவா இந்த தகவலை கொண்டுவா என அனுப்பினான். அது அர்த்தமுள்ள இந்து மதம் முதல் ஓசோ வரை பல தகவல் நூல்களை அள்ளிவந்து கொடுத்தது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தை படித்தவுடன் நம்மாளுக்கு சந்தேகம்... இந்த பூதம் வேலைகளுக்கு நடுவில் முனிவரை சந்திக்குதோ, அவர்தான் இந்த நூலை நம்மகிட்ட கொடுக்க சொல்லியிருப்பாரோ என்று. சந்தேகத்தை தெளிவு செய்ய நாத்திகம் பற்றி ஆராய்வது என முடிவு செய்து அந்த தகவல்களை கொண்டுவருமாறு கட்டளையிட்டான் (அது பதிவுலம் தெரிந்த பூதம் போல, ரொம்ப சிரம படாமா வினைவு, தமிழ் ஓவியா போன்ற தளங்களில் இருந்து தகவல்களை நொடிப் பொழுதில் கொண்டுவந்து கொடுத்தது).

நம்ம ஆளூ ஆராய்ச்சிய ஆரம்பிக்கவே இல்லை, ஆனால் பூதம் மீண்டும் அய்யா வேலை என்றது... இப்போதுதான் நம்மாளுக்கு தெரிந்தது அவனிடம் பூத்ததிற்கு சொல்ல ஏதும் வேலையில்லை என்று. பூதம் கொன்றுவிடுமே என்ற பயம் வந்தது, என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு முனிவரின் நினைவுதான் முதலில் வந்தது. மீண்டும் அய்யா வேலை என்ற பூதத்திடம் சொன்னான்... என்னை முனிவரிடம் அழைத்துச்செல் என்று.

முனிவர் கேட்டார், நீ கேட்டதை கொடுத்தேனே இறைவனை பார்த்தாயா?
என்ன கைய புடிச்சி இழுத்தியா? (அய்யோ அய்யோ பதிவ ரொம்ப படிக்காதன்னு சொன்னா கேட்டாதான) என்ன இறைவனை பார்த்தாயா? சாமியாவது பூதமாவாது? இது மனுசன நிம்மதியா இருக்கவிடமாட்டேங்குது, அய்யா வேலை அய்யா வேலைங்குது, எனக்கு இந்த பூதம் வேண்டாம் நீங்களே திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்றான்.

நம்மாளு சாமி இருக்குதோ இல்லையோ... இனி இந்த முனிவர் இல்லை... பூதம் கேட்கிற வேலைக்கு இடையில் இவரு வேதம் படிக்கிறாரா இல்லை பூதத்திற்க்கு சாப்பிட சாதம் போடுறாரான்னு (என்ன ஒரு வில்லத்தனம்) பார்க்கிறேன் என அமைதியாக நின்றான்.

முனிவர் சொன்னார், சரி பூதத்தை பற்றி நீ இனி கவலைகொள்ளத் தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ செல் என்றார்.
அய்யா நான் உங்களுடன் அமர்ந்து கொஞ்சம் தியானம் செய்துவிட்டு போகிறேன் என்றான்.


முனிவரும் சரி அப்படியே ஆகட்டும் என்றார். அதற்க்குள் பூதம் அய்யா வேலை என்றது. முனிவர் சொன்னார், காட்டிற்க்குச் சென்று கழு மரம் செய்ய கூடிய ஒரு நல்ல மரத்தைக் கொண்டுவா என்றார். உடனே கொண்டு வந்தது. சரி அதில் நன்கு விளக்கெண்ணையை தடவு என்றார்... ஆச்சு என்றது பூதம். சரி நான் கூப்பிடும் வரை அதில் ஏறி இறங்கி கொண்டிரு, தேவையிருப்பின் உன்னை அழைக்கிறேன் என்றார். பூதமும் அப்படியே ஆகட்டும் என்று தன் வேலையை பார்க்க போயிற்று… அய்யோ பாவம் பூதம்.


முனிவரோ அமைதியாக வேதங்களை படிக்க ஆரம்பித்து விட்டார்.